Shadow

போக்கிரி ராஜா விமர்சனம்

Pokkiri Raja Vimarsanam

‘குழந்தைகளை மனதில் வைத்துக் கொண்டு எடுக்கப்பட்டதொரு ஜாலியான முயற்சி இந்தப் படம்’ என்கிறார் படத்தைப் பற்றி இயக்குநர் ராம்பிரகாஷ் ராயப்பா. தாதாவான கூலிங் கிளாஸ் குணாவிற்கும், கொட்டாவி விட்டுக் கொண்டே இருக்கும் சஞ்சீவிக்கும் நடக்கும் ஆடு புலி ஆட்டம்தான் போக்கிரி ராஜா படத்தின் கதை.

யாமிருக்க பயமே படத்திற்குப் பிறகே பார்வையாளர்கள் மத்தியில் யோகிபாபு ஒரு சோலோ காமெடியனாக மனதில் பதிந்துவிட்டார். வடிவேலுவிற்குப் பிறகு, திரையில் பார்த்ததுமே மக்கள் சிரிக்கத் தொடங்குவது, யோகிபாபுவைப் பார்த்துத்தான். “எனக்கே விபூதி அடிக்கிறாயா?” என்று காக்கா முட்டையில் அவர் பேசும் வசனம் மிகவும் பிரபலமானது. இந்தப் படத்திலும் யோகிபாபு மனோபாலாவைப் பார்த்து, “பாம்பு மாத்திர, என்னாத்துக்கு நீ ஏமாத்துற?” என்ற அவர் கலாய்க்கும் போது திரையரங்கில் சிரிப்பொலி எழுகிறது. ஜீவாவையும், ஹன்சிகாவையும் சிபிராஜிடம் கோர்த்து விடும் காட்சியிலும் அசத்தியுள்ளார் யோகிபாபு. இப்படத்தில் அவரது பெயர் மோஜோ; மோஜோ ஒரு சாஃப்ட்வேர் இன்ஜினியர்.

இப்படத்தில், கொட்டாவி விடுவதும் ஹன்சிகாவைக் காதலிப்பதும் மட்டுமே ஜீவாவின் வேலை. ஹன்சிகாவிற்கும் சமூகச் சேவை செய்வதும், ஜீவாவைக் காதலிப்பதும்தான் வேலை. ‘நீங்க நிறுத்துங்க; நாங்க நிறுத்துறோம்’ என்ற சமூகச் சேவை ரசிக்க வைத்தாலும், மயில்சாமி சொல்வது போல் பொதுக் கழிப்படத்தின் நிலைமை கவனிப்பாரின்றி பரிதாபமாக இருக்கும்பட்சத்தில், பொது இடத்தில் சிறுநீர் கழிப்பதை எப்படித் தடுக்க இயலுமென யோசனையாகவே இருக்குறது.

படத்தின் நாயகன் சிபிராஜ். போக்கிரி ராஜா என்ற தலைப்பும் அவருக்கே பொருந்தும். சிபிராஜ் திரையில் தோன்றி நடந்தாலே, இமான் குதூகலமாகி பின்னணி இசையில் பட்டையைக் கிளப்புகிறார். சிபிராஜ் உட்காரும் பொழுதோ, வசனம் பேசும் பொழுதோ தான் இமான் கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கிறார். கூலிங் கிளாஸ் குணாவாக சிபிராஜ் கலக்கியுள்ளார். அவருக்கு உறுதுணையாக வரும் முனீசு (முண்டாசுப்பட்டி முனீஸ்காந்த்), சிபிராஜுடன் இணைந்து அதகளம் புரிந்துள்ளார். ஆஞ்சியின் வண்னமயமான ஒளிப்பதிவில் பாடல்கள் தனித்து மிளிர்கின்றன.

தமிழுக்கு எண் 1- ஐ அழுத்தவும் பட இயக்குநரின் படைப்பிது என்று யூகிக்க முடியாத அளவிற்கு மாறுபட்ட ஜானரை முயற்சி செய்துள்ளார் ராம்பிரகாஷ் ராயப்பா. படத்தில் கிளைக்கதையாக வரும் அதியன் ஓரியின் கதையும், கிராஃபிக்ஸும் அருமையாக உள்ளது. ஆனால், மருத்துவர் ஒருவர் வரலாற்றாசிரியர் போல் தோண்டித் துருவி எப்படித்தான் அந்த வரலாற்றைக் கண்டுபிடித்தாரோ? இப்படியாக லாஜிக் பார்க்காமல், பொழுதினைப் போக்க நல்ல ஜாலியானதொரு படம்.