Search

பாயிம் சனங்களுக்கு அஞ்சுனனே!

சாதிய உள்முரண்பாடுகள் முன்வைக்கப்பட்டுள்ளது. இது தான் எழுத்தாளர் இமையத்தின் முதல் நாவல் ‘கோவேறு கழுதைகள்’ மீது எழுந்த குற்றச்சாட்டு. 
அதற்கு, “சமூகத்தின் மொத்த ஒடுக்குமுறைகளையும் எதிர்கொள்கிற பறையர் சமூகம், தனக்குக் கீழுள்ள வண்ணார், சக்கிலியர் இன சமூகங்களை ஒடுக்குகிற ஓர் ஆதிக்க சமூகமாகத்தான் இருக்கிறது என்பது உண்மை’ என பதிலுரைத்தார் இமையம். நாவல் வெளிவந்த ஆண்டு 1994 ஆகும்.

 

நாவலின் பிரதான கதாபாத்திரம் ஆரோக்கியம். அவர் வண்ணாத்தி. பறையர் சமூகத்தை நம்பிப் பிழைப்பவர். அவருக்கான கூலிகள் வருடாவருடம் குறைக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. அவரது வாழ்வாதாரம் கேள்விக்குறியாகிறது. அவருக்கு இரண்டு மகன்கள். ஒரு மகள். ஒரு கட்டத்தில் அனைவரைமே இவரை விட்டுப் பிரிந்து விடுகின்றனர். பிள்ளைகளின் பிரிவும், ஊராரின் அலட்சியமும் அவரை நொறுக்கி விடுகிறது. அந்த நிலைமையிலும் அவருக்கு ஊர்ப்பாசமும், ஊர்மக்கள் மீது அக்கறையும் குறைவதேயில்லை. ஏனெனில் காலனி வீடுகளில் நடக்கும் ஒவ்வொரு பிறப்பிறப்பிலும் முதலாளாக இருப்பவர் ஆரோக்கியம் தான். கடினமான பிரசவத்தை எல்லாம் சுபமாக முடித்து வைப்பார். ஆனால் அவருக்கு இரவு தூக்கம் கனவாகி விடுகிறது. இரவெல்லாம் புலம்பி ஒப்பாரி வைப்பார்.
“உறவின்னு சொன்னாங்க
உசுருன்னு சொன்னாங்க
சொந்தமின்னு சொன்னாங்க
பந்தமின்னு சொன்னாங்க
பாடெயில விழுந்தப்பப் பாழும்
எழவுன்னு அழுதாங்க”
என மனம் நொந்து ஒப்பாரி வைக்கின்றார் ஆரோக்கியம். வயோதிகம் அவரை பலவீனப்படுத்தி விடுகிறது. ஓடோடி வேலை செய்ததெல்லாம் பழைய கதையாகி விட்டது. எவ்வளவு பிரயத்தனப்பட்டும் வாழ்வில் உற்சாகம் கொள்ள பெரிதாக எதுவும் கடைசிவரை நடக்கவில்லை.
அரோக்கியத்தின் கணவன் சவுரி. அதிகாரத்திற்கு தன்னை ஒப்புக்கொடுத்து விடுபவர். எதிர்த்துக் கேள்வி கேட்கும் ஆரோகியத்தையும் கோபித்துக் கொள்வார். ஆனால் பெரிதாகக் காட்டிக் கொள்ளமாட்டார். ஞானிகள் வாழ வலியுறுத்தும் ஒரு வாழ்க்கையை வாழ்பவர். உலகத்தின் போக்கைப் பற்றி, சக்கிலியக்குடி பெரியானிடம் பேசும்பொழுது மட்டும் சிறிது வருத்தப்படுவார். அவரது வெகுளியான இயல்பிற்கு நாவலிலிருந்து ஒரு சான்று.
~~~சவுரி சின்னப்பிள்ளையாக இருந்தபோது ‘ஒலவத்துல சண்ட ஆரம்பிச்சிக்கிச்சி’ என்று மீசை முளைக்காத, படிக்கத் தெரியாதவர்களையெல்லாம் இழுத்துப்போனார்கள்.அதுபோல்தான் இப்போதும் சண்டை வந்துவிட்டதோ என்று கதிகலங்கிப்போய் அமர்ந்திருந்தான். அவன் எப்போதாவது உலகச் சண்டைபற்றி நினைப்பான்.
