Shadow

முகமூடி விமர்சனம்

mugamoodi
மிஷ்கின் தானொரு தமிழ்ப் பட இயக்குனர் தான் என்பதை ஆணித்தரமாக நிருபித்து விட்டார். மந்திரிக்கப்பட்டது போல நேர்க்கோட்டில் ஒவ்வொருவராக விறைப்பாக சென்று நாயகனிடம் உதை வாங்காமல், கும்பலாக ஓடிச் சென்று நாயகனிடம் உதைப்படுகின்றனர். தன் காதலுக்காக முகமூடி அணியும் நாயகன் மேல் கொலை பழி விழுகிறது. காவல்துறையினரிடம் தப்பிக்க முகமூடியைக் கழட்டாமல் இருக்கிறான். இது தெரியாமல் புரியாமல், வர்றவர் போறவரெல்லாம், “நீ செத்தாலும், முகமூடி சாவக்கூடாது” என நாயகனை ஊரைக் காப்பாற்ற வந்த சூப்பர் ஹீரோ(!?) என்று முடிவு கட்டி ஏற்றி விடுகிறார்கள்.

நாயகன் யாரையாவது துரத்த ஆரம்பித்தார் என்றால் ரசிகர்கள் சோர்வடையும் வரை நிறுத்த மாட்டேங்கிறார். இவ்ளோ கஷ்டப்பட்டு எடுத்த படத்தை சட்டென முடிப்பதா என்று இழுத்து முடிக்கின்றனர். கடைசியாக வந்தாலும் காவல்துறையினர் ஜீப்பில் வருகின்றனர். ஆனால் சூப்பர் ஹீரோ ஓடி ஓடியே.. முகமூடியை பார்த்தால் பரிதாபமாக தான் உள்ளது. அதே போல் தமிழ்ப் படங்களில் காட்டப்படும் காவல்துறையினரை நினைத்தாலும் பரிதாபமாக தான் இருக்கிறது. ஓடி தப்பிக்கும் ஆட்களை நின்று வேடிக்கைப் பார்க்கும் காவல்துறையினர், காரில் தப்பிக்கும் ஆட்களை துரத்திப் பிடிக்க ஓடுகின்றனர். முதல் பாதி கலகலப்பாகவும் இரண்டாம் பாதி ஜவ்வாகவும் போகிறது.
நாயகன் தனக்கு தானே வைத்துக் கொள்ளும் பெயர் லீ என்கிற ப்ரூஸ் லீ. ப்ரூஸ் லீயுடன் பணியாற்றிய ஒருவரை வைத்தே சண்டைக் காட்சிகளை எடுத்துள்ளனர். அதனால் தான் மிஷ்கின்னால் தமிழ்ப் படம் எடுக்க இயன்றதோ என்னவோ? குங் ஃபூ பயின்றவராக வரும் ஜீவா எப்பவும் போல ஏற்ற வேடத்திற்கு கச்சிதமாக பொருந்துகிறார். ஆனால் பின்னால் கட்டித் தொங்க விடப்பட்ட நீள அங்கியோடு அவர் கட்டிடம் கட்டிடமாக தாவி நியாயத்தைக் காப்பாற்ற படாதபாடு படுகிறார். ஆன்னா ஊன்னா கட்டிடத்தின் மேலேறி நிற்கும் அவரால் குடிசைகள் நிரம்பிய பகுதியில் எப்படி நியாயத்தைக் காப்பாற்ற முடியுமென ஐயம் எழுகிறது. அவரால் கட்டிடம் இல்லாத பகுதிகளில் அதர்மத்தை அழிக்க முடிகிறதோ என்னவோ, ஆனால் அந்த அங்கியினால் கண்டிப்பாக தரையையாவது சுத்தம் செய்ய இயலும். குறுக்க நெடுக்க அங்க இங்க போயிட்டு வர சூப்பர் ஹீரோவிடம் ஒரு வண்டி கூட இல்லை. 
பூஜா ஹெக்டே நாயகியாக. தடபுடலாக அறிமுகமானாலும் நாயகிக்கென விதிக்கப்பட்ட தமிழ்ப்பட தலையெழுத்தில் சிக்கி முகமூடியைக் காதலிக்க மட்டும் செய்கிறார். நரேன் வில்லனாக இருபுறமும் ஆடி ஆடி நடக்கிறார். எதிராளியுடன் சண்டையிடும் முன், பேசி அவர்களை வெறிக் கொள்ள செய்து பின்பே வீழ்த்துகிறார். ஆனாலும் வில்லன் என மனமொன்றி ஏனோ அவரை ஏற்க இயலவில்லை. ஆடுகளம், மெளனகுரு, தடையறத் தாக்க என தொடர்ந்து நாயகர்களின் நண்பர்களாக இயல்பாய் நடித்து கவனிக்க வைக்கிறார் முருகதாஸ். நாசரின் அனுபவம் பளிச்சிடுகிறது. க்ரீஷ் கர்னாட் வாயில் பைப்போடு நாயகனின் தாத்தாவாக வருகிறார். நாயகனின் காமெடி நண்பர்கள் செய்ய வேண்டிய வேலையை எடுத்துக் கொள்கிறார்.
தனது முந்தைய படங்களை விட இம்முறை படம் பார்க்கும் ரசிகர்களின் மூளைக்கு அதிமாகவே வேலை கொடுக்கிறார். இருட்டில் யார் யாரைத் துரத்துகிறார்கள், க்ளோசப்பில் காட்டப்படும் கால்கள் யாருடையது என படம் நெடுக ரசிகர்களின் கண், காது, மூளைக்கு வேலை தரும் மிஷ்கினின் டச் அபாரம். ‘நாட்டுல நம்ம வீட்டில்’ என மிக முக்கியமான bar anthem பாடலை வேறு எழுதியுள்ளார் மிஷ்கின். மந்திரிக்கப்பட்ட மிஷ்கின்னின் பிரத்தியேக பாத்திரங்களை இந்தப் பாட்டில் சில இடங்களில் பார்க்க முடிகிறது. ‘ஓப்பன் பண்ணா குத்து பாட்டு.. அதுல மஞ்ச சேலையில் ஒரு பொண்ணு ஆடுறா’ என அவரிடம் உதவி இயக்குனராக பணி புரிந்த அவரது தம்பியை சொல்ல வைத்து அறிமுகப்படுத்தியுள்ளார். மிஷ்கின் பார்த்த அனைத்து உலகப் படங்களையும் அவரது தம்பியும் பார்த்திருப்பாரே என்ற கிலி ஏன் ஏற்பட்டு தொலைகிறது என தெரியவில்லை. ‘வாய மூடி சும்மா இருடா’ என்ற மதன் கார்க்கியின் வரிகள் கே-வின் இசையில் ரசிக்க வைக்கிறது. பின்னணி இசையிலும் மெனக்கெட்டுள்ளார் கே. சத்யாவின் ஒளிப்பதிவில் நிறைய இரவுக் காட்சிகள். கெளகினின் படத்தொகுப்பில் படத்தின் நீளத்தை கொஞ்சம் குறைத்திருக்கலாம்.

Leave a Reply