Shadow

DRAGON விமர்சனம்

திரையரங்கில் பார்க்க வேண்டிய ஜாலியானதொரு படம்.

கெட்டவனாகப் பொறுக்கியாக இருந்தால்தான் கெத்து என கல்லூரியில் அரியர் வைப்பதைப் பெருமையாக நினைக்கிறான் D.ராகவன். அதன் பலனாக வாழ்க்கை அவனை எப்படிலாம் புரட்டுகிறது என்பதுதான் படத்தின் கதை.

லவ் டுடே படத்திற்குப் பிறகு, மற்றுமொரு வெற்றிப்படத்தில் தன்னை அழகாகப் பொருத்திக் கொண்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன். படத்தின் முதற்பாதியில் ஏகத்திற்கும் சிகரெட் பிடிக்கிறார் பிரதீப் ரங்கநாதன். ஐடியில் இணைந்த பின், பசங்களிடம் ஒரு பளபளப்பும் மினுமினுப்பும் ஏற்படும். ஒரு கோடி ரூபாய்க்கு வீடு, ஒளடி கார் வாங்கினாலும், உருப்படாமல் இருந்த பொழுது எப்படி இருந்தாரோ அப்படியே அவரைக் காட்டுகின்றனர். நல்லவேளையாகப் புறத்தில் மட்டுமே அப்படி, அகத்தில் அவரிடம் ஏற்படும் மாற்றமே படத்தை மிகவும் அழகாக்கியுள்ளது.

கீர்த்தியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். வழக்கமான படமாக மாறிவிடாமல் படத்தினை ஒரு படி உயர்த்துவது இவரது கதாபாத்திர உருவாக்கம்தான். தறி கெட்டுப் போகும் சமயத்தில் எல்லாம், படத்தையும் டிராகனையும் இழுத்து சரியான பாதைக்கு அழகாகக் கொண்டு போகிறார். டிராகனுக்கு நிச்சயிக்கப்படும் பல்லவியாக கயாடு லோஹர் நடித்துள்ளார். நாயகனுக்கு ஜோடியாக நடித்திருந்தாலும், கதாநாயகி அந்தஸ்தை அனுபமாவே தக்கவைக்கிறார்.

கெளதம் வாசுதேவ் மேனனை நடனமாட வைத்து அழகு பார்த்துள்ளனர். ஆனால் படத்தின் ஸ்வீட் சர்ப்ரைஸ், கண்களை உருட்டி மிரட்டாத மிஷ்கினின் கதாபாத்திரமே! படம் முடியும் பொழுது, மிஷ்கினை மறந்து அவரைக் குணசித்திர நடிகராக ஏற்றுக் கொள்ளுமளவிற்குக் கச்சிதமாக வேலை வாங்கியுள்ளார் இயக்குநர். லிப்ரா ப்ரொடக்ஷன்ஸ் Fat man ரவீந்தர், அவர் ஏற்ற கதாபாத்திரத்தை ரசிக்கும்படி செய்துள்ளார். நாயகனின் அம்மாவாக வரும் இந்துமதிக்கு, வினோதினி வைத்தியநாதனை டப்பிங் தர வைத்திருப்பதைத் தவிர்த்திருக்கலாம். அது, படம் பார்க்கும் அனுபவத்தில் ஒரு சிறு நெருடலை ஏற்படுத்துகிறது.

படத்தின் மிகப் பெரிய பலம் லியோன் ஜேம்ஸின் இசை. இளமை துள்ளலுக்கு உத்திரவாதமளிக்கும் பின்னணி இசையும், பாடல்களையும் அளித்துள்ளார். நிகேத் பொம்மிரெட்டியின் ஒளிப்பதிவு படத்திற்கு ஒரு பிரம்மாண்டத்தை நல்கியுள்ளது. 

படம் ஒரு முடிவை எட்டிய பிறகு, பிரதீப் ரங்கநாதனும், அவரது அப்பாவாக நடித்துள்ள ஜார்ஜ் மரியானும் பேசிக் கொள்ளும் ஒரு காட்சி வருகிறது. படத்தின் ஸ்டாண்டேர்டை அலேக்காகத் தூக்கி வேறொரு தளத்தில் வைக்கிறது. பலரின் கூட்டு முயற்சியால் ஏற்படும் மேஜிக்கைப் படம் சரியாகத் தொட்டுள்ளது. அந்த மேஜிக்கை மீறி கன்டென்ட்டாகவும் படம் ஸ்ட்ராங்காக உள்ளது. அறமற்றதை எல்லாம் நாயகத்துவமாகக் கட்டமைக்கப்படும் சூழலில், அறத்தின்பால் நிற்பதால் கிடைக்கும் நிம்மதியையும் மகிழ்ச்சியையும் பற்றி ஜாலியாக ரசிக்கும்வண்ணம் சொல்லி அசத்தியுள்ளார் அஷ்வத் மாரிமுத்து.