32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

காட்டாளன் விமர்சனம் | Kaattalan review

Dinesh R சேலம் Published: 29/05/2026 2 நிமிட வாசிப்பு Updated: 02/06/2026 அயல் சினிமா
எழுத்து அளவு:

தமிழில், காட்டை ஆள்பவன் என்பது போல் பொருளைத் தந்தாலும், மலையாளத்தில் காட்டாளன் எனும் சொல்லுக்கு மூன்று அர்த்தங்கள் உள்ளன. ஒன்று, வேட்டைக்காரன்; இன்னொன்று, காட்டின மக்கள்; மற்றது, காட்டான் ஆகும். காட்டாளனுக்குக் கீழ், ‘தி ஹன்டர்’ என ஆங்கிலத்தில் வந்தாலும், மூன்று அர்த்தங்களிலும் படத்தைக் கொள்ளலாம். அதில் நாகரிகமற்றவன் என்று பொருளில் வரும் காட்டான் என்ற அர்த்தமே படத்தின் கதைக்கருவிற்குச் சால பொருந்துகிறது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

ஆனக்கொல்லி காட்டில், தந்தங்களுக்காக யானைகளை வேட்டையாடுகின்றான் மாரி. யானைத்தந்தங்களைக் கடத்தும் கடத்தல் குழுமத்தின் (Cartel) தலைவனாகவும் வளர்கிறான். மாரியின் தொழிலைக் கெடுத்துக் கடத்தல் குழுமத்தின் தலைவனாகப் பார்க்கிறான் எடி. எடியின் முயற்சிகள் வெற்றி பெற்று, மாரியின் தந்தங்களை ராமேஸ்வரத்திற்குக் கொண்டு செல்ல விடாமல் செய்துவிடுகிறான். எடியை எதிர்க்க, ஆண்டனி என்பவனை அழைத்து வருகிறான் மாரி. அதிகாரத்தைக் கையில் வைத்திருக்கும் எடிக்கு எதிராக ஆண்டனி வென்று, ஏன் எப்படி மாரியையும் எதிர்க்கிறான் என்பதுதான் படத்தின் கதை.

கதையைத் தயார் செய்வதற்கு முன்பாகவே, பேன்-இந்தியா படமாக எடுக்கவேண்டும் எனத் தீர்மானித்துவிட்டார்கள். கே.ஜி.எஃப்., புஷ்பா போன்ற படங்களில் இருந்தி அதற்கான கூறுகள் என்னென்ன என்று ஆலோசித்துத் தனியே எடுத்து வைத்துவிட்டு, அதற்குள் கதையை ஆங்காங்கே அமுக்கித் திணித்துள்ளார் இயக்குநர் பால் ஜார்ஜ். மாஸ் ஃபைட், ஸ்லோ மோஷன் நடை, ஒரு மகள் சென்ட்டிமென்ட், கடத்தல் குழுமம், கொடூரமான வில்லன், அலட்டிக்காத நாயகன், கடலில் சண்டை, சேஸிங் ஃபைட் எனத் துண்டு துண்டாக எடுத்து ஒட்டித் திரைக்கதையை உருவாக்கியுள்ளனர். யோசிக்கவே விடக்கூடாது என ரவி பஸ்ரூரும் இசையால் ஆளை அமுக்குகின்றார்.

ஆண்டனி வர்கீஸ் நாயகனாக நடிக்க, மாரியாக தெலுங்கு நடிகர் சுனிலும், இளம் வயது மாரியாக ராஜ் திரன்தாஸும், எடியாக  கபீர் துஹான் சிங்கும், எடியின் கையாள் நெல்சன் நாடாராக ஹரிஷ்அங்கர் நாராயணனும் நடித்துள்ளனர். கே.ஜி.எஃப் பாணியில் கதை சொல்பவராக மலையாள நடிகர் ஜெகதீஷ் நடித்துள்ளார். அவர் மகளாக நடித்த சிறுமி நன்றாக நடித்திருந்தாலும், அந்த அத்தியாயம் எல்லாம் ஓர் அவசர திணிப்பாக ஓட்டாமலே உள்ளது. ஜெகதீஷ் ஏற்ற கதாபாத்திரமுமே அப்படித்தான் கையாளப்பட்டுள்ளது. ஏன் அனைத்துப் பாத்திரங்களுமே அப்படித்தான் உள்ளன. சுனில் மட்டும் விதிவிலக்காகக் கொஞ்சம் மனதில் பதிந்தாலும், அவரது பாத்திரத்தையுமே கூட பலவீனமாகத்தான் எழுதியுள்ளனர். நாயகன் ஆண்டனி வர்கீஸ்க்கு, சுனில் அளவுக்குக் கூடக் கொடுப்பிணை இல்லை. 

கதை இலங்கைக்குப் போகிறது. ஆதியும் அந்தமும் இல்லாமல், துஷாரா விஜயன் ஆக்ஷன் செய்கிறார். மார்கோ படம் தந்த வெற்றிக் களிப்பில், வன்முறைகளுக்குப் பஞ்சமில்லாத படமாகத் தயாரித்துள்ளனர் க்யூப்ஸ் என்டர்டெயின்மென்ட்ஸ். ‘லார்ட் மார்கோ’வில் ரத்த ஆறு ஓடுமென்ற எச்சரிக்கையுடன் படத்தை முடித்துள்ளனர். இப்படமே காட்சிகளாகத் துண்டு துண்டாகத் தனித்து விடப்பட்டு, ஒரு முழுமை பெறாப் படைப்பாய் அலைக்கழிக்கிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.