Shadow

”பாரதிராஜாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு எனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன்” – ஜிவி பிரகாஷ் குமார்


இசையமைப்பாளர்- நடிகர் எனப் பன்முகம் கொண்ட ஜிவி பிரகாஷ் குமார், தொடர்ந்து நல்ல கதையம்சம் கொண்ட அதேசமயம் தயாரிப்பாளர்களுக்கு லாபம் தரக்கூடிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரின் ‘கள்வன்’ திரைப்படம் ஏப்ரல் 4, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியிடப்பட உள்ளது.

இந்தப் படத்தில் பணிபுரிந்த தனது அனுபவத்தை பகிரும் ஜிவி பிரகாஷ், இயக்குநர் பி.வி. ஷங்கரை இதற்கு முன்பு ஒளிப்பதிவாளராகவும் பார்த்திருக்கிறார். ‘கள்வன்’ படத்தின் ஸ்கிரிப்டை ஷங்கர் சொன்னபோது, ​​ஜிவி பிரகாஷால் காடுகளின் சூழலை தெளிவாகக் கற்பனை செய்து பார்க்க முடிந்தது. ஷங்கர், ஒளிப்பதிவாளராக இருப்பதால், திரைக்கதையுடன் காட்சி நேர்த்தியை திறமையாகக் கலந்து, பார்வையாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான சினிமா அனுபவத்தை கொடுத்துள்ளார். படத்தைப் பார்த்த ஜிவி பிரகாஷ், இந்தத் திரைப்படம் ரசிகர்களுக்கு நிச்சயம் பிடித்த ஒன்றாக இருக்கும் என்று மகிழ்ச்சியும் நம்பிக்கையும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, “‘கள்வன்’ படம் அட்வென்ச்சர், ஆக்ஷன், நகைச்சுவை மற்றும் எமோஷன்களை உள்ளடக்கி பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் கூடிய படமாக இருக்கும் என்று என்னால் உறுதியளிக்க முடியும்,” என்றார்.

இயக்குநர் பாரதிராஜாவுடன் ஜிவி பிரகாஷ் குமார் முதல் முறையாக இணைந்துள்ள படம் இதுவாகும். பல ஆண்டுகளாக பாரதிராஜாவின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பு மற்றும் சினிமா மீதான ஆர்வம் தனக்கு மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் என்கிறார் ஜிவி பிரகாஷ் குமார். மேலும், படக்குழுவினர் அனைவரும் சிறப்பான ஒத்துழைப்பு கொடுத்தனர் என்கிறார்.

கோடை விடுமுறைக்கு ‘கள்வன்’ படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு ஒரு அற்புதமான ட்ரீட் என்று அவர் உறுதியாக நம்புகிறார். தமிழ் திரையுலகிற்கு தனித்துவமான திரைக்கதைகளை ஆதரித்து கொண்டு வருவதற்காக ஆக்சஸ் ஃபிலிம் பேக்டரியின் தயாரிப்பாளர் ஜி டில்லி பாபுவுக்கு ஜிவி பிரகாஷ் தனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறார். அவருடைய கரியரில் ‘கள்வன்’ படம் நிச்சயம் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.