
இந்தப் படத்தின் நாயகன், ‘பப்ளிக் ஸ்டார்’ துரை சுதாகர் எனும் அறிமுக நாயகன் ஆவார். தப்பாட்டம் ஆடுபவராக நடித்துள்ளார். வாழ்க்கையைத் தப்பாக ஆடினால் தோற்று விடுவோம் என்றும் தலைப்பினைப் பொருள் கொள்ளலாம்.
படத்தின் காலமும் கதையும் 1984 இல் நிகழ்வதாகப் படம் தொடங்கும் பொழுதே சொல்லப்படுகிறது. கதாபாத்திரங்கள் அனைவரும் சாராயக்கடையே கதியென்ன உள்ளார்கள். வேறு வேலையின்றிக் குடித்து விட்டு சலம்புவதுதான் நாயகனுக்கும், அவன் கூட்டாளிகளுக்கும் வேலை என்று முதற்பாதி முழுவதும் காட்டுகிறார் இயக்குநர் முஜிபூர் ரஹ்மான். தப்பாட்டத்தின் சிறப்பை வசனமாகக் கூட எங்கேயும் பதியாதது உறுத்துகிறது.
நாயகனின் மாமாவாக இயக்குநரும் வேடம் ஏற்று நடித்துள்ளார். அவர் சாப்பிட்டு விட்டு பீடியைப் புகைக்க நினைக்கும் பொழுதெல்லாம், குடிக்காரர்கள் யாரேனும் வந்து அவரைத் தொந்தரவு செய்கிறார்கள் எனக் கதைக்குத் தேவையில்லாக் காட்சிகளை எல்லாம் ஒன்றுக்கு இருமுறை வைத்து படத்தின் முதல் பாதி நீளத்தைப் படாதபாடுப்பட்டு இழுக்கிறார்.
நாயகன் மீது உயிரையே வைத்திருக்கிறாள் அவனது அக்கா மகளான நாயகி. சுபமாய்க் கல்யாணமும் நடந்தேறுகிறது. நாயகனும் நாயகி மீது பயங்கர காதல். இப்படியாகச் செல்லும் கதையில், இடைவேளையின் பொழுது தான் கதையும், கதையில் திருப்பமும் தொடங்குகிறது. யாரோ ஒருவரின் பேச்சைக் கேட்டு மனைவியின் நடத்தை மீது சந்தேகம் கொள்கிறான் நாயகன். பின் என்னாகிறது என்பதே படத்தின் இரண்டாம் பாதி.
கொஞ்சம் வெகுளியாக அல்லது கிறுக்கு போல் காண்பிக்கப்பட்டிருக்கும் நாயகி டோனா முதல் பாதி முழுவதும் சோதிக்கிறார். நாயகியான கதாபாத்திர வார்ப்பை இயக்குநர் முஜிபூர் ரஹ்மான், மற்ற பாத்திரங்களைப் போலவே சீரியஸாகவே காட்டியிருக்கலாம். அக்குறையையும் இரண்டாம் பாதியில் போக்கிவிடுவது ஆறுதல். நாயகன் துரை சுதாகர், கதாபாத்திரத்தை உள்வாங்கி யதார்த்தமாக நடித்துள்ளார்.
வில்லன் போல் சித்தரிக்கப்படும் ஊர்த் தலைவரின் சபல மகன், “உனக்கெங்கடா போச்சு புத்தி?” எனக் கேட்டுக் குணசித்திர நடிகராகப் பரிணமிக்கிறார். தப்பாட்டத்தில் யார் நாயகனோ அவரே வில்லனும் கூட! தன் மகளுக்குத் தம்பியிடமும் அம்மாவிடமும் குமுறும் கதாநாயகியின் அம்மா கதாபாத்திரத்தில் நடித்தவர் தன் பங்கை அற்புதமாகச் செய்துள்ளார்.
சினம் மட்டுமல்ல சந்தேகமும் சேர்ந்தாரைக் கொல்லும் கொடிய கனல் என்பதே தப்பாட்டம் படம் சொல்லும் கருத்து.