உறியடி விமர்சனம்
கண்கள் கட்டப்பட்ட நிலையில், கம்பைச் சுழற்றி ஊசலாடும் பானையை குறி வைக்க வேண்டிய விளையாட்டின் பெயர் உறியடி. அப்படி மறைந்திருந்து அரசியல் செய்யும் ஆட்களை நாயகர்கள் குறி வைக்கிறார்கள் என்ற குறியீடுதான் படத்தின் தலைப்பு.
மனதை உலுக்கும் ரத்தமும் சதையுமுமான கதை. சமூகத்தின் மீது அச்சத்தையும் நம்பிக்கையின்மையும், அதீதமான பயத்தையும் ஏற்படுத்துகிறது. சாதீய நஞ்சு ஊறிப் போன மனங்களையும், அம்மனங்களை முதலீடு செய்ய நினைக்கும் முதலாளிகளும், அவர்கள் தம் குயுக்திகளையும் பற்றிப் படம் பேசுகிறது. அத்தனையையும், படிப்பதை விட சந்தோஷமாக இருப்பது முக்கியமென நினைக்கும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களைச் சுற்றி நடப்பதே படத்தின் சிறப்பு. மிகுந்த விறுவிறுப்புடன் படம் பயணித்து சட்டென இடைவேளை வந்துவிடும் பிரமையை ஏற்படுத்தி விடுகிறது. அதற்கு முக்கிய காரணம், இடைவேளையில் வரும் சண்டைக்காட்சியே! மயிர்கூச்செறிய வைக்கும் காட்சி அ...