Shadow

மலாலா என் ஜானி மன்!

மலாலாக்கு நோபல் பரிசு அறிவித்த நாளன்று மனதுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் மலாலா அமெரிக்கக் கைக்கூலி என பரவலான நம்பிக்கை ஒன்று நிலவி வருகிறது. ஊடகம் உயர்த்திப் பேசுமளவுக்கு மலாலா ஒன்றும் சாதிக்கவில்லை என்பது சிலரின் எண்ணம். உண்மை என்னவென்றால், மலாலா தாலிபானால் சுடப்படுவதற்கு முன்பே.. 2011 இல் பாகிஸ்தான் அரசின் தேசிய அமைதிப் பரிசைப் பெற்றவர். கூடவே, பாகிஸ்தான் அரசின் முதல் அமைதிப் பரிசைப் பெற்றவர் என்ற புகழும் மலாலாவுக்கே!

அதன் பின் ஒன்பது மாதங்கள் கழித்தே மலாலா தாலிபானால் சுடப்படுகிறார். சுட்டதுக்குப் பொறுப்பும் எடுத்துக் கொண்டது தாலிபான். “மதச்சார்பின்மையை பரப்புவதில் முன்னோடியாக இருந்ததால்தான் மலாலா குறிவைக்கப்பட்டாள்” என எஹசுனுல்லா எஹஸான் என்ற TTP-இன் செய்தித் தொடர்பாளர் அதிகாரப்பூர்வ அறிக்கை விடுத்துள்ளார்.

நான் மலாலா(காலச்சுவடு பதிப்பகம் – தமிழில்: பத்மஜா நாராயணன் –  303 பக்கங்கள் – 275/-)

மலாலா தன் குடும்பத்தைப் பற்றியும், பாஷ்டூனிய இனத்தைப் பற்றியும், தன் அப்பா கஷ்டப்பட்டு பள்ளி தொடங்க பிரயத்தனப்பட்டதைப் பற்றியும் சிறுமிக்கே உரிய உற்சாகத்துடன் சொல்கிறார். சபீனா எனும் சிறு பெண்ணிடம் திருடி கையும் களவுமாக தன் அம்மாவிடம் சிக்குவது, தம்பிகளுடன் சண்டையிடுவது போன்ற குறும்புத்தனத்தனங்களைப் பற்றியெல்லாம் பகிர்ந்து கொண்டாலும் பாகிஸ்தானின் அரசியலையும் வரலாறையும் இடையிடையே சொல்கிறார். பாகிஸ்தான் பிரதமரை புட்டோவைக் கொன்று இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைப் பிடித்த ஜியா வுல் ஹக்கை வெளுத்து வாங்குகிறார் மலாலா. பாகிஸ்தானை ‘இஸ்லாமின் கோட்டை’யாகச் சித்தரிக்க விரும்பி முல்லாக்களுக்கு அதிகாரத்தை அதிகரித்து, மதராஸாக்களை சகட்டுமேனிக்கு உருவாக்கி, இஸ்லாமியச் சட்டத்தைக் கொண்டு வருகிறார் ஜியா. அதனால் பல பெண்கள் பாதிக்கப்பட்டு சோரம் போனவர்களாக சிறையில் அடைக்கப்படுகின்றனர். எல்லாப் போர்களிலும் பாகிஸ்தானே வென்றதாக பாடப்புத்தகங்களில் வரலாறைத் திரித்தல், இந்தியர்கள்தான் முதல் எதிரியென பாகிஸ்தானியரின் மனதில் பதிய வைத்தல் என ஜியாவின் வில்லத்தனங்களை எல்லாம் பட்டியலிடுகிறார். ஜியா ஆட்சியில்தான் ஜிகாத் ஆறாவது கடமையாகப் போதிக்கப்பட்டது எனச் சொல்லும் மலாலா, சி.ஐ.ஏ. தான் நாத்திகர்களான ரஷ்யர்களுக்கு எதிராக மக்களை ஜிகாதிகளாக மாற்றியது என்பதையும் சுட்டிக் காட்டுகிறார். எதிரிக்கு எதிரி நண்பன் என்ற முறையில் நட்பு பாராட்டிய அமெரிக்காவின் சார்பையும் சொல்கிறார்.

