Shadow

மங்காத்தா விமர்சனம்

Mangatha

மங்காத்தா – வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் அஜீத்தின் 50வது படம் என்ற ஒன்றே படத்தின் எதிர்பார்ப்பை தாறுமாறாக எகிற செய்தது. அந்த எதிர்ப்பார்ப்பை வீண் செய்யாமல் படு அமர்க்களமாய் திரையரங்கைக் கலக்கி வருகிறது மங்காத்தா.

தற்காலிக வேலை நீக்கத்தில் உள்ள காவல் துறை அதிகாரி விநாயக், கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு வரும் ஆறுமுக செட்டியாரிடமிருந்து பெரும் தொகையை கொள்ளையடிக்க திட்டமிடுகிறார். அதே திட்டத்துடன் இருக்கும் நான்கு இளைஞர்களுடன் கூட்டு சேர்ந்து, ஆறுமுக செட்டியாரிடமிருந்து கொள்ளையடிக்கிறார். கொள்ளையடித்த பணம் கொள்ளையர்களைச் சுற்றலில் விடுகிறது. இறுதியாக பணம் யார் கையில் சேர்ந்தது என்பதுடன் படம் நிறைவுறுகிறது.

விநாயக் மகாதேவனாக அஜித். தமிழ்த் திரையுலகம் கண்டெடுத்த நாயகனுக்குரிய இலக்கணத்தைத் தூக்கிப் போட்டு மிதித்து துவம்சம் பண்ணி விட்டார் தல. அசல் நாயகன் என அஜீத் ரசிகர்கள் மார் தட்டிக் கொள்ளலாம். தான் வாழ பிறரை பயன்படுத்திக் கொள்ளலாம்; ஆனால் அதன் பலனை பிறரை அனுபவிக்க விட்டு விடக் கூடாது என்று நினைக்கும் எதிர்மறை பாத்திரத்தில் தைரியமாக நடித்துள்ளார். இது வரவேற்கத் தக்க ஒன்றெனினும் மாற்று கதைக் களங்களைத் தெரிவு செய்தால் மேலும் நன்றாக இருக்கும்.

சஞ்சனா ஆறுமுகமாக த்ரிஷா. ஆணாதிக்க சமூகத்தில் பெண்கள் எப்படி வஞ்சிக்கப்படுகின்றனர் என்பதை இவரது பாத்திரம் சித்தரிக்கிறது. அவருக்கே தான் மங்காத்தா படத்தின் நாயகி தானா என்ற சந்தேகம் எழுந்திருக்கும். ஏனெனில் பிரதான நாயகிக்குரிய ஆடல் பாடலை தட்டி செல்பவர் லட்சுமி ராய்.

ஆறுமுக செட்டியாராக ஜெயபிரகாஷ். கிரிக்கெட் சூதாடியாக வந்தாலும், நல்லத் தந்தையாக திரையில் தோன்றும் தன் வழக்கத்திற்கு பங்கம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறார்.

கிரிக்கெட் சூதாட்டத்தை வேர் களையும் காவல் துறை அதிகாரி பிருத்விராஜாக அர்ஜூன். ‘யானை வரும் பின்னே, மணியோசை வரும் முன்னே’ என்பது போல் கருப்பு நிற ஹோன்டா கார் திரையில் பிரேக் பிடித்து சுழன்று நின்றால் அர்ஜுன் அதிரடிக்கு தயாராகி விட்டார் என அர்த்தம். வெடிகுண்டு வைக்க வரும் தீவிரவாதிகளை சுட்டே பழக்கப்பட்டவர் என்பதாலோ என்னமோ, சூதாட்டத்தை ஒழிக்கிறேன் பேர்வழி என்று காரில் இருந்து இறங்கும் முன்பே சுட ஆரம்பிக்கிறார். அதிகாரத்தின் முன்பே மலிவாய் சாய்கிறது உயிர்கள். பிருத்விராஜின் மனைவி சபீதாவாக ஆன்ட்ரியா அழுது, புன்னகைக்க.

ஐ.ஐ.டி. மாணவராக பிரேம்ஜி அமரன். கண்ணாடி, குறுந்தாடி, ‘ஸ்டிக்கர்’ ஒட்டிய மடி கணினி என ஐ.ஐ.டி.யில் படித்தவர்களுக்கு என பிரேம்ஜி மூலம் பிரத்யேக உருவமளித்துள்ளனர். ஆய்வாளராக வரும் அஷ்வின், கூட்டு சேர்ந்துக் கொள்ளையடிக்கும் நண்பர்களிடம் உண்மையாக இருந்ததன் பயனை அனுபவிக்கிறார். அஞ்சலியைக் காதலித்து மணக்கும் வைபவ், நண்பனைக் கொன்று பணத்தை அபகரிக்க நினைக்கும் மஹத் ராகவேந்திரா, தன்னில் நம்பிக்கைக் கொண்ட சோனாவாக வரும் லட்சுமி ராய் என அனைத்து பாத்திரங்களும் பணம் படுத்தும் பாட்டினை வலியுறுத்துகிறார்கள்.

‘நடிகர்கள் படத்தின் ஒரு சாதாரணப் பகுதி தான். ஒளிப்பதிவும் தொகுப்பும் இயக்கமும் தான் ஒரு நடிகனின் பங்கை சிறப்பாக வெளிக்கொணரும்’ என்றார் ஹிட்ச்காக். அதே போலவே யுவனின் ஒலிப்பதிவும், சக்தி சரவணனின் ஒளிப்பதிவும், வெங்கட் பிரபுவின் இயக்கமும் அஜித்தை முன்னிறுத்தி சுழல்கின்றன. உள்ளே வெளியே என இரு பாத்திரங்களைக் கொண்டு, கள்ளன் பெருசா காப்பான் பெருசா என்ற பழமொழிக்கு விடை சொல்லியுள்ளார் இயக்குனர். சூதை விட சூதுப் பணத்தைக் காப்பதின் அவசியத்தை உணர்த்துகிறது படம்.

ஒரு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து அதே பாணி படங்கள் வருவது சாதாரணமானது. இப்படத்தில் அஜீத் ஏற்றிருந்த வேடத்தைப் பிரதி எடுத்து இனி வரிசையாக படங்கள் வரும் என ஊகிக்கலாம். அப்படி வந்தால் அது வரவேற்கத்தக்க முயற்சிகள் அன்று.

மங்காத்தாவலிவுள்ள சகுனிக்கள் வெல்வர்.

Leave a Reply