Search

தமிழ்படம் விமர்சனம்

Thamizh-Padam-movie-review

“தமிழ்படம்” – பொதுப்பெயரையும், தனிப்பெயரையும் ஒருங்கே பெற்றுள்ள முழுநீள நகைச்சுவைப் படம்.

சினிமா பட்டி என்னும் ஊரில் ஆண் குழந்தைகளைக் கள்ளிப் பால் கொடுத்துக் கொல்கின்றனர். அங்கு ஓர் ஆண் குழந்தை, நாயகன் ஆகும் ஆசையோடு பிறந்து சென்னை வருகிறது. அந்தக் குழந்தை தனது லட்சியத்தில் வென்றதா என்பது தான் படத்தின் முடிவு.

சிவா. சென்னை 600028 மற்றும் சரோஜாவைத் தொடர்ந்து நாயகனாக விஸ்வரூபம் எடுத்துள்ள படம். முந்தையப் படங்கள் போல் அல்லாமல் தனி நாயகனாக இப்படத்தில் கலக்கியுள்ளார். கேலி செய்த பின் பொதுவாக அனைவருக்கும் எழும் மென்னகையை எப்பொழுதும்  முகத்தில் அணிந்தவாறே படம் முழுவதும் வருகிறார். கதாபாத்திரத்திற்கு மிகவும் பொருந்தியதோடு மட்டுமல்லாமல் படத்தின் தன்மையை முழுவதுமாக உள்வாங்கி வெளிப்படுத்தியுள்ளார்.

திஷா பாண்டே அறிமுக கதாநாயகியாக. திரைக்கதையில் அடித்து வரப்படும் சிறு மீன். அவ்வளவே!! பரிச்சயமற்ற முகம் என்பதால் மனதிலும் பதிய மறுக்கிறார்.

வெண்ணிற ஆடை மூர்த்தி, எம்.எஸ்.பாஸ்கர், மனோ பாலா என்ற மூவர் கூட்டணி விளம்பரங்களில் தலையைக் காட்டி சில எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தனர். பெரிய அளவில் நகைச்சுவைக்குத் துணை புரியவில்லை எனினும் நாயகனின் கல்லூரி படிக்கும் நண்பர்களாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது. நாயகனின் குழந்தைப் பருவம் முதல் வாலிபப் பருவம் வரை ஓரே வயதிலியே இருக்கும் பாட்டியாகப் பரவை முனியம்மா. சில நிமிடங்கள் எனினும் டெல்லி கணேஷ், பொன்னம்பலம், சண்முக சுந்திரம், வி.எஸ்.ராகவன் எனச் சகலரும் நிறைவாக நடித்துள்ளனர்.

சி.எஸ்.அமுதன். படத்தின் இயக்குநர் எனினும் இப்படத்தைப் பொறுத்தவரை இவரே தான் நாயகன். தமிழ்ப்படங்களைப் பகடி செய்து எடுக்கப்பட்ட படம் என்று தெரிந்தே அரங்கம் புகும் ரசிகர்களை மிக நன்றாகவே திருப்திப்படுத்தி உள்ளார். ஆரம்பம் முதல் இறுதி வரை ரசிகர்களைத் தொய்வுறச் செய்யாமல் சிரித்துக் கொண்டேயிருக்கமாறு பார்த்துக் கொள்கிறார். கதை என்ற ஒன்று படத்தில் இல்லையெனினும் அருமையான காட்சி அமைப்புகளால் அக்குறையைக் கலைந்துள்ளார். எந்தெந்தப் படத்தினை வம்புக்கு இழுக்கின்றார் எனப் பார்ப்பவர்கள் அனைவரையும் பட்டியல் போட வைத்து விடுகிறார். முன்பு விளம்பர இயக்குநராகப் பணியாற்றினார் என்பதாலோ என்னமோ ‘ஹட்ச்’ விளம்பரத்திற்கு வந்து கொண்டிருந்த நாய் மற்றும் தற்போது ‘வொடஃபோன்’ விளம்பரத்திற்கு வரும் ‘ஜூஜூ’ என அவற்றையும் கேலி செய்துள்ளார். ஓரே பாட்டில் நாயகன் பணக்காரன் ஆவதைக் காட்சிப்படுத்தியிருப்பது நையாண்டியின் உச்சம். சிவா விமான நிலையம், சிவா இரயில்வே நிலையம், சிவா பீச், சிவா மின்சார வாரியம் என வரிசையாகக் காட்டி விட்டு பின்பு அனைத்தையும் சிவாவின் பின்புறம் ஒன்றாக ‘கூகிள் மேப்ஸ்’சில் உபயோகப்படுத்தப்படும் சிவப்புப் பலூன்கள் மூலம் காட்டியிருப்பதைக் குறிப்பிட்டுச் சொல்லலாம்.

பாரம்பரிய தமிழ்ப் படங்களை எள்ளி நகையாடியுள்ள இயக்குநர், தமிழ்ப் பட வியாபார பாரம்பரியங்களின் ஒன்றான குத்துப் பாட்டை கிண்டல் செய்யாமல் உபயோகிக்கிறார். அதை ஈடு செய்யும் வகையில் அடுத்த காட்சிகளிலேயே மீண்டும் சமன் செய்து விடுகிறார். ஓய்வு பெற்ற நடிகையான கஸ்தூரி குத்தாட்ட பாட்டில் மட்டும் தோன்றி பின் மீண்டும் மாயமாகிறர்.

நீரவ்ஷா. படத்தின் மிகப் பெரிய பலம் இவரது ஒளிப்பதிவு. திரைக்கதையோடு கை கோர்த்துக் கொண்டு சுற்றி வரும் கேமிராவும் தன் பங்குக்கு ஏனைய தமிழ்ப் படங்களை நக்கல் செய்கிறது. எம்.எஸ்.பாஸ்கரின் உள்ளாடையில் தெரியும் ‘சுடர்மணி’ பெயர், ‘பி.ஆர்.எஸ். கள்ளிப் பால்’ என்ற அட்டையில் சுத்தமானது, சுகாதாரமானது எனத் தெரியும் எழுத்துக்கள் என ரெட் ஓன் கேமிராவின் துல்லியம் பிரமிக்க வைக்கிறது. 

தமிழ்ப்படப் பாடல்களில் இதுவரை அர்த்தம் புரியாமல் வந்து கொண்டிருந்த வார்த்தைகள் அனைத்தையும் தொகுத்து, “ஓமகசீயா..” எனத் தொடங்கும் பாடலை அளித்து ரசிகர்களை அர்த்தத்துடன் சிரிக்க வைக்கின்றனர். இசையமைப்பாளர் கண்ணனும் தன் பங்கிற்குப் படத்தின் எள்ளல் தன்மையை மேலும் உறுதி செய்கிறார்.

எந்த அளவிற்கு முடியுமோ அந்த அளவிற்கு தமிழ்ப் படங்களைக் கிண்டலடித்துள்ளனர். படம் பார்ப்பவர்களால் தான் சிரித்துச் சிரித்து மாளவில்லை. திரையரங்குகளில் எழும் சிரிப்பொலி இனி வரவிருக்கும் தமிழ்படங்களில் உள்ள மிக அடிப்படை குறைகளை கலைய வைக்கும் என நம்பலாம்.