Shadow

சியான்கள் விமர்சனம்

Chiyaangal-review

ஒரு பெரிய பாரத்தை மென்மையாய் மனதில் தூக்கி வைத்துள்ளார் இயக்குநர் வைகறை பாலன்.

மூத்தவர்கள், பெரியவர்கள், பாட்டன் என்ற பதத்தில் ‘சியான்கள்’ என்ற வார்த்தை படத்தில் உபயோகப்பட்டுள்ளது. ஏழு சியான்கள் தான் படத்தின் பிரதான கதாபாத்திரங்கள். அந்த மண்ணின் மைந்தர்களுக்கு இடையேயான நட்பு, கிராமத்திய வெள்ளந்தித்தனம், வீட்டினரால் அனுபவிக்கும் அவமானம்/ புறக்கணிப்பு என இப்படம் கவனத்துக்குரிய முக்கிய படமாக ஈர்க்கிறது.

ஒரு வேளை உணவிற்காக ஒரு முதியவர் அவமானப்படுத்தப்படுகிறார்; சொத்துக்காக ஒரு முதியவரின் குறுக்கெலும்பைச் சேதப்படுத்திப் படுத்த படுக்கையாக்குகின்றனர்; இறந்து விடும் அம்மாவின் தண்டட்டியைப் பெறுவதன் பொருட்டு, தண்டட்டி கிடைத்தால் அப்பாவுக்குக் கஞ்சி ஊத்தப்படும் என பொதுச் சபையில் மகன்கள் இரக்கமற்று, கூச்சமற்று ஏலம் விடுகின்றனர். முதுமைப் பருவம் எய்துபவர்களின் வாழ்க்கை எத்தகைய ரணத்துடன் கழிகிறது என்பதைப் படம் அழுத்தமாகப் பதிகிறது. அதையெல்லாம் மீறி, கூட்டுக்காரர்களுடன் அவர்கள் கொள்ளும் நட்பும், அந்த நட்பின் ஊடாக அவர்கள் வாழ்க்கையைக் கொண்டாடுவதும் படத்தைச் சுபமாக்குகிறது.

பாடலாசிரியர் முத்தமிழின் வரிகளில், ‘இது என்ன விதியோ?’ பாடல் மிக அற்புதமாக முதியவர்களின் வலியைப் பதிந்துள்ளது. இப்படத்தின் மூலமாக அவர் இசையமைப்பாளராகவும் அறிமுகமாகியுள்ளார்.

இப்படத்தைத் தயாரித்து, நாயகனாக நடித்துள்ளார் கூத்துப்பட்டறைக் கலைஞரான கரிகாலன். ஆனால், அவரை விட எதார்த்தமாக நடித்துள்ளனர் சியான்களாக நடித்துள்ளவர்கள். சடையனாக நடித்த நளினிகாந்த் மற்றும் ஒண்டிகட்டையாக நடித்த துரை பசுபதிராஜினைத் தவிர்த்து மற்ற சியான்களாக அனைவருமே அறிமுகமில்லாத முகங்களே! அனுபவமற்ற நடிகர்கள் எனினும், தங்கள் கலகலப்பான எதார்த்தமான நடிப்பால், படம் பார்க்கும் அனுபவத்தைக் கொண்டாட்டமாக்கியுள்ளனர்.