
101 நிமிடப்படம்.
கல்லூரி மாணவர்களான கார்த்திக்கும், ஸ்வேதாவும் ஒருவரை ஒருவர் விரும்புகிறார்கள். கார்த்திகுடனான நெருக்கத்தால் ஸ்வேதா கருவுறுகிறாள். பின் என்ன நடந்தது என்பது தான் படத்தின் கதை.
கார்த்திக்காக நடித்துள்ளவர் சந்தோஷ் ரமேஷ். சில காட்சிகளில் இளித்து பயமுறுத்துகிறார். எனினும் பொறுப்பற்ற கல்லூரி மாணவன் கதாபாத்திரத்தில் அவரை ஏற்றுக் கொள்ளலாம். காதலிக்கவில்லை என்றால் இறந்து விடுவேன் என பேருந்தில் இருந்து விழுகிறார். ஒருவன் உயிரைக் கொடுக்க துணிந்தால், அவன் தன் மீது அதிகமான காதல் வைத்திருக்கான் என நம்புவதை முதலில் தமிழ்ப்பட நாயகிகள் நிறுத்த வேண்டும். உயிரின் மதிப்பை அறியாதவனின் மன முதிர்ச்சி எந்த அளவில் இருக்கும்? தற்கொலை என அச்சுறுத்தி நாயகியிடம் ஈட்டிய வெற்றித் தந்த குதூகலத்தில், கல்யாணத்திற்காக கையை அறுத்து பெற்றோரை அடிபணிய வைக்கிறான். நான் உயிரைக் கொடுக்கப் போயிட்டேன் என்று முட்டாள்த்தனத்தினை பெருமைக்குரிய சாகசமாகக் கருதுகிறான்.
ஸ்வேதாவாக மனிஷா யாதவ். வழக்கு எண்: 18/9 படத்தில் பள்ளி மாணவியாக மகாபலிபுரம் போய் பிரச்சனைக்கு உள்ளானவர், இம்முறை கல்லூரி மாணவியாக மகாபலிபுரம் சென்று பிரச்சனைக்கு உள்ளாகிறார். இவரும் நாயகனுக்கு சளைத்தவர் இல்லை. இயலாமையையும், ஏமாற்றத்தையும் சகிக்க முடியாத பதற்றத்தில் லாரியில் விழுந்து சாகப் பார்க்கிறார். சில காட்சிகளில் அழகாகத் தெரிகிறார். நாயகனுடனான காட்சிகளில் மிக அழகாகத் தெரிகிறார்.
படத்தின் சீரியஸ் மோடை தணிக்க உதவுவது அர்ஜூன். ஏற்கெனவே காதலில் சொதப்புவது எப்படி படத்தில் சித்தார்த்தின் நண்பராக கலக்கியிருப்பார். நாயகனின் தாயாக பூர்ணிமா பாக்கியராஜ் நடித்துள்ளார். நடிக்க அதிக காட்சிகள் இல்லையெனினும், கையை அறுத்துக் கொண்ட மகனுக்கும் பிரசவ வலியில் துடிக்கும் மகளுக்கும் இடையில் அல்லாடும் காட்சியில் தனது அனுபவத்தை பறைசாற்றி விடுகிறார். மீண்டும் அப்பாவாக அசத்தியுள்ளார் ஜெயபிரகாஷ். தனது மகளின் நடத்தையை தவறாகப் பேசப்படும் இடத்தில் இருந்து விலகி, அழுது கொண்டே சாலையில் நடக்கும் காட்சி ஓர் உதாரணம். எப்படி அம்மா கதாபாத்திரத்திம் என்றால் சரண்யா பொன்வண்ணனோ, அப்படி தந்தை கதாபாத்திரத்திற்கு ஜெயபிரகாஷ் தான் என்பது எழுதபடாத விதி போலும். ஆனால் முன்னவரின் ஒரே மாதிரியான வசன தொனி ஏற்படுத்தும் சலிப்பை பின்னவர் ஏற்படுத்துவதில்லை.
ஏ.ஆர். சூர்யாவின் ஒளிப்பதிவும், அந்தோனியின் படத்தொகுப்பும் படத்தில் லயிக்க உதவுகிறது. படத்தின் மையக்கருவை எள்ளி நகையாடும்படி எதிர்மறையாக தலைப்பு வைத்த இயக்குநர் சுசீந்திரனைப் பாராட்டியே ஆக வேண்டும். ‘அண்ணலும் நோக்கினான்; அவளும் நோக்கினாள்’ என காதலைக் கொண்டாடும் வழக்கம் ஆதி காலம் தொட்டு இந்நொடி வரை நம்மிடம் நிலவி வருகிறது. அந்தக் கொண்டாட்டம் நம்மை இட்டுச் சென்ற இடத்தின் அபத்தங்களை சொல்கிறது இப்படம். வரும் அனைத்துப் படங்களுமே காதல் தெய்வீகமானது, புனிதமானது, அழியாதது, ஐஸ் க்ரீம் போன்றது என மிகையாகவே பேசி வரும் தமிழ்த் திரையுலகில்.. இது போன்று ஒன்றிரண்டு படங்களாவது வரவேண்டும். காதலை அல்ல காதல் என முதிர்ச்சியற்றவர்கள் நம்பும் ஒன்றை அழுத்தமாக சாடியுள்ளார் இயக்குநர்.
பயமுறுத்தியாவது காதலிக்க வைத்து விடணும் என்ற மூர்க்கத்தனம் காதலாகவும், நாயகத்தனமாகவும் பெரும்பாலான படங்களில் சித்தரிக்கப்பட்டு வருகின்றது. “தப்பு பண்ற வயசுல தப்பு பண்ணினா அது தப்பே இல்லை” என்பது தான் நாயகனின் சித்தாந்தம். ஆனால் ஒரு சின்னப் பிரச்சனையை எதிர்கொண்டு தீர்க்க திராணியற்று, தற்கொலையை மற்றவர் மீது ஆயுதமாகப் பிரயோக்கிறான். புரிதலற்ற கவர்ச்சியை காதலென விடாப்பிடியாக நம்பி, சின்ன விஷயத்திற்குக்கூட விட்டுக் கொடுக்காமல் ஒருவரை ஒருவர் தூக்கி எறிகின்றனர் நாயகனும் நாயகியும். இத்தகைய அவலம் தான் எண்ணற்ற விவாகரத்துகளுக்கு காரணமாகின்றன.
படத்தின் முடிவில் வரும் குழந்தையின் சிரிப்பை ஏனோ ரசிக்க முடியவில்லை.