வயதுக்கு மீறிய அரசியல் பார்வைகளையும் விமர்சனங்களையும் முன் வைக்கிறார் மலாலா. அவரது எண்ணமா அல்லது அவரது தந்தையின் எண்ணமா என சில இடங்களில் சந்தேகமாக உள்ளது. ஆனால் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு சிந்தாமல் சிதறாமல் அரசியல் பேசியுள்ளனர் மலாலாவும் அவரது தந்தையும். பதினோறாம் நூற்றாண்டுக்கு முன் 500 வருடங்கள் பெளத்தர்களாக இருந்தவர்கள், சுல்தான் முகமது கஜினியின் படையெடுப்பால்தான் முஸ்லிம்களாக மாறினோம் எனச் சொல்கிறார் மலாலா. ஸ்வாட் நதியின் கரையில் 1400 புத்த மடங்கள் இருந்ததாம். சிரிக்கும் புத்தர் சிலையின் கீழ் உல்லாசப் பயணம் செய்வது மிகவும் குதூகலமான விஷயமாக இருக்கும் என்கிறார். ஸ்வாட்டைப் பற்றிய மலாலாவின் வர்ணனைகளப் படிக்க நேர்ந்தால், ஒருமுறையேணும் ஸ்வாட்டுக்கு சுற்றுலா செல்லும் ஆசை உங்களுக்கும் எழும்.

Beautiful Swat

ஸ்வாட் எனும் பூலோகச் சொர்க்கம், பாகிஸ்தானின் வட மேற்கில் ஆஃப்கானிஸ்தான் எல்லை அருகே இருக்கிறது. அமெரிக்கா ஆஃப்கானிஸ்தான் மீது போர் தொடுத்தபோது, தாலிபான்கள் ஸ்வாட் பள்ளத்தாக்குகளில்தான் தஞ்சம் புகுகின்றனர். அவர்களின் தலைவர் 28 வயதான மெளலானா ஃபசுலுல்லா. அவருக்கு இன்னொரு பெயரும் இருக்கிறது. ரேடியோ முல்லா என்பதே அந்தப் பெயர். ‘முல்லா எஃப்.எம்.’ என ஒன்றைத் தொடங்குகிறார். ஸ்வாட்டின் விதி அன்றிலிருந்து மாற்றி எழுதப்படுகிறது. பள்ளத்தாக்குகளில் புற்று நோய் போல் மெல்லப் பரவத் தொடங்குகிறது தாலிபானிசம். வெளியில் இருந்து வந்து மதத்தின் பெயரால் அனைவரையும் ஆட்டுவிக்கும் சக்தியாக வளருகிறார் ஃபசுலுல்லா. அவரது வளர்ச்சி எந்தளவுக்கு என்றால், டிசம்பர் 2014-இல் பேஷாவரில் 132 பள்ளி மாணவர்களைக் கொல்லும் அளவுக்கு. அவரை வளர்த்துவிட்ட ஒவ்வொருவரும் அதற்காக இரத்தக் கண்ணீர் வடிப்பது மட்டும் உறுதி. மக்களின் அறியாமையை நன்கு பயன்படுத்தி ‘ஹடித்’தையும் ‘குரானை’யும் மாற்றி உபதேசித்தே மக்களை ஆட்கொண்டார்.

“ஆண்களே! கொஞ்சம் வெளியில் செல்லுங்கள். நான் இப்பொழுது பெண்களிடம் பேசப் போகிறேன்” என எஃப்.எம்.மில் முழங்கும் முல்லா, பள்ளியை விட்ட நின்ற பெண்களின் பெயரைக் கூறி வாழ்த்தி, அவள் கண்டிப்பாக சொர்க்கத்திற்குச் செல்வாள் எனப் புகழ்வாராம். பள்ளிக்குச் செல்லும் பெண்கள் ஆட்டு மந்தைகள், எருமைகள் என விளிப்பாராம். முல்லா எஃப்.எம். என்ற அத்தியாயமும் அதன் தொடர்ச்சியாக வரும் அத்தியாயமும் இப்படி பல அதிர்ச்சிகளைக் கொண்டுள்ளது. யாரும் தொலைக்காட்சி உபயோகிக்கக் கூடாதென உத்தரவிட்டதுடன், வீட்டுக்குள் புகுந்து சோதனை செய்து தொலைக்காட்சிகளை உடைப்பார்களாம் தாலிபான்கள்.

ஃபசுலுல்லா

பாகிஸ்தான் இராணுவத்துக்கும் தாலிபானுக்கும் போர் நடப்பதால் ஊரை விட்டு மக்களை காலி செய்யச் சொல்கிறார்கள். போர் முடிந்தால், தாலிபான்களிடம் இருந்து விடுதலை கிடைக்குமென சொந்த மண்ணை விட்டுப் பிரிகின்றனர் மக்கள். அதிகாரமும் அடிப்படைவாதமும் ஏதோ ஒரு புள்ளியில் ஒன்றிணைவதால், தாலிபான்களை முற்றிலும் அழிக்காமல் தலைமறைவாக வாழ விடுகிறது பாகிஸ்தான் இராணுவம். அந்தப் போரே, பயங்கரவாதத்தை ஒழிக்க பாகிஸ்தான் அரசு அமெரிக்காவிடம் வாங்கிய பணத்திற்கு கணக்கு காட்ட நடத்தப்பட்ட ‘டம்மி’ போர்தான்.

