Search

கந்தசாமி விமர்சனம்

Kandhaswamy

 
நாளை.. நாளை..
என
நாட்களை தள்ளி
ஒரு வழியாக
“கந்தசாமி” -ரசிகர்களை
கலக்க களம்
குதித்து விட்டார்
கடந்த வெள்ளியன்று.

எப்படியும் கலக்குவார்
என எதிர்பார்ப்பில்
எலும்புகள் நொறுங்க
டிக்கெட் வாங்கிய
ரசிகர்கள்..
    களிப்படைந்தனரா? இல்லை..
    கடியடைந்தனரா?

அதற்கு
‘ஆம்’, ‘இல்லை’யென
ஆருடம்
வார்த்தைகள் இரண்டுக்குள்
வரையுறைக்க முடியாது.

எதிர்பார்ப்புகள் அதிகமெனில்
ஏமாற்றம்.
எதிர்பார்ப்பற்று போனால்
‘எஞ்சாய்மென்ட்’.

“கந்தசாமி”- மூன்று வருட உழைப்பு, கிராமங்களை தத்தெடுக்கும் நூதன விளம்பரம், பட பூஜை அழைப்பிதழை திறந்தால் ‘ட்ரெய்லர்’ என ஆரம்பத்தில் இருந்தே எதிர்பார்ப்பை ஆழமாக விதைத்து விட்டது.

ரமணா, அந்நியன், சிவாஜி என மூன்று வெற்றிப் பட கதைகளின் சமச்சீரான கலவை தான் கந்தசாமியின் கரு. பணமும், உழைப்பும் அபிரிதமாக செலவிடப் பட்டிருக்கிறது. ஆனால் அதற்கு ஒத்து ஓதுவது போல் திரைக்கதை அமையாதது மட்டும் தான் சிறு குறை. (கிணற்றில் நீர் இறைத்து ஓட்டை வாலியில் நிரப்புவது போலே!!)

வேண்டுதல்களை எழுதி திருப்போரூர் கந்தசுவாமி கோயில் மரத்தில் கட்டி விட்டால், அவை அனைத்தும் ஆச்சரியம் கொள்ளும் வகையில் நிறைவேறுகிறது. சேவல் போன்ற தலை அலங்காரமும், நீண்ட இறக்கை போன்ற உடை அலங்காரமும், கண்களை மறைக்க முகமூடியும், வெளவால் போல் அந்தரத்தில் தொங்கியும், கோழி போல் கொக்கரித்துக் கொண்டும் அறிமுகமாகிறார் கந்தசாமி. அவர் “கந்த”சாமி அல்ல கருப்பு பணங்களை பதுக்கி வைப்பவர்களிடமிருந்து மீட்டெடுக்கும் சி.பி.ஐ. ஆசாமி. சி.பி.ஐ. யாக பணத்தை எடுத்து நண்பர்களின் உதவியோடு கடவுள் பெயரால் பணத்தை ஏழைகளுக்கு தந்து உதவுகிறார்.

கருப்பு பணத்தை இழந்த தந்தையின் நிலை கண்டு துடித்து, அவர் துயர் போக்க அரசாங்க அலுவலகத்திற்கே நேராக சென்று விக்ரம்மை பழிவாங்க துடிக்கும் ஸ்ரேயா. கடவுள் பெயரால் மக்களுக்கு உதவும் கந்தசாமியை கண்டுபிடிக்க டி.ஐ.ஜி. பரந்தாமனாக பிரபு வருகிறார். அடி வாங்கி வாங்கியே மக்களை சிரிக்க வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில் மீண்டும் வடிவேலு. மெக்சிகோ வங்கியில் இருக்கும் இந்திய கருப்பு பணத்தை எடுப்பதற்காக விகரம், ஸ்ரேயா, கதை, இயக்குனர் சுசி அனைவரும் மெக்சிகோ பயணிக்கின்றனர். அங்கே ஒரு பாட்டு, ஒரு சண்டை. மீண்டும் சென்னை. ஆதாரங்களை அழித்து விட்டு சவால் விடும் கொழுத்த பணக்காரரை ஊடகங்கள் முன் சி.பி.ஐ. ஆபீசர் விக்ரம் நடு ரோட்டில் வைத்து துகிலுரிக்கும் பொழுது, சட்டம் தன் கடமையை செய்கிறது. பிரபு விக்ரம்மை பிடித்து நீதி மன்றத்தில் நிறுத்த, தீர்ப்பு விக்ரமுக்கு சாதகமா அல்ல பாதகமா என்பது தான் கதை.

பிண்ணனி இசை சோபிக்கவில்லை. ஸ்ரேயாவின் டப்பிங் குரல் பொருந்தவில்லை. படத்தின் நீளம் அதிகம். எடிட்டர் நிறைய இடத்தில் கத்திரிக் கோலை நன்றாக பயன்படுத்தவில்லை. இக்குறைகளை நீக்கி இருந்தால், 2009 ஆம் ஆண்டின் மிக சிறந்த கமர்ஷியல் படமாக கந்தசாமி இருந்திருக்கும்.




Leave a Reply