Shadow

ஆர்யா நிகழ்த்திய அமரவிழா

amarakaaviyam

ஆர்யா தன் தம்பி சத்யாவை வைத்துத் தயாரிக்கும் ‘அமர காவியம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவை, அமரத்துவம் வாய்ந்த விழாவாக நிகழ்த்திக் காட்டினார். பொதுவாக இசை வெளியீட்டு விழாவில், இசை குறுந்தகடை ஆண்கள்தான் வெளியிடுவார்கள். ஆனால் நடிகையில் மத்தியில் செல்வாக்கு மிகுந்த நடிகரான, நாயகி ஒருவரை இசை குறுந்தகடை வெளியிட வைத்து இன்னொரு நாயகியைப் பெற்றுக் கொள்ளச் செய்தார். இயக்குநர் பாலா முன்னிலையில், குறுந்தகடை நயன்தாரா வெளியிட த்ரிஷா பெற்றுக் கொண்டார்.

விழாவிற்கு வந்தவர்கள் படத்தைப் பற்றிப் பேசியதோடு ஆர்யாவைத்தான் வஞ்சனை இல்லாமல் புகழ்ந்து கொண்டிருந்தார்கள். அவர் நடிகைகளுக்கு மட்டுமா நண்பர்? நடிகர்களுக்கும்தான் உற்ற நண்பர்; இயக்குநர்களுக்கும் ஆத்ம நண்பர்; தயாரிப்பாளர்களுக்கும் நெருங்கிய நண்பரென!

“உங்க பாடல் வெளியீட்டு விழாவிற்கே வர மாட்டீங்களே.. ‘அமர காவியம்’ பாடல் வெளியீட்டு விழாவிற்கு வந்திருக்கீங்களே!?” எனக் கேட்கப்பட்டதற்கு, “ஆர்யா என் குடும்பத்தில் ஒருவர்” என்றார் நயன்தாரா. “ஜாம்மியோட ஆட்டிட்யூட்தான் காரணம். அப்புறம், நயன் நிஜமாலுமே வர்றாங்களான்னு கேட்டேன். ஆமாம்னு சொன்னார். சோ நானும் வந்தேன்” என்றார் த்ரிஷா.  “இவங்க இருவரையும் வர வைக்க நான் அவங்க காலில் விழுந்து கஷ்டப்பட்டது எனக்குத்தான் தெரியும்” என்றார் ஆர்யா.

‘நான்’ படத்தின் இயக்குநரான ஜீவா சங்கர்தான் ‘அமர காவியம்’ படத்தின் இயக்குநரும். இவர் அமரரான இயக்குநர் ஜீவாவின் அசிஸ்டென்ட் என்பது குறிப்பிடத்தக்கதாகும். அவர் மீதுள்ள அன்பால் சங்கர் என்ற தனது பெயரை ஜீவா சங்கர் என மாற்றிக் கொண்டார். அவரே ‘அமர காவியம்’ படத்தின் ஒளிப்பதிவாளரும் ஆவார். ‘இயக்குநர் நினைப்பதை ஒளிப்பதிவாளர் கொண்டு வந்து விடுவாரோ என்கிற சந்தேகம் எப்போது எழும். இதில் இரண்டு இடத்திலும் நானே இருப்பதால், சந்தேகம் என்ற பேச்சுக்கே இடமில்லை’ என்ன நினைக்கிறேனோ அதை மட்டுமே எடுத்தேன்’ என்றார் ஜீவா சங்கர். ஜீவாவும் ஆர்யாவும் ஒரே தெருவில் வசிக்கும் நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் ட்ரெயிலர் மற்றும் பாடல்களைப் பார்த்த இயக்குநர் பிரபு சாலமன், “பொதுவா ஊட்டி மாதிரி ஏரியாகளில் ஷூட்டிங் பண்ணும் போது க்ரீன் அல்லது ப்ளூ டோன் செட் பண்ணுவாங்க. ஆனா ஒளிப்பதிவாளர் என்பதால், ஒரு warm tone-ஐ ஒளிப்பதிவில் செட் பண்ணியுள்ளார். நல்லா இருக்கு” எனப் பாராட்டினார்.

amarakaaviyam

“பெருமைக்காகச் சொல்லலை. ஆனா நல்ல படம் பண்றோம் என்ற கர்வம் இருந்தது படம் பண்ணும் பொழுது. படத்தின் க்ளைமேக்ஸ், தமிழ் சினிமா இதுவரை பார்த்திராததாக இருக்கும். இது புதுமையான க்ளைமேக்ஸ் என்று உறுதியாக சொல்ல முடியும்” என்றார் இயக்குநர் ஜீவா சங்கர். விழாவின் நாயகன் ஜிப்ரான் பேசும் பொழுது, “க்ளைமேக்சில் பத்து நிமிடம் படத்தில் வசனமே இல்லை. என் மீது அவ்வளவு நம்பிக்கையா என இயக்குநரிடம் கேட்டேன்? கதாபாத்திரங்களின் பேச நினைப்பதை இசையின் மூலமாகவே உணர்த்த வேண்டுமென்பது உண்மையிலேயே சவாலானது. அது எனக்குப் பிடித்திருந்தது. நேர்மையாகச் சொல்ல வேண்டுமென்றால் படம் என்னை உலுக்கி விட்டது” என்றார் ஜிப்ரான்.