Shadow

மான் கராத்தே விமர்சனம்

Maan Karate review

ஆபத்து சூழும்பொழுது, அவ்விடத்தை விட்டு மான் போல் துள்ளிக் குதித்தோடித் தப்பிக்கும் கலைக்குத்தான், ‘மான் கராத்தே’ என்று பெயர். ஆனால் போட்டி சண்டை என வந்துவிட்டால், தாங்கள் எதற்கும் சளைத்தவர்களில்லை என மான்கள் முரட்டுத்தனமாக தங்களுக்குள் முட்டி மோதிக் கொள்ளும். முக்கியமாக பெண் மானிற்கான போட்டியில். படத்தின் தலைப்பிற்கு நியாயம் செய்துள்ளனரா என்றால், இல்லை என்றே சொல்ல வேண்டும்.

சித்தர் அளிக்கும் எதிர்காலத்தைச் சொல்லும் செய்தித்தாளிலிருந்து படம் ஜோராய் ஆரம்பிக்கிறது. பின் பலமுறை பார்த்துச் சலித்த வழக்கமான வட்டத்திற்குள் உழலத் தொடங்கி விடுகிறது. அதுவும் சுவாரசியமின்றி. வெட்டியாய்ச் சுற்றித் திரியும் பீட்டருக்கு, வெண்ணெயால் செய்தது போலிருக்கும் யாழினி மீது காதல் வந்துவிடுகிறது. தானொரு பாக்ஸர் என பீட்டர் விட்டு யாழினியையும் காதலிக்க வைத்துவிடுகிறான். காதலுக்காக, பீட்டர் சொன்ன பொய் அவனை எங்கு கொண்டு போய்விடுகிறது என்பதுதான் படத்தின் கதை.

ராயபுரம் பீட்டராக சிவகார்த்திகேயன். நடிப்பில் மெருகு கூடியிருந்தாலும், படத்தில் அவரது கதாபாத்திரம் ஏகத்திற்கு ஏமாற்றுகிறது. யாழினிக்கு உண்மை தெரிந்தால் மனமொடிந்து விடுவாளென, காதலுக்காக பாக்ஸிங்குக்குப் போகிறான் பீட்டர். யாழினியோ உண்மையைத் தெரிந்து கொண்டு, சண்டையிட வேண்டாமெனச் சொல்லுகிறாள். ஆனால் பீட்டர் தியாகி ரேஞ்சுக்கு ரியாக்ஷன் தந்துவிட்டு, உதை வாங்கப் போகிறான். காதலியும் முக்கியமில்லை, உயிரும் முக்கியமில்லை என்ற நாயகனின் முட்டாள்தனத்தையும் பிடிவாதத்தையும் என்னவென்று சொல்வது? வழக்கம்போல் வெள்ளையாக இருப்பதால் காதலிக்கப்படும் கதாபாத்திரத்தில் ஹன்சிகா மோத்வாணி. சதீஷும் அவரது நான்கு நண்பர்களும் மட்டுமே படத்தில் கொஞ்சம் ஆறுதல் அளிக்கின்றனர்.

படத்தில் பரிதாபத்திற்குரிய கதாபாத்திரங்கள் நிறைய பேர் நடித்துள்ளனர். அதில் மூவரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அதில் முதலிடம் வகிப்பது தமிழாசிரியராக வரும் ஷாயாஜி ஷிண்டே. இரண்டாவது நபர் பாக்ஸிங் கோச்சாக வரும் எழுத்தாளர் ஷாஜி. இறுதிக் காட்சியில் நாயகனுக்கு தைரியமும் நம்பிக்கையும் அளிக்கும் கோச்சின் வசனங்களில் கூட கடும் வறட்சி. மூன்றாவது நபர் பாக்ஸிங் சேம்பியனான வம்சி கிருஷ்ணா. கதைப்படி(!?) படத்தில் வில்லன் இல்லை. முதல்பாதியிலேயே நாயகியும், நாயகனது காதலை அப்ரூவ் செய்து விடுகிறார். இரண்டாம் பாதியில் நாயகனுக்கு வேலையில்லாமல் போய் விடுமோ என்று, அவசர அவசரமாக வம்சி கிருஷ்ணாவைக் கெட்டவன் ஆக்குகின்றனர்.

இறுதி போட்டியில், வம்சி கிருஷ்ணாவும் சிவகார்த்திகேயனும் மோதுகின்றனர். எண்பதுகளில் தமிழ்ப்பட நாயகனுக்கு கோபம் வர வைக்க வேண்டுமெனில், அவனுக்கு மிகவும் வேண்டியவர்களை ஓர் அறையாவது அறைந்து ஒரு துளி ரத்தத்தைக் காண்பித்து விட்டால் போதும். பின் எத்தனை பேர் வந்தாலும் நாயகன் தூக்கிப் போட்டு மிதிப்பார். இப்படத்திலோ, பாக்ஸிங்கின் அரிச்சுவடியே தெரியாத சிவகார்த்திகேயன் வம்சி கிருஷ்ணாவை வீழ்த்த வேண்டும். அதற்கு நாயகனுக்குள் வீரம் பொங்கி பிரவாகிக்க வேண்டும். எப்படி? அங்குதான் இயக்குநர் படத்தில் ‘ட்விஸ்ட்’ வைத்துள்ளார்.

அந்த ட்விஸ்ட்டைக் கூடப் பொறுத்துக் கொள்ளலாம். நாயகன் தனது வெற்றிக்குக் காரணம், ‘தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும்’ என்ற திருக்குறளைச் சொல்கிறான். “என் முகத்திற்கெல்லாம் காதலி கிடைக்கிறதே பெரிய விஷயம். அதுவும் வெண்ணெயை உருட்டி வச்ச யாழினி போல பொண்ணு கிடைக்குமா? என் காதலுக்காக.. போட்டியில் இருந்து விலகிடுங்க” என கண்ணீர் மல்க வம்சி கிருஷ்ணா காலைப் பிடித்து கெஞ்சோ கெஞ்சு என கதறுகிறார் சிவகார்த்திகேயன். அடடா.. விழுந்து புரண்டு அழுது, என்ன ஒரு மெய் வருத்தம்!?

சில இடங்களில் சிக்கிக் கொள்ளும் பொழுது அடி பலமாகத்தான் பட்டுவிடுகிறது. கொஞ்சம் சுதாரிப்பும், மான் கராத்தே பரீட்சயமும் இருந்தால் தப்பித்துக் கொள்ளலாம்.