Shadow

ஆரம்பம் விமர்சனம்

Arambam

அஜீத், விஷ்ணுவர்தன், சுபா, ஆர்யா, நயன்தாரா என ஏகத்துக்கும் கூட்டப்பட்ட எதிர்பார்ப்பு, கிஞ்சித்தும் குறையாமல் பூர்த்திச் செய்யப்பட்டுள்ளது. அஜீத் ரசிகர்களுக்கும், தமிழ்த்திரை  ரசிகர்களுக்கும் இந்த தீபாவளி நல்லதோர் ஆரம்பமாக இருக்கும்.

ஊழல் செய்யும் அரசியல்வாதி ஒருவர் லஞ்சம் வாங்கிக் கொண்டு, தீவிரவாதி ஒருவனைத் தப்பிக்க வைக்கப் பார்க்கிறார். பின் என்னானது என்பதுதான் கதை.

அமர்க்களமாக அறிமுகமாகிறார் அஜித். மங்காத்தாவில் மிச்சம் வைத்திருந்த வில்லத்தனத்தை இப்படத்தில் தொடர்கிறார். தனது வயதிற்கேற்ற பாத்திரத்தில் தோன்றுகிறார். இளம் வெண்தாடியிலும் செம ஸ்டைலிஷாக இருக்கிறார். ‘டொக்.. டொக்..’ என சத்தமிட்டு அனைவருக்கும் டைம் ஃபிக்ஸ் செய்கிறார். படத்தில் இவருக்கு ஜோடியும் இல்லை; டூயட்டும் இல்லை. நாயகனாக நடிப்பவருக்கு 60 வயது என்றாலும், திரையில் கண்டிப்பாக 20>30 வயதுடைய நாயகி, காதலியாக இருந்தே ஆகவேண்டுமென்ற திரை இலக்கணத்தை மீண்டுமொருமுறை  தகர்த்தெறிந்துள்ளார்.  இந்த இலக்கண மீறல் மற்றவர்களாலும் முன்னெடுக்கப்பட்டால், நாம் கொஞ்சம் பிழைத்துக் கொள்ளலாம்.

‘ஹேக்கர்’ அர்ஜூனாக ஆர்யா. சுவிஸ் பேங்க், துபாய் பேங்க் என இஷ்டத்திற்குப் புகுந்து விளையாடுகிறார். இவருக்கான ‘குண்டு’ பிளாஷ்பேக்கும், தாப்ஸியுடனான சிறகு முளைக்கும் டூயட்டும் ரசிக்க வைக்கின்றன. தாப்ஸி, தான் தோன்றும் காட்சிகளில் புன்னகைக்கவோ அழவோ மட்டும். 

தமிழ்ப்படங்களில் ஒரு கதாபாத்திரம் நாயகனுக்கு உதவியாக கடைசி வரை இருக்கும். க்ளைமேக்ஸ்க்கு முந்தைய காட்சியில் அவரை வில்லன்கள் கொன்று விடுவார்கள். அப்படியொரு கதாபாத்திரம் தான் நயன்தாராவுக்கு. ஆனால் க்ளைமேக்சுக்கு முந்தைய காட்சியில் அவர் கொல்லப்படவில்லை என்பது ஆறுதல். 
அஜீத்தின் நண்பராக, சிறப்புத் தோற்றத்தில் ராணா தக்குபாத்தி நடித்துள்ளார். இந்த ஒட்டுமொத்த கதையின் ஆரம்பம் இவரிலிருந்து தான் தொடங்குகிறது. படத்தினை முடிப்பவர் அரசியல்வாதியாக வரும் மகேஷ் மஞ்சுரேக்கர். க்ளைமேக்சில் மனிதர் பின்னிப் பெடலெடுக்கிறார். இவர், பிரகாஷ்ராஜ் இயக்கிய ‘தோனி’ படத்தின் மூலமான மராத்தியப் படம், ‘ ஷீக்ஷநச்சிய ஆய்ச்சா கோ’  படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுல் குல்கர்னிக்குக் கிடைக்காத வாய்ப்பு, கிஷோருக்குக் கிடைத்துள்ளது. 

கூலிங் கிளாஸை விடமாட்டார் போல விஷ்ணுவர்தன். படத்தில் இரண்டு இடங்களில், அஜீத்தை கண்ணாடியைக் கழட்டச் சொல்கின்றனர். அஜீத் கழட்ட மாட்டேன் என அடம்பிடிக்கிறார். கூலிங் கிளாஸ் அணிந்தவர் தான் நாயகன் என்பதை மக்கள் மனதில் பதியாமல் ஓயமாட்டார் போல விஷ்ணுவர்தன். ஆனால் சிகரெட், மது பழக்கமிருப்பவர் தான் நாயகன் என்ற அபத்தத்தை ஊக்குவிக்காததற்கு இயக்குநரைப் பாராட்டலாம். இந்த பாழாய்ப் போன அரசியல்வாதிகள் எங்கும் ஊழல் செய்கின்றனர், எதிலும் ஊழல் செய்கின்றனர் என விஷ்ணுவர்தனையும் ‘ஃபீல்’ பண்ண வைத்து விட்டார்கள் கதாசிரியர்களான சுபா. ஆனால் உண்மை சம்பவமொன்றை அடிப்படையாகக் கொண்டது என்பது ஆரோக்கியமான விடயம். அவசியமானதும் கூட. கதைக்கருவைக் கச்சிதமாக திரைக்கதையாக்கியுள்ளார்கள். அதிலும் இடைவேளை வரையிலான முதற்பாதியின் விறுவிறுப்பு அருமை. முதற்பாதி அளவுக்கு இரண்டாம் பாதி இல்லையென்று தான் சொல்ல வேண்டும். எனினும் இது அருமையான ‘தல’ தீபாவளி.

Leave a Reply