
மதுரவீரன் விமர்சனம்
தனது தந்தை ரத்தினவேலுவைக் கொன்றது யாரென அறியவும், அவர் நடத்தி வந்த ஜல்லிக்கட்டை ஊரில் தொடர்ந்து நடத்திடவும் மலேஷியாவில் இருந்து சொந்த ஊருக்கு வருகிறான் துரை. அவனது இந்த இரு நோக்கங்களும் நிறைவேறியதா என்பதுதான் படத்தின் கதை.
மதுரவீரன் எனத் தலைப்பு வைத்திருந்தாலும், சண்முகப்பாண்டியனின் அறிமுகம் ஆர்ப்பாட்டமாய் இல்லாமல் கதையின் போக்கிற்குச் சாதாரணமாய் அமைத்திருப்பது ஆசுவாசத்தைத் தருகிறது. துரையாகச் சண்முகப்பாண்டியன் அடக்கியே வாசித்துள்ளார். 'பூ' படத்தில் ஒளிப்பதிவாளராக அறிமுகமாகிய P.G.முத்தையா, இப்படத்தை இயக்கி ஒளிப்பதிவும் செய்துள்ளார். எடுத்துக் கொண்ட கதைக்கு வஞ்சனை செய்யாமல் நிறைவானதொரு அனுபவத்தைத் தருகிறார்.
2017இன் தொடக்கத்தில் ஜல்லிக்கட்டுக்கு நடந்த போராட்டத்தைக் கதைக்குக் கச்சிதமாய் முடிச்சுப் போட்டுவிடுகிறார். ஜல்லிக்கட்டில் சாதி எப்படிக் குறிக்கிடுகிறது என்பதை மிக அழகாகச் சொல்லியுள்ள...


