Shadow

சூரகன் விமர்சனம்

ஒரு விபத்தில் கண் பார்வை பாதிப்புக்குள்ளான நாயகன், அதை மறைத்து போலீஸ் துறையில் பணியாற்றி வருகிறார்.  அவரின் கண் பார்வை குறைபாட்டால் ஒரு அப்பாவிப் பெண் பலியாகிவிட, நாயகன் தற்காலிக பணி நீக்கம் செய்யப்படுகிறார். அதே நேரம் ஒரு உயிர் போய்விட்டதே என்கின்ற குற்றவுணர்ச்சி மேலெழ நாயகன் விரக்தியுடன் இருக்கிறார். அந்த சூழலில் சாலையில் அடிபட்டுக் கிடந்த ஒரு பெண்ணைக் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தும் அப்பெண்ணையும் காப்பாற்ற முடியாமல் போய்விடுகிறது. இந்த குற்றவுணர்ச்சியும் சேர்ந்து கொள்ள நாயகன், சாலையில் அடிபட்டுக் கிடந்த பெண் சாவில் இருக்கும் மர்மத்தை உடைத்து தன் குற்றவுணர்வில் இருந்து விடுபட நினைக்கிறான். அந்த இளம்பெண் மரணத்தின் பின்னால் இருக்கும் நபர்களை நாயகன் கண்டறிந்தானா..? தன் குற்றவுணர்ச்சியில் இருந்து விடுபட்டானா..? என்பதை விளக்குகிறது திரைக்கதை.

ஒரு சந்தேகத்திற்கிடமான மரணம். அதன் பின்னால் இருக்கும் மர்மம், அந்த மர்மத்தை உடைத்து உண்மையை வெளியே கொண்டு வரும் நாயகன், என்னும் மிக சாதாரணமான ஒன்லைனை எடுத்துக் கொண்டு, அந்த ஒன்லைன் கதைக்கு இன்னும்  சாதாரணமான முறையில் திரைக்கதை அமைத்து “சூரகன்” திரைப்படத்தை உருவாக்கி இருக்கிறார்கள். புதுமை இல்லாத காட்சிகள், சுவாரஸ்யமற்ற திரைக்கதை  என சூரகன் சுமாராகவே நகர்கிறது.

அறிமுக நாயகன் கார்த்திகேயன் விநாயகத்துடன் சுபிக்‌ஷா, பாண்டியராஜன், வினோதினி, மன்சூர் அலிகான், நிழல்கள் ரவி,  வின்செண்ட் அசோகன், ரேஷ்மா பசுபுலெட்டி, ஜீவா ரவி,  சுரேஷ் மேனன் என்று பலரும் நடித்திருக்கிறார்கள்.

நாயகன் கார்த்திகேயன் விநாயகத்திற்கு கண் பார்வை குறைபாடு உடைய நாயகன் கதாபாத்திரம். சண்டைக் காட்சிகளில் இருக்கும் உத்வேகமும், உடல்மொழியும் மற்ற எந்தக் காட்சிகளிலும் இல்லை. காதல், சோகம், விரக்தி, கோபம் என பல்வேறு உணர்வுகளுக்கும் ஒரே மாதிரியான முக பாவனைகள் கொடுத்து திணறுகிறார். நாயகியாக சுபிக்‌ஷாவிற்கு ஆடிப் பாடும் அதே ஹீரோயின் கதாபாத்திரம்.

ஜீவா ரவி, நாயகனை இந்தப் பெண் கேஸுல் நீ தலையிடாதே என்பதை மட்டும் திரும்பத் திரும்ப சொல்லிக் கொண்டே இருக்கிறார். அதன் பின் காரணமோ, இல்லை அந்த வழக்கு விசாரணையில் அவர் சென்று சேர்ந்த தூரமோ துளியும் கதையில் இல்லை. பாண்டியராஜனும் வினோதினி வைத்தியநாதனும் நாயகனும் குடும்பம் தொடர்பான செண்டிமெண்ட் காட்சிகளுக்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.

வழக்கமான காமெடி வில்லனாக மாமாமியா என்னும் கதாபாத்திரத்தில் மன்சூர் அலிகான் வந்து போகிறார். ரோட்டோரம் இறந்து போன பெண்ணின் தாத்தாவாக நிழல்கள் ரவி வந்து, தன் பேத்தியை கொன்றவர்களை பழி வாங்க நாயகனுக்கு உதவுவதாக சொல்கிறார். அவர் பேசும் வசனத்தில் இருக்கும் பழி வாங்கும் உணர்ச்சி கூட குரலிலோ, செயலிலோ இருப்பதில்லை. க்ளைமாக்ஸ் சண்டைக் காட்சியில் இவர்கள் இருவருமே நாயகனுக்கு துணையாக வந்து சண்டை செய்கிறார்கள்.

நாயகன் ஏன் தலைகீழாக தொங்கிக் கொண்டு பயிற்சி எடுக்க வேண்டும். அப்படி பயிற்சி எடுத்தால் தான் அவனுக்கு குணமாகும் என்று டாக்டர்கள் உரைப்பதன் பின்புலத்தில் என்ன மாதிரியான மருத்துவப் பின்புலம் உள்ளது.  என்பதான கேள்விகளுக்கு திரைக்கதையில் பதில் இல்லை.  ஜீவா ரவி கொலை செய்யப்படும் பெண்கள் தொடர்பாக விசாரிக்கும் காட்சிகள் எதுவும் இல்லை. பெண்களை வைத்து தொழில் செய்யும் மாமாமியாவான மன்சூர் அலிகான் எந்தவித அடிப்படையில் நல்லவராக சித்தரிக்கப்படுகிறார் என்பதற்கான முழுமை இல்லை. நாயகனுக்கும் நாயகிக்குமான தொடர்பு, வீடியோவில் வந்து செல்லும் பட்டாம்பூச்சி, பென் டிரைவ் கைப்பற்றுவதற்கான போராட்டம், விசாரணை வளையத்தில் கிடைக்கும் தடயங்கள் அதைக் கொண்டு நாயகன் மேற்கொள்ளும் நகர்வுகள் என கதையில் எதுவுமே முழுமையாக சொல்லப்படவில்லை.

கோர்வையில்லாத திரைக்கதை, முழுமையடையாத கதாபாத்திரங்கள் என சூரகன் ஆங்காங்கே நம் பொறுமையை அதிகமாக சோதிக்கிறது. இறுதியில்  ஒரு நாயகன் வில்லன் இடையேயான சினிமா எப்படி முடிந்து போகுமோ அதே வழமையில் முடிந்தும் போகிறது

அறிமுக இயக்குநர் சதீஷ் கீத குமார் இயக்கி இருக்கிறார்.  3rd Eye Cine Creations சார்பாக கார்த்திகேயன் தயாரித்திருக்கிறார்.  படத்தின் நாயகன் கார்த்திகேயன் விநாயகம் திரைக்கதை எழுதி இருக்கிறார். புதுமைகள் ஏதும் இல்லாத சாதாரண ஒரு மசாலா படத்திற்கான முயற்சி தான். அதுவும் சிறப்பாக கைகூடவில்லை என்பதே உண்மை.

சூரகன் – சொல்லிக் கொள்ள ஒன்றுமில்லை.

மதிப்பெண் 2.0 / 5.0