Search

ஆடுகளம் விமர்சனம்

Aadukalam

ஆடுகளம் – விளையாடுபவர்கள், பயிற்சியாளர்கள், ஆதரவாளர்கள், நடுவர்கள், ரசிகர்கள், ஆடுகளத்தினைப் பராமரிப்பவர்கள் என ஆடுகளம் வகை வகையான மனிதர்களை எப்பொழுதுமே  தன்னுடன் வைத்திருக்கும். அதனாலேயே ஆடுகளத்தின் ஆரவாரத்தினை, ஆளரவமற்ற இரவிலும் உணர முடியும். காரணம் மனிதர்கள் அனைவரும் சதா விளையாடிக் கொண்டே தான் இருக்கிறார்கள். ஆடுகளங்கள் தான் ஒருவரிலிருந்து மற்றவருக்கு மாறுபடுகிறது. வெற்றிமாறன் சேவல் சண்டை நடக்கும் திடல், அத்திடலில் உள்ள மனிதர்களின் மனம் என இரண்டு ஆடுகளத்தினைத் தனது படத்தில் காட்டியுள்ளார்.

பேட்டைக்காரர் தயார்ப்படுத்தும் சேவல்களும், அவைப் பெறும் வெற்றிகளும் அப்பிராந்தியத்தில் அவருக்கென ஒரு தனி செல்வாக்கை ஏற்படுத்துகின்றன. காவல்த் துறை அதிகாரியான ரத்தினசாமி தனது தாயாரின் பழம்பெருமை புலம்பல்களைப் பொறுக்க முடியாமல், தாயாரின் கடைசி ஆசையாக எண்ணி பேட்டைக்காரருடன் சேவல் சண்டைக்கு ஒரு யுத்தத்திற்குத் தயாராவது போல் ஆயத்தம் ஆகிறார். பதினொரு சுற்றுகளில் தோற்கும் ரத்தினசாமி, பெங்களூருவில் இருந்து மூன்று சேவல்களைப் போட்டிக்காக தருவித்து களத்தில் இருக்கிறார்.

பேட்டைக்காரனின் சிஷ்யப் பிள்ளைகளில் ஒருவனான கருப்பு, தான் வளர்க்கும் சேவலினைச் சண்டைக்கு எடுத்துக் கொள்ளச் சொல்கிறார். அது கொல்லப் பட வேண்டிய சேவல் என பேட்டைக்காரன் மறுத்தும், கருப்பு அதை மீறி தனது சேவலை இரண்டு முறை களம் இறக்கி வெல்கிறான். மூன்றாம் முறையும் கருப்பின் சேவலைக் களத்தில் நிறுத்தும்படி தூபம் போடுகிறார் ரத்தினசாமி. அச்சமயத்தைப் பயன்படுத்தி கருப்பின் நலம் விரும்பியான துரை மூன்று லட்சம் ரூபாய் ரத்தினசாமி கொடுக்க சம்மதித்தால், கருப்பின் சேவல் மூன்றாம் முறையும் சண்டையில் நிறுத்தப்படும் என உடன்படிக்கையை முன் வைத்து ரத்தினசாமியையும் சம்மதிக்க வைக்கிறார்.

வெற்றியை விடப் புகழ் தரும் போதை மனிதனை மேலும் அடிமைப்படுத்துகிறது. அந்தப் போதை தடைப்படும் நேரத்தில், மனம் வெறிக் கொள்ளச் செய்கிறது. பேட்டைக்காரர் தனது அனுபவத்தால் கருப்பின் சேவல் இரண்டாம் சுற்றிலேயே இறந்து விடும் என்று கணித்த ஆருடம் பொய்த்ததுமே, கருப்பு தன் புகழுக்கு களங்கம் விளைத்து விட்டதாக கருத தொடங்கிறார். கருப்பின் சேவல் ஈட்டி தரும் வெற்றி பேட்டைக்காரரையே சேருகிறது எனினும், கருப்பிற்கு கிடைக்கும் புகழும் பணமும் பேட்டைக்காரருக்கு கருப்பின் மேல் காழ்ப்புணர்ச்சி வளர காரணமாகிறது. எல்லாவற்றையும் இழந்து தனி மரமாக நிற்பதற்கு கருப்பு தான் காரணம் என நம்பும் பேட்டைக்காரர், கருப்பினை உறவாடிக் கெடுக்கிறார்.