‘இந்த ஊருக்கு வெளுக்க ஆள் இல்லாமல் பூடுமே!’ என்று வருந்துவான். அதோடு எங்கே, எப்படிச் சண்டை போடுவது? அவனுக்கு யாரும் பகை இல்லை. விரோதிகள் யாருமில்லை. பின் ஏன் சண்டை போட வேண்டும்?~~~
இந்த எளிய மனதை கைவரப் பெற எந்த முயற்சியும் சவுரி எடுக்கவில்லை. அதுதான் அவரது இயல்பே! 
மினுக்கிக் கொண்டு திரியும் மருமகள் சகாயத்தை ஆரோயக்கித்திற்குப் பிடிக்கும். ஆனாலும் வெளியில் காட்டிக் கொள்ளமாட்டாள். சொல்லப்போனால் மருமகளின் தோலைப் பற்றி ஊரார் பேசும் பொழுது ஆரோக்கியத்திற்குப் பெருமையாகவே இருக்கும். சகாயத்திற்கும் தனது மாமியாரைப் பிடிக்கும். ஆனால் அவளும் காட்டிக் கொள்வதில்லை. 
ஆரோக்கியத்தின் மகள் மேரியும் சேரியைச் சேர்ந்த ராணியும் தோழிகள். மேரிக்கு இருக்கும் ஒரே தோழியும் கூட! ஆனால் ஊரார் முன்பு பேசிக்கொள்ள மாட்டார்கள். கள்ளத்தனமாகத்தான் சந்திக்க முடியும். ராணியின் அம்மா நல்லவரெனினும் ஊராரின் சொல்லுக்கு அஞ்சி மேரியிடம் பேச விடமாட்டார்.
ஊராருக்கு அஞ்சுதல் என்பது ஆரோக்கியத்திற்கும் உண்டு. ஏன் மனிதராகப் பிறக்கும் அனைவருக்குமே உண்டு. தனக்காக வாழ்வதை விட பிறருக்காகத்தானே அனைவரும் வாழ்கின்றோம்.
“வாவுக்கும் அஞ்சவில்ல
சாவுக்கும் அஞ்சவில்ல
சமாதிக்கும் அஞ்சவில்ல – பாயிம்
சனங்களுக்கு அஞ்சுனனே!”
என ஆரோக்கியம் அழுகிறார்.
இமையம்நாவலின் நாயகி ஆரோக்கியம், உண்மையிலேயே எழுத்தாளர் இமையம் வாழ்ந்த தெருவின் கிழக்கில் கடைசி வீட்டுக்காரர். ஆரோக்கியத்தைப் பற்றி சிறுகதை தான் எழுதத் தொடங்கினார். ஆனால் நீண்டு நாவலாகை விட்டது. இமையத்தின் மனைவியைத் தவிர, நாவலை அவரது குடும்பத்தினர் எவரும் படிக்கவில்லை. “போயும் போயும் நம்ப ஊரு வண்ணாத்தி பத்திதானா எழுதணும்? அவகளப்பத்தி எழுதுறதுக்கு என்ன இருக்கு? எதுக்கு எழுதணும்” என்பது போல் கேட்டார்களாம்.
ஓரிடத்தில், “இதென்னடி குறத்தியாட்டம். மொவத்துல மாவு அப்புறதும், வண்டி மையியக் கண்ணுல ஈசிக்கிறதும்”  என ஆரோக்கியம் மேரியைக் கடிந்து கொள்வார்.
இவ்விடத்தில், எழுத்தாளர் ராஜ் கெளதமன் கேணி சந்திப்பில் சொன்னது தான் ஞாபகம் வந்தது.
“எல்லோரும் ஒரே மாதிரி தான் யோசிக்கிறாங்க. தனக்கு கீழ ஒரு ஜாதியாவது இருந்துட்டா போதும். தலித்துக்கு கீழ குறவன் இருக்கிறதுல, ‘நாம கடைசி இல்ல’ன்னு ஒரு திருப்தி” என்றார் ராஜ் கெளதமன். அதை நாவலில் போகிறப்போக்கில் பதிந்துள்ளார் இமையம். 
இலக்கியம் எதையும் சொல்லக்கூடாது; உணர்த்த வேண்டும் என்கிறார் இமையம்.
(நன்றி: புத்தக உபயம் – வெங்கடாசலம், எழுத்தாளர் கிருஷ்ணன் நம்பியின் தம்பி.)Leave a Reply