ஜோ ஜியோவானி சன்ஜித் சிங் தமிழ் பேசத் தெரியாத ஒரு வெளிநாட்டு நபர். இவர் ஒரு திரைப்படம் அதுவும் தமிழில் செய்ய வேண்டும் என்று விரும்புகிறார். தானே தயாரிக்கவும் தயாராக இருக்கிறார். இவரை நெருங்கும் ஒருவர் நான் தமிழில் உங்களுக்கு ஒரு படம் இயக்கிக் கொடுக்கிறேன் என்று சொல்ல, படப்பிடிப்பும் துவங்குகிறது. படம் பாதிக்கு மேல் முடிவடைந்த பின்னர் தான் ஜியோவானி சன்ஜித் சிங் ஒரு விசயத்தை உணர்கிறார். அவர்கள் எடுத்துக் கொண்டு இருப்பது ஒரு ஹாலிவுட் படத்தின் அறிவிக்கப்படாத ரீமேக் என்று. உடனே அந்த இயக்குநரை அடித்து விரட்டிவிட்டு, படத்தை அப்படியே கிடப்பில் போடுகிறார். சில வருடங்கள் செல்கின்றது. அந்தப் படத்தை அப்படியே போட மனமில்லாமல் எடுத்த படத்துணுக்குகள் எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவரே புதிதாக கதை எழுதி இயக்கத் துவங்குகிறார். இத்தனைக்கும் அவருக்கு ஐந்து தமிழ் வார்த்தைகள் கூட முழுதாகத் தெரியாது. ஆனால் அவர் எடுப்பது தமிழ்ப்படம். அந்தப் படத்தின் பெயர் Broken Script. என்ன குழப்பமாக இருக்கிறதா..?
நிற்க.
மேற்பத்தியில் நீங்கள் வாசித்தது படத்தின் கதை அல்ல. Broken Script திரைப்படம் ஜோ ஜியோவானி சன்ஜித் சிங் இயக்கத்திலும் நடிப்பிலும் உருவான கதை. இதைப் போய் வாசித்து தொலைத்து விட்டோமே என்று வருத்தப்பட வேண்டாம். படத்திற்குள்ளும் இந்தக் கதை வரத் தான் செய்கிறது. ஆனால் நாகரீகம் கருதியோ அல்லது பின் விளைவுகளுக்கு அஞ்சியோ என்னவோ அந்த துரோகம் இழைத்த இயக்குநரை மட்டும் கடைசி வரை காட்டவே இல்லை.
சரி. தயாரிப்பாளராக இருந்த போது தான் ஹாலிவுட் கதையை எடுத்து வைத்து ஏமாற்றினார்கள். அவரே இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் மாறிய பிறகு இப்பொழுது என்னதான் எடுத்து வைத்திருக்கிறார்கள் பார்ப்போம் என்று பார்த்தால் , இப்பொழுது இவர்கள் எடுத்து வைத்திருப்பது ரீமேக் செய்யப்பட்டு தமிழில் வெளியான ஒரு படத்தையே இவர்கள் திரும்ப எடுத்து வைத்திருக்கிறார்கள்.
படம் தொடங்கி முடிவை நோக்கிப் போகும் வரை என்ன சொல்ல வருகிறார்கள், கதை எதை நோக்கிப் போகிறது..? கதை என்கின்ற அந்த வஸ்து படத்தில் இருக்கிறதா இல்லையா…? என்பதைத் தேடி சோர்ந்து ஓய்ந்து போய் உட்கார்ந்திருக்கும் போது, இரண்டு மணி நேரம் இருபத்தைந்து நிமிட சோதனைக்குப் பிறகு வந்தது அந்த க்ளைமாக்ஸ் காட்சி.
அப்பொழுது தான் ஒட்டு மொத்த படமும் விளங்கியது. ஓ.. இது சித்தார்த் நடிப்பில் பல ஆண்டுகளுக்கு முன்பு வெளியான அந்த திரைப்படத்தின் கதையா என்று.
அந்த கடைசி நேர ட்விஸ்ட்-யை நீங்கள் ஆரம்பத்திலேயே கணித்தீர்கள் என்றால் நீங்கள் கில்லாடி தான். ஆனால் அந்த ட்விஸ்ட் தெரிந்த பின்பு களிப்படையாமல் களைப்படைந்து Broken Heart –யோடு கலைந்து வந்தோம் என்பதே Broken Scriptக்கான ஒற்றை வரி விமர்சனம்.