ஒரு பக்கம் மலாலா பெண்களின் கல்விக்காக தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறார்; அதனால் சர்வதேச வெளிச்சமும் புகழும் கிடைக்கிறது. இன்னொரு பக்கம் தாலிபான், பெண்கள் பள்ளிகளை குண்டு வைத்துத் தகர்க்கின்றனர். விடாப்பிடியாக பள்ளி நடத்தி வரும் மலாலாவின் அப்பாவை எப்படியும் தாலிபான்கள் கொன்று விடுவார்கள் என பயம் பரவும்போது, மலாலாவைச் சுட்டு விடுகின்றனர். ஒரு பள்ளி மாணவியை தாலிபான் சுடாது என்ற மக்களின் நம்பிக்கை பொய்க்கிறது.

சுடும் பொழுது மலாலா குனிந்ததால், தலையில் தாக்கிய குண்டு மூளையைத் தாக்காமல் நழுவி இடது தோள் எலும்பின் அருகே வந்துவிடுகிறது. உள்ளூர் மருத்துவமனையில், ஸ்கேன் எடுத்துப் பார்க்கும் மருத்துவர்கள் குண்டு தலையில் உரசி மட்டும் சென்றதாகச் சொல்லுகின்றனர். ஆனால் பேஷாவர் மருத்துவமனையில், எலும்பு உடைந்து அதன் துகள் மூளையில் பட்டதால் மூளை வீங்குவதாகக் கண்டுபிடிக்கின்றனர். மலாலாக்கு நடந்த சிகிச்சைகளைப் பற்றிப் படிக்கும்போது நவீன மருத்துவத்தின் மகத்துவத்தை எண்ணி வியக்காமல் இருக்க முடியவில்லை. எமனிடம் போராடி உயிரை மீட்பதென்றால் என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

நிலைமை மோசமானதால், பேஷாவரிலிருந்து ராவல்பிண்டி மருத்துவமனைக்கு மீண்டும் மாற்றப்படுகிறார் மலாலா. இவையனைத்தையும் செய்வது பாகிஸ்தான் இராணுவம். மலாலாவின் பெற்றோர்களை யாரும் பொருட்படுத்தவே இல்லை. மலாலாவுக்கு சர்வதேச அளவில் ஆதரவு பெருகிவிடுவதால், மலாலா அரசியல் பகடையாகி விடுகிறார். அப்படி நடந்ததும் நல்லதுக்குத்தான்.. இல்லையெனில் இத்தகைய சிக்கலான சிகிச்சைகளை அவரது குடும்பத்தாரால் செய்திருக்க இயலாது என்றே தோன்றுகிறது. ராவல்பிண்டி மருத்துவமனையிலும் போதிய வசதிகள் இல்லாததால், மலாலாவை இங்கிலாந்து அழைத்துச் செல்ல முடிவெடுக்கிறது பாகிஸ்தான் அரசு. UAEவின் அரசக் குடும்பம் தன் சொந்த விமானத்தை உபயோகிக்க அனுமதியளித்து உதவுகின்றனர். மலாலாவின் பெற்றோர் பாகிஸ்தானிலேயே இருக்க, பிர்மிங்ஹாமில் மலாலாக்கு சிகிச்சை தொடரப்பட்டது. மகளைப் பிரிந்து வாடிய அந்தப் பெற்றோரின் அப்போதைய மன நிலையை நினைத்தாலே மனம் பதறுகிறது!

