காலத்தோடு இயைந்து, “சூது கவ்வும்” என்றே திரைப்படத்திற்கு பெயர் வைக்கும் அளவு தமிழ்த் திரையுலகம் பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது. இத்தகைய சூழ்நிலையில், “தர்மம் வெல்லும்” என்ற காலாவதியான ஆதி நம்பிக்கையை தூசி தட்டி இப்படத்தின் கருவாக வைத்துள்ளார் இயக்குநர்.
வேலையை இழந்த வெற்றிக்கு, தங்கை கல்யாணத்திற்கு வாங்கிய கடனை திருப்பி அடைக்க வேண்டிய நெருக்கடி. நண்பன் அளிக்கும் பணமும் களவாடபடுகிறது. போதாக்குறைக்கு தங்கையின் கனவன் வேறு மீதமுள்ள வரதட்சனை தொகையைக் கேட்கிறான். மும்முனை தாக்குதலில் சிக்குண்ட வெற்றியின் நிலையென்ன என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்று நினைக்க வைக்கும் அளவிற்கு அசட்டுத்தனம் வழியும் முகத்துடன், ‘சூது கவ்வும்’ படத்தில் நடித்திருப்பார் சிம்ஹா. இந்தப் படத்தின் முரட்டு முதுகெலும்பே வட்டிராஜாவாக வரும் அவர் தான். முகபாவம், உடல்மொழி, மிரட்டலான குரலொலியில் அலட்சியமாக வசனம் பேசுவது என படத்துடன் ஒன்ற உதவுகிறார்.
வேணியாக நஸ்ரியா நாசிம். பொலிவாய், அழகாய், பாந்தமாய் திரையில் தோன்றுகிறார். நாயகனை காதலிப்பது, அவருக்கு ஊக்கம் அளிப்பது, வில்லனால் கடத்தப்படுவது என இலக்கணம் பிறழாப் பாத்திரத்தில் கச்சிதமாகப் பொருந்துகிறார். சின்னச் சின்ன முகபாவங்களில் ஆங்காங்கே ஈர்க்கிறார். கதாநாயகன் வெற்றியாக நிவின். ஸ்டன்ட் ரவி அமைத்திருக்கும் சண்டைக் காட்சிகளில் வில்லன்களை நிவின் அடி பின்னினாலும், அதிக நாயகத்துவம் இல்லாத பாத்திரம் தான். கண்டதும் காதல் என்ற வழக்கம் மெல்ல மாறி, உடன் படிக்கும் தோழியைக் காதலிக்கும் கலாச்சாரம் மெல்ல தமிழ்ப்படங்களில் உருவாகி வருகிறது. நாயகி அழகாக இருப்பதால் தான் காதலிக்கிறேன் என்ற அபத்தமான ஒப்புதல் வாக்குமூலத்தையும் தவறாமல் பதிந்து விடுகின்றனர்.
தண்டாயுதபாணியாக நாசர். அவர் திரையில் தோன்றிய நொடி முதல் படம் முடியும் வரை படம் கலகலப்பாகச் செல்கிறது. தாலாட்டு பாட ஆயத்தமாகும் பொழுதும், பேச்சினிடையில் “ஆவ்சம்” சொல்லும் பொழுதும், தவறாக ஆங்கில வார்த்தைகளை உச்சரிக்கும் பொழுதும் கலக்குகிறார். நாசரின் இளம் வயது தம்பியாக வரும் ஆனந்த் நாக் நன்றாக நடித்துள்ளார். செம்மையாகச் செய்துள்ளார். ஸ்டைலாக ஆங்கிலம் பேசுவதும், கடனை திருப்பிக் கேட்கும் வட்டி ராஜாவிடமே 500 ரூபாய் வாங்குவதும், மருத்துவமனையில் படுத்துக் கொண்டிருப்பவர் நர்ஸின் குரல் கேட்டதும், “ஐ.. கேர்ள் வாய்ஸ்” என விழித்துப் பார்ப்பதும் ரசிக்க வைக்கிறது.
முக சேஷ்டைகள் செய்யும் இசை பிரியராகவும், காவல்துறை அதிகாரியாகவும் நடித்துளார் ஜான் விஜய். நாயகியின் தந்தையாக வரும் தம்பி ராமைய்யா தனது வழமையான நடிப்பால் ஒப்பேற்றியுள்ளார். துண்டு பாத்திரத்திலாவது எல்லாப் படங்களிலும் தலையைக் காட்டி விடும் பழக்கத்தை மாற்றிக் கொள்ளாமல் வந்து போகிறார் மனோபாலா. சிற்சில காட்சிகளிலே வந்தாலும் ராஜ் திலக் படத்தின் போக்கையே மாற்றுபவராக வந்து போகிறார்.
கதை, திரைக்கதை, இயக்கம், படத்தொகுப்பு என முதல் படத்திலேயே கலக்கியுள்ளார் அல்ஃபோன்ஸ் புத்திரன். முதற்பாதியில் கொஞ்சம் தொய்வு ஏற்பட்டாலும், படம் நல்லபடியாக முடிந்து ஒரு முழுமையுணர்வையும் நிறைவையும் தருகிறது. வன்முறையை ஊக்குவிக்காத படம் என்பது கூடதல் சிறப்பு. பட முடிவில், நேரத்தைப் பற்றிய கதாகாலட்சேபத்தைத் தவிர்த்திருக்கலாம். ‘நேரம் – சிறு குறிப்பு சொல்லுக’ என யாரோ கேட்டது போல, அந்தக் கால திரைப்படங்கள் பாணியில் படத்தின் தலைப்பைக் குறித்த ஆத்ம விசாரணை (!?) நடக்கிறது. நல்லவேளையாக அதை நீட்டிக்காமல், ‘பிஸ்தா’ பாடலை மறுமுறை வைத்து எதையும் யோசிக்க விடாமல் செய்து விடுகின்றனர்.
பி.கு.: படத்தில் பங்கு பெற்றவர்கள் பெயரெல்லாம் போட்டு முடித்து, திரை அணையும் முன் Take Care 🙂 என போடுகின்றனர்.
ஆமென்.