ஆறாண்டுகளுக்கு பிறகு வந்துள்ள எஸ்.பி.ஜனநாதனின் படம். அந்த எதிர்பார்ப்பைத் துளியும் ஏமாற்றாமல் அசத்தியுள்ளார். மக்கள் விடுதலைக்காகப் போராடி இறந்த அனைத்து தோழர்களுக்கும் இப்படத்தைச் சமர்ப்பிக்கிறார்.
பாலுச்சாமி எனும் கம்யூனிஸ்ட்க்கு, தேசத் துரோகக் குற்றத்துக்காக மூன்று தூக்கு தண்டனையை அறிவிக்கிறது இந்திய அரசு. தூக்கு தண்டனையை நிறைவேற்ற, சிறை அதிகாரியான ஏ.டி.ஜி.பி. மெக்காலே ஐ.பி.எஸ். வசம் ஒப்படைக்கப்படுகிறார் பாலுச்சாமி. தீர்ப்பின்படிபாலுச்சாமியைத் தூக்கிலிட, எமலிங்கம் எனும் ஹேங்மேனின் உதவி தேவைப்படுகிறது. எமலிங்கத்தின் உதவி கிடைத்ததா? பாலுச்சாமிக்கு தண்டனையை மெக்காலே நிறைவேற்றினாரா இல்லையா என்பதுதான் கதை.
விறைப்பான காவல்துறை அதிகாரி மெக்காலேவாக ஷாம். மிகப் பொலிவாய், கம்பீரமாய் உள்ளார். சிறைக்குள் எல்லாம் சட்டப்படி நடக்க வேண்டுமென உறுதியாக இருக்கும் நேர்மையான காவல்துறை அதிகாரி. தூக்கு தண்டனையை அதிகப்படுத்த வேண்டுமென நினைக்கும் அதிகாரி. தினம் 20 பேரைத் தூக்கிலிட்டால் 2 வருடத்தில் இந்தியாவில் தீவிரவாதியே இருக்கமாட்டான் என ஆணித்தரமாக நம்புகிறார். ஒருவனைத் தூக்கில் போட அவர் காட்டும் உறுதி, அதாவது தன் கடமையை எப்படியாவது செய்துவிட வேண்டுமென்ற அவர் டெடிகேஷனும் அதற்காக அவர் மெனக்கெடுவதையும் இயக்குநர் அழகாகச் சித்தரித்துள்ளார்.
எமலிங்கமாக விஜய் சேதுபதி கலக்கல். ஜனாதிபதி எலெக்ஷனுக்கு ஏன் நின்றேன் என அவர் சொல்லும் ஒரு காரணம் போதும்! விஜய் சேதுபதி சொன்னதுபோல், இது அவர் வாழ்நாளில் அவர் நடித்த நல்ல கதாப்பாத்திரங்களில் ஒன்றாக இருக்கும். ஆனால் ஆர்யாதான் கதாப்பாத்திரத்துக்குப் பொருந்தாமல் இருக்கிறார். காடு படத்தில் வரும் இயக்குநர் சமுத்திரகனி, இதே போன்ற போராளி கதாப்பாத்திரத்திற்கு மிகக் கச்சிதமாய் பொருந்தியிருப்பபார். பாலுச்சாமி எனும் பாத்திரம் ஆர்யாவால் சுமக்க முடியாத சுமையாகவே தெரிகிறது. மேலும், ஈ படத்தில் இருந்த பசுபதியின் போராட்டம் குறித்த தெளிவு இப்படத்தில் ஆர்யாவின் போராட்டத்துக்கு இல்லாமல் போனது பெரும்குறை. இதற்கே தலைப்பின் பொழுது, மிக முக்கியமான பிரச்சனையைப் பற்றிப் பேசுகிறார் எஸ்.பி.ஜனநாதன். ஆனால் ஆர்யா மக்களுக்காகப் போராடும் கம்யூனிஸ்ட் என்பதையும் தாண்டி சூப்பர் ஹீரோ போன்ற சித்தரிப்பு பாலுச்சாமியை மனதில் பதிய விடாமல் செய்துவிடுகிறது. படம் தீவிர அரசியலைப் பேசாவிட்டாலும், ‘கம்யூனிஸ்ட்’ என்ற சொல் படம் முழுவதும் எதிரொலித்த வண்ணமுள்ளது.
வசனங்கள் ஆங்காங்கே மிகக் கூர்மையாக உள்ளன. செப்பனிடப்பட்ட தூக்கு தண்டனை மேடையைச் சோதிக்கும்போது, “இவ்ளோ திட்டம் தீட்டி ஒருவனை தூக்கில் போடுறீங்களே.. இது கொலை இல்லையா?” என்ற ஆர்யாவின் கேள்வி மிக முக்கியமானது. எமலிங்கம் காதலைச் சொல்லும்போது, தோழர் குயிலியாக நடித்திருக்கும் கார்த்திகா நாயர் சக தோழர்களிடம் சொல்லும் வசனமும் குறிப்பிடத்தக்கது. இவ்வளவு சீரியசான படத்தை, கிண்டல் செய்வதுபோல் உள்ளன பாடல்கள் (இசை அல்ல. காட்சிகளுக்கிடையே வரும் பாடல்கள்). பின்னி மில்ஸை சிறைச்சாலையாக மாற்றி அற்புதம் செய்துள்ளார் கலை இயக்குநர் வி.செல்வகுமார்.
‘ஜெயிலே ஒரு அறிவியல்கூடம்’ எனச் சொல்லும் எஸ்.பி.ஜனநாதன்.. ஒரு காட்சியில், ஃப்ளாட்ஃபார்மில் படுத்திருந்த அப்பாவி ஒருவருக்குக் கிடைத்த தண்டனையைச் சுட்டிக் காட்டி அதிகார வர்க்கத்தையும், நீதித்துறையையும் ஒரே நேரத்தில் கழுவில் ஏற்றியுள்ளார்.