Shadow

அபியும் அனுவும் – 22 வருடங்களுக்குப் பின்

Abhiyum Anuvum Suhasini

அபியும் அனுவும் எனும் படத்தை தமிழிலும் மலையாளத்திலும் ஒரே சமயத்தில் இயக்கியுள்ளார் பி.ஆர்.விஜயலக்ஷ்மி. இவர் இயக்குநர் பி.ஆர்.பந்தலுவின் மகளென்பது குறிப்பிடத்தக்கது. 1995இல், “பாட்டு பாடவா” எனும் படத்தை இயக்கியுள்ள பி.ஆர். விஜயலக்ஷ்மி இயக்கும் இரண்டாவது படம் ‘அபியும் அனுவும்’. ஆனால் விஜயலக்ஷ்மி, 1985 இல் வெளியான பாக்கியராஜின் ‘சின்னவீடு’ படத்தின் மூலம் ஒளிப்பதிவாளராகவே திரையுலகில் அறிமுகமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

“விஜயலக்ஷ்மி அவர்களின் படத்தில் வேலை செய்தது எனக்குப் பெருமையாக இருந்தது. ரொம்பவே வெளிப்படையாக பேசக்கூடிய இயக்குநர். படத்தில் இரண்டு பாடல்கள் தான். கதையைச் சொல்லும் அந்த இரண்டு பாடல்களையும் திரைக்கதையில் சிறப்பாகப் பொருத்தியிருக்கிறார். டோவினோ, தமிழ் சினிமாவில் இளம் பெண்களின் கனவு நாயகனாக வருவார்” என்றார் இசையமைப்பாளர் தரண்.

“விஜயலக்ஷ்மியுடன் எனக்கு நீண்ட கால நட்பு இருந்து வருகிறது. வித்தியாசமான படம்னு சொல்லி தான் என்னை நடிக்க அழைத்தார். உண்மையிலேயே இது ஒரு வித்தியாசமான படம். இந்தப் படத்தில் நான் தாண்டி வந்த உணர்வுகளை நான் நிஜத்தில் கூட இதுவரை உணர்ந்தது கிடையாது. இதுவரைக்கும் நான் செய்யாத விஷயங்கள் இந்தப் படத்தில் இருந்தது. அதை எனக்குக் கொடுத்த விஜிக்கு நன்றி” என்றார் நடிகை ரோகிணி. பிரபு, சுஹாசினி, மனோபாலா, கலைராணி, உதயபானு மகேஷ்வரன், தீபா ராமானுஜம், நெல்லை சிவா ஆகியோரும் நடித்துள்ளனர்.

B.R.Vijayalakshmi“அடுத்த 5 வருடங்களுக்கு கான்செப்ட், கதையுள்ள படங்கள் தான் பேசப்படும். விஜயலக்ஷ்மி அவர்களிடம் 4 வருடங்கள் உதவியாளராக வேலை பார்த்திருக்கிறேன். அந்த நேரத்தில் அவர்கள் வீட்டில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறோம். அவர்களிடம் வேலை பார்த்தது கல்லூரியை விட்டு வெளியே வந்த ஒரு திருப்தி கிடைத்தது. ஆசியாவின் முதல் பெண் ஒளிப்பதிவாளர் விஜயலக்ஷ்மி தான். டோவினோ தாமஸ் தென்னகத்தின் இம்ரான் ஹாஸ்மி என்று கூறலாம். பியா பாஜ்பாயின் கதைத்தேர்வு எனக்கு ஆச்சர்யம் அளிக்கிறது. நிறைய நல்ல நல்ல படங்களாகத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்” என்றார் ஒளிப்பதிவாளரும் நடிகருமான நட்டி.

“ ‘என்னு நிண்டே மொய்தீன்’ படத்துக்குப் பிறகு தமிழ்ப் படங்களில் நடிக்க நிறைய வாய்ப்புகள் வந்தன. நல்ல கதைக்காக நான் காத்திருந்தேன். ஒரு சில மலையாளப் படங்களை முடிக்க வேண்டியிருந்தது. அந்த நேரத்தில் தான் விஜயலக்ஷ்மி மேடம் என்னைத் தொடர்ந்து கதை கேட்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டே இருந்தார். அவரைப் பற்றி இணையத்தில் தேடினேன். அவர் இயக்கிய படத்தைப் பார்த்தேன். நம்பிக்கை வந்தது. அப்போது தான் அவர் தமிழ் சினிமாவின் மிகப்பெரிய ஜாம்பவானின் மகள் என்பது தெரிய வந்தது. கதை கேட்டேன், சிறப்பான கதை. நடிக்க ஒப்புக் கொண்ட பிறகு படத்துக்காக சென்னையில் ஒரு பயிற்சி பட்டறை ஏற்பாடு செய்திருந்தார்கள். அப்போது தான் பியாவை முதன் முறையாக சந்தித்தேன். தமிழ் எனக்கு அவ்வளவாக தெரியாது. இந்தப் படத்தில் நிறைய கற்றுக் கொள்ள முடிந்தது. தமிழ் சினிமாவில் இது ஒரு பெஞ்ச் மார்க் படமாக இருக்கும். இதே படம் மலையாளத்திலும் ரிலீஸ் ஆக இருக்கிறது. தமிழ் சினிமாவின் முக்கியமான நடிகர், நடிகைகளுடன் நடித்தது நல்ல அனுபவம் என்றார்” நடிகர் டோவினோ தாமஸ். “ரொம்பவே நேர்மையான படம், சமூகத்தில் நிறைய கேள்விகளை முன்வைக்கும். இதில் நடித்தது பெருமையான விஷயம்” என்றார் நடிகை பியா.

திரைக்கதையை உதயபானு மகேஷ்வரனும், வசனத்தை கே.சண்முகமும் எழுதியுள்ளனர். ‘பாட்டு பாடவா’ படத்தை விஜயலக்ஷ்மியே தான் ஒளிப்பதிவு செய்திருந்தார். ஆனால், இப்படத்தில் அகிலன் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியுள்ளார். சுமார் 22 வருடங்களுக்குப் பின் மீண்டும் பி.ஆர். விஜயலக்ஷ்மி படம் இயக்கியுள்ளது எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது.