கோமாவில் இருக்கும் தனது தாய் மீள வேண்டுமென்பதற்காக, ஒரு மண்டலத்திற்கு தன் அடையாளத்தையும் கெளரவத்தையும் விட்டு பிச்சையெடுப்பதாக வேண்டுதல் வைக்கிறான் பணக்காரனான அருள். அந்த வேண்டுதல் நிறைவேறியதா இல்லையா என்பதுதான்பிச்சைக்காரனின் கதை.
கஞ்சத்தனத்திற்குத் தனது நடிப்பால் புது இலக்கணம் வகுத்துள்ளார் முத்துராமன். பணத்தைக் கண்டதும் சொக்கித் தூங்குவதும், விரலென்ன உயிரே போனாலும் பைசா தர முடியாதென வாயில் அவராக துணியை அடைத்துக் கொள்வதும் செம காமெடி. முத்துராமனைப் போன்றே, எல்லாப் பாத்திர வடிவமைப்பிலும் இயக்குநர் சசி கவனமாக இருந்து படத்திற்குச் சுவாரசியத்தைக் கூட்டியுள்ளாரென்றே சொல்லவேண்டும். உதாரணம், முத்துராமனின் கார் ஓட்டுநராக வருபவரைச் சொல்லலாம்.
விஜய் ஆண்டனியின் அம்மாவாக தீபா ராமானுஜம் நடித்துள்ளார். உத்தம வில்லனில் பூஜா குமாரின் அம்மாவாகவும், பசங்க -2 இல் பிரின்சிபலாகவும், ரஜினிமுருகனில் சிவகார்த்திகேயன் அம்மாவாக நடித்திருந்தாலும், இந்தப் படத்தில்தான் கவனிக்கப்படுமளவு காட்சிகளில் வருகிறார். நாயகி சாட்னா டைட்டஸ் கூட, ஆடல் பாடலுக்கு என்றில்லாமல் கதையோடு பொருந்தி வருபவராக நடித்துள்ளார். காதலிப்பவன் பிச்சைக்காரனாக இருக்கிறான் என்ற கோபத்தையும் வருத்தத்தையும் மீறி, அவன் மழையில் நனைவானே எனப் பதற்றப்படும் காட்சி பிரமாதமாக உள்ளது.
அம்மா சென்ட்டிமென்ட் என இயக்குநர் சசி கொஞ்சம் பின்னோக்கி நகர்ந்திருந்தாலும், தனது திரைக்கதையால் அதை சாதுரியமாகச் சமாளித்து ரசிக்க வைக்கிறார். படத்தில் நகைச்சுவைக்கும் பஞ்சமில்லை. ‘பட்சே உங்க மனைவி என் காதலி ஆகாது சாரே!’ என பீரையும் சரக்கையும் ஒப்பிட்டுப் பேசும் வசனத்துக்கு திரையரங்கில் பலத்த சிரிப்பொலி எழுகிறது. ‘ரைட்’ ‘லெஃப்ட்’ ஆகும் கதையும், பாதிக்கப்பட்ட லெஃப்ட் தக்க சமயத்தில் எதிர்வினை புரிவதும் போன்ற காட்சிகள் மனித மனத்தின் சொரூபத்தையும் தொட்டுச் செல்கிறது. இத்தகைய கலவையாலே, முழுப் படத்தையும் ரசிக்கும்படி செய்துள்ளார் இயக்குநர் சசி.
தனக்குப் பொருந்தும்படியான கதையைத் தெரிவு செய்வதிலேயே விஜய் ஆண்டனியின் ரகசியம் இருக்கிறது. இம்முறையும் அதை மிகச் சரியாகவே செய்துள்ளார். விஜய் ஆண்டனியின் முகத்தில் இயல்பாகவே தெரியும் தயக்கம், பிச்சையெடுக்க அவர் படும் சிரமங்களோடு கச்சிதமாய் ஒத்துப் போகிறது. பிரசன்னாவின் ஒளிப்பதிவில் விஜய் ஆண்டனி ‘பளீச்’ எனத் தெரிகிறார். காட்சிகளுக்கான ஒளிக் கலவையை அதிகம் கவனம் செலுத்தியுள்ளதால், ஒளிப்பதிவும் கதை சொல்கிறது. ஸ்டன்ட் மாஸ்டர் சக்தி சரவணன், சண்டைக் காட்சிகளை விஜய் ஆண்டனிக்கு ஏற்றாற்போல் அமைத்துள்ளார். சண்டைக் காட்சிகளில் நம்பகத்தன்மையை உருவாக்க படத்தொகுப்பாளர் வீர செந்தில் ராஜும் தன் பங்கைச் செறிவாகச் செய்துள்ளார்.
பிச்சைக்காரர்களும் மனிதர்கள் தான் என்ற போதிலும், பிச்சையெடுப்பதைக் குறித்த எந்த விமர்சனமுமின்றி அவர்களை வியந்தோதியுள்ளார் இயக்குநர் சசி. எனினும் இந்த மண்ணுக்கே உரிய நம்பிக்கைகளில் ஒன்றை எடுத்துக் கொண்டு, அதை நியாயப்படுத்தாமல் உணர்ச்சிபூர்வமான திரைக்கதையாக்கி அசத்தியுள்ளார் இயக்குநர் சசி.