பேட்டைக்காரராக ஈழத்துக் கவிஞர் வ.ஜ.ச.ஜெயபாலன் நடித்துள்ளார். ஆரம்பத்தில் அவர் பேசும் பொழுதெல்லாம் ராதாரவியின் குரலாக தனித்துத் தெரிகிறது. சில காட்சிகளுக்குப் பின் ராதாரவி மறைந்து, பேட்டைக்காரராக மட்டுமே மனதில் வியாபிக்கிறார். தள்ளாடியபடி வந்து ரத்தினசாமியின் சட்டையைப் பிடிக்கும் பொழுதாகட்டும், சாவு வீட்டில் வந்து சேவல் சண்டை நடந்தே ஆக வேண்டும் என முரண்டுப் பிடிக்கும் பொழுதாகட்டும் கருப்பின் உடன்பிறவா அண்ணன் துரையாக வரும் கிஷோரின் டோப்பா முடி எங்குமே கண்ணை உறுத்தாமல் தன் நடிப்பால் கவர்கிறார். சமுத்திரக்கனியின் குரலும் கிஷோருக்காக தொடக்கத்தில் ஒலித்து பின் கிஷோரின் குரலாகவே மாறி விடுகிறது.

முதல் பாதி படத்தில் கருப்பின் சேவல் தான் நாயகன். எவ்வளவு கொத்துப் பட்டாலும் தாங்கிக் கொள்ளும் மிக நல்ல சேவலாக இருக்கிறது. சேவலின் ஆக்ரோஷத்திற்கு உபயம் பல்லிளிக்காத கணினி வரைவியல். சேவல் சண்டையினைப் பற்றியதொரு அருமையான தொகுப்பாய் முதல் பாதி அமைந்துள்ளது. மனித மனதில் தேங்கி உள்ள போர்க் குணங்களை அவர்கள் வளர்க்கும் சேவல்களில் ஏற்றி, அவைகளை மோத விடும் பழக்கம் உலகம் முழுவதும் பரவலாக காணப்படுகிறது. பல நாடுகளில் சேவல் சண்டை தடைச் செய்யப்பட்டாலும்.. தென்னிந்தியா, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (பிலிப்பைன்ஸ், தாய்லாந்து..), மெக்சிகோ, பெரு, வெனிஜுலா, பனாமா, கொலம்பியா, பசிஃபிக் தீவுகள் என இன்னும் பல இடங்களில் சேவல் சண்டை பிரபலமாய் உள்ளது.

காதல் அற்ற தமிழ்ப் படத்தினை நாடு கடத்தி விடுவார்கள் என்ற பயம் கோலிவுட்டினரை விட்டு அகலாது போலும். அந்தப் பயத்தின் விளைவாக நித்திய புன்னகையுடன் ஐரீனாக திரையில் தோன்றுகிறார் டாப்ஸீ. டைட்டானிக் பட பாணியில்.. நாயகி வீட்டில் விருந்து முடிந்ததும், நாயகனுடன் நாயகி சாலையோர கடைகளில் உணவு உண்கிறார். கைகளைக் கழுவிய பின்னர் தான் அணிந்திருக்கும் பாவாடையிலேயே துடைத்துக் கொண்டு, நாயகனை நண்பனாக ஏற்றுக் கொள்கிறார். நாயகனின் தாய் இறந்தவுடன், உடன் இருப்பேன் என வாக்களிக்கிறார். அதற்காக உயிரையும் கொடுக்க முன் வருகிறார். ஆனால் அவர் தந்தை எந்தவித சலனமும் காட்டாதது தான் ஏன் என்று தெரியவில்லை.

நாயகியின் ஆள்காட்டி விரல் தன்னை காதலிப்பதாக சுட்டியவுடன் தனுஷ் போடும் ஆட்டம் அருமை. யாத்தே.. யாத்தே.. என்ற பாடலிற்கு திரையரங்கில் இளைஞர் பட்டாளம் குதூகலிக்கிறது. என்பு தோல் போர்த்திய சதையற்ற உடம்போடு இருக்கும் தனுஷை விட்டால் இப்பாத்திரத்திற்கு வேறு எவரும் பொருந்தவே மாட்டார் என அனைவரும் ஏக மனதாக ஏற்கும்படி நடித்துள்ளார். எப்பொழுதும் போல் எத்தனைப் பேர் வந்தாலும் அடி பின்னுகிறார்.

ஆடுகளம்வன்முறைக்கான வாய்ப்புகள் அதிகம் இருந்தும் ஆட்டத்தினைத் தேர்ந்த தர்மவான் ஒருவர் போல் முடித்து வைக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.




Leave a Reply