

நான்கு தேசிய விருதுகளைப் பெற்ற ‘ஆதாமிண்ட மகன் அபூ’ எனும் மலையாளப் படம் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ளது. அரபி மொழியில் டப் செய்யப்படும் முதல் தென்னிந்தியப் படமென்ற பெருமையும் இப்படத்திற்கு உண்டு. மேலும் டர்க்கீ (துருக்கி), ஈரான், மலேசியா நாட்டு மொழிகளிலும் டப் செய்யப்பட்டுள்ளது. 100 சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படம் ஸ்க்ரீன் செய்யப்பட்டுள்ளது. கோவா ஃப்லிம் ஃபெஸ்டிவலில் ‘சில்வர் பீகாக்’ விருதினைப் பெற்றுள்ளது. இப்படத்திற்காக சிறந்த ஒளிப்பதிவாளருக்கான தேசிய விருது வாங்கிய மது அம்பட், மணிரத்னத்தின் அஞ்சலி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் மொழிமாற்றத்திற்கு உதவிய விஸ்வம் நம்பீசன், “இது ஹஜ் பயணம் பற்றிய கதை. ஹஜ் பயணம் எப்படிப் பண்ணணும் எனச் சொல்லியுள்ளார் இயக்குநர் சலீம் அகமது. இந்தப் படத்தை, நான் ஒரு மனிதனின் பயணமாகத்தான் பார்க்கிறேன். ஒரு உண்மையான மனிதன் எப்படி நடந்துக்கணும் என மிக எளிமையாக இப்படம் எடுக்கப்பட்டிருக்கு. இந்த மகத்தான படத்தில், மொழிமாற்றத்திற்கு உதவிய சின்ன பங்கினை வகித்தேன் என்பது எனக்குக் கிடைத்த பாக்கியமாகக் கருதுகிறேன்” என்றார்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரின் நண்பரான ஹனீபா, “ஒரு சகோதரர் தன் ஐந்தாவது கடமையை நிறைவேற்ற தனது வயோதிக காலத்தில் மேற்கொள்ளும் பயணத்தை படம் அருமையாக படம்பிடித்துக் காட்டுகிறது. எல்லா மதமும் மனிதர்களைச் சீராக்க வந்தவைதான். அப்படி இந்தப் படம் ஒரு இணக்கத்தை அனைவரிடமும் உருவாக்கும்.
பொங்கல் தீபாவளிக்கு படம் வருகிறது. ஆனா ரம்ஜானுக்கும் பக்ரீத்துக்கும் படம் வர்றதில்லை. பொங்கல் தீபாவளியின் பொழுது, டி.வி.க்களில் போட இஸ்லாமியப் படமில்லை என்ற வெற்றிடத்தை நிறைவு செய்ய இப்படம் வந்திருக்கு என்பதில் நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்” என்றார்.
‘ஆதாமின் மகன் அபூ’ விரைவில் வெளிவரத் தயாராகவுள்ளது.