பத்மஜா நாராயணன்

இந்தப் புத்தகம் ஏன் மிக முக்கியமானதென புத்தக வெளியீட்டு விழாவின்போது சுட்டிக் காட்டினார் எழுத்தாளர் சல்மா. “ஒரு பெண்ணை பள்ளியில் சேர்க்க என் வீட்டிலேயே ரொம்ப போராட வேண்டியதாக உள்ளது. இது எங்கோ ஸ்வாட்டில் வாழும் முஸ்லிம் பெண்களின் நிலை மட்டும் அன்று. உலகெங்கும் உள்ள முஸ்லிம் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டு, அவர்கள் மீது ஏவப்படும் வன்முறை இது. சமீபமாக தமிழ்நாட்டிலும் இத்தகைய போக்கு தலை தூக்கி உள்ளது. மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிக்குச் சென்று திரும்பும் இளைஞர்கள் வஹாபிசத்தால் ஈர்க்கப்பட்டு பெண் குழந்தையின் கல்விக்கு எதிராக உள்ளனர். இது நாம் அனைவரும் இணைந்து போராட வேண்டிய ஒன்று. மலாலாக்கு இந்த நேரத்தில் நோபல் பரிசு கிடைத்தது மிக மகிழ்ச்சியாக உள்ளது. இதனால் பெண்களின் கல்விக்கான அவசியத்தை வலியுறுத்திப் பேச ஒரு வாய்ப்புக் கிடைத்துள்ளது” என்று பொருள்படும்படி சல்மா கூறினார். பத்மஜா, கவிஞர் என்பதை மொழிபெயர்ப்பில் இருந்தே தெரிந்து கொள்ளலாம். எளிமையும் அழகும் மிக்க அருமையான நடையில் மொழிபெயர்த்துள்ளார் பத்மஜா.

மலாலா, தன் புத்தகம் முழுவதும் வியந்து பாராட்டுவது தன் தந்தையையும் அவர் தனக்களித்த சுதந்திரத்தையுமே.! “இப்படியொரு அப்பா அனைவருக்கும் கிடைத்துவிட்டால்.. எந்தப் பிரச்சனையுமே இல்லை” எனச் சொன்ன சல்மா, “பத்மஜாவின் மொழிபெயர்ப்பு என்னை ஆச்சரியப்படுத்தியது. ஒரு மொழிபெயர்ப்புப் புத்தகம் படிக்கிறோம் என்ற எண்ணமே எழாமல், படிக்க மிக எளிமையாக உள்ளது. ஓரிடத்திலும் எனக்கு எந்தச் சந்தேகமும் வராததால், எங்கயும் நிறுத்த வேண்டிய அவசியமில்லாமல் மலாலா சொல்வதைப் புரிந்து கொள்ள முடிந்தது” எனப் புகழ்ந்தார்.

சுனி, ஷியா பிரிவு முஸ்லிம்களுக்குள்ள வேறுபாடு, பெண் குழந்தைகளின் பால்ய விவாகம், பெண்கள் மீதான வன்முறை, இஸ்லாமியச் சட்டத்தைத் தளர்த்து பெண்கள் முன்னேற்றத்துக்கு முதன்முதலில் வித்திட்டவர் முஷாரஃப், பெனாஸீரை பாகிஸ்தானுக்குள் வரவழைக்க அமெரிக்கா முஷாரஃப்க்குக் கொடுத்த அழுத்தம், பாகிஸ்தானின் துணையின்றி தன்னிச்சையாக அமெரிக்கா நடு இரவில் புகுந்து ஓஸாமா பின்லேடனைக் கொன்றது, அதனால் பாகிஸ்தானின் முதன்மை எதிரியாக அமெரிக்கா மாறியது என ‘நான் மலாலா’ புத்தகம் நிறைய நுண்ணிய தகவல்களைத் தருகிறது.

ஆனால்.. ஒன்றை மட்டும் ஜீரணிக்கவே முடியவில்லை.

அது மலாலாவுக்கு படிப்பின் மேலுள்ள காதல். போரினால் IDP (Internally Displaced Person) ஆக ஊரை விட்டு நிராதரவாய்ப் போகும் பொழுதும் புத்தகப் பையை எடுத்துப் போகணும் என அடம்பிடிக்கிறார். இது கூட பரவாயில்லை. 10 சதவிகிதமே குணமடைந்து புன்னகைக்க கூட முடியாத நிலையில், பிர்மிங்ஹாமில் இருந்து பாகிஸ்தானிலுள்ள பெற்றோரிடம், “தயவு செய்து என் புத்தகப் பையை எடுத்து வாருங்கள். ஏனெனில் எனக்கு மார்ச் மாதத்தில் தேர்வுகள் உள்ளன. என் வகுப்பில் முதலாவதாக வரவேண்டும். ஸ்வாட்டுக்குச் சென்று கொண்டுவர முடியாவிட்டால் பரவாயில்லை. புது புத்தகங்கள் வாங்கிக் கொண்டு வாருங்கள்” என தொலைபேசியில் கூறுகிறார் மலாலா.

யிய்யீயீ..

ஒருவேளை கட்டற்ற சுதந்திரத்தை அனுபவித்து வருவதால் எனக்கு மலாலாவின் கல்வி மீதான காதல் கேலியாகத் தெரிகிறதோ என்னவோ!!

– தினேஷ் ராம்

(TTP – Tehrik-i-Taliban Pakistan; ஜானி மன் – பெர்சிய மொழியில் ‘ஆத்ம தோழமையே’ என்று அர்த்தம்)