32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

அர்த்தநாரி விமர்சனம்

Dinesh R சேலம் Published: 07/07/2016 2 நிமிட வாசிப்பு Updated: 13/07/2016 சினிமா
எழுத்து அளவு:

Arthanaari review

இன்ஜினியரான கார்த்திக்கும், காவல்துறை உயரதிகாரியுமான சத்யப்பிரியாவும் காதலிக்கிறார்கள். சத்யப்பிரியா எடுத்து நடத்தும் ஒரு வழக்கும், தன்னை வளர்த்த செல்வமாணிக்கம் ஐயாவின் மரணத்திற்குக் காரணமானவரைத் தேடும் கார்த்தியின் தேடலும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போல் ஒன்றோடு ஒன்று இணைந்துள்ளது. தனித்தனியாக இருவரும் இயங்கினாலும், காதலர்கள் அர்த்தநாரி போல் இணைந்து வேட்டையாடுவதாகப் பதற்றம் கொள்கிறார் வில்லன். இந்தக் கண்ணாமூச்சி வேட்டை எப்படி முடிகிறது என்பதுதான் படத்தின் கதை.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

கல்வியின் அவசியமும், குழந்தைத் தொழிலாளிகளின் அவலமும் படம் நெடுகே சொல்லப்படுகிறது. சொல்பவராக செல்வமாணிக்கம் எனும் பாத்திரத்தில் நாசர் நடித்துள்ளார். அவர் பலமுறை ஏற்று சலித்து விட்ட ஒரு பாத்திரம் என்பதால் படத்தில் அவர் அவ்வளவாக ஈர்க்கவில்லை. அதனாலென்ன, ரசிகர்களை எப்படியும் ஈர்த்து விடுவதென்ன ‘நான் கடவுள்’ ராஜேந்திரனை இறக்கியுள்ளனர். அதேதான் இப்போதைய ட்ரெண்ட். ஆனால், கதாபாத்திர உருவாக்கங்களில் இயக்குநர் சரி வர கவனம் செலுத்ததால், ஜோசியத்தில் பிரியமுள்ள ரெளடி அஞ்சப்பனாக வரும் ராஜேந்திரனும் ஏமாற்றம் அளிக்கிறார். வலிந்து திணிக்கப்பட்ட பாத்திரமாகத் திரைக்கதையோடு ஒட்டாமல் வருகிறார்.

சத்யப்பிரியாவாக அருந்ததி நடித்துள்ளார். படத்தின் தொடக்கக் காட்சியும் இறுதிக் காட்சியும் என்கவுன்ட்டராக உள்ளது. போலீஸ் என்றாலே என்கவுன்ட்டர் தானென முடிவுக்கு வந்துவிட்டது போலும் தமிழ் சினிமா. நாயகனும் நாயகியும் முதல் முறையாகச் சந்திக்கும் காட்சி கூடக் கவித்துவமாக இல்லாமல், அவசர அவசரமாக நகர்கிறது. முழுப் படத்திலுமே, ஒரு காட்சியில் இருந்து இன்னொரு காட்சிக்கு இயல்பாகச் செல்லாத படத்தொகுப்பின் குறை படத்தோடு ஒன்ற முடியாமல் தடுக்கிறது.

நாயகனாக அறிமுகமாகியுள்ளார் ராம்குமார். இடைவேளையின் பொழுது, நாயகன் தன் வாழ்க்கையையே உலுக்கும் ஒரு விஷயத்தைக் கேட்க நேரிடுகிறது. அந்தக் கணத்தின் ஆற்றாமையும் கோபத்தையும் வெளிப்படுத்தும் அனுபவம் வாய்ந்தவராக அவர் இல்லாத பொழுதும், இயக்குநர் தமிழ் சினிமாவின் பழங்கால மரபுகளின் படி அவர் முகத்திலேயே க்ளோஸ்-அப் வைத்து முடித்திருக்கிறார். பாடல் காட்சிகளில் செலுத்திய உழைப்பும் அக்கறையும் படத்திலும் பிரதிபலித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

படத்தைத் தயாரித்துள்ள A.S.முத்தமிழ் தான் படத்திற்குக் கதையும் எழுதியுள்ளார். வலுவற்ற திரைக்கதையாலும், சுவாரசியமற்ற வசனங்களாலும் படம் கதையின் விறுவிறுப்பைக் குறைத்து விடுகிறது.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.