

இளம் இசையமைப்பாளர் அனிருத் இருக்கும் இடத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. நடிக்க வரும் பல வாய்ப்புகளைத் தட்டிக் கழித்தே வருகிறார் அனிருத். இசைக்கு மட்டுமே தனது திரையுலகப் பணி என்று திட்டவட்டமாக இருக்கும் அனிருத், அதை உரக்கச் சொல்லியும் வருகிறார்.
‘ஆக்கோ’ – சமீபத்தில் அனிருத் மிகவும் ரசித்துக் கேட்டு வியந்த கதை. தன்னுடைய பங்களிப்பு ஓர் இசையமைப்பாளராக மட்டுமே என்று கூறியதோடு மிகச் சிறந்த பாடல்களை இசை அமைத்துக் கொடுத்து இருக்கிறார். இவரது ஒத்துழைப்பின் பிரதிபலனாக இயக்குநர் எம்.ஷ்யாம் குமாரும், தயாரிப்பாளர்கள் தீபன் பூபதி, ரதீஸ் வேலுவும் தங்களது நிறுவனமான ரெபெல் ஸ்டுடியோஸ் சார்பில் அனிருத்தைப் பிரதானப்படுத்தி ஃபர்ஸ்ட்-லுக் ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்றைய இளைஞர்கள் இடையே அனிருதுக்கு இருக்கும் புகழுக்கு இதுவே சான்று.
படத்தின் ஒளிப்பதிவாளர் சிவா ஜி.ஆர்.என். படத்தொகுப்பாளர் பவன் டக்டரீ குமார். இந்தப் படத்தின் தலைப்பு மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. ‘ஆக்கோ’ என்றால் ஆர்வக்கோளாறு. மூன்று ஆர்வக்கோளாறு இளைஞர்களின் ஆர்வத்தால் ஓர் இரவில் நடக்கும் சம்பவங்களின் சாரம்சமே ‘ஆர்வக்கோளாறு’ படத்தின் கதை என்று கூறும் இயக்குனர் ஷ்யாம், “ஆக்கோ நகைச்சுவை கலந்த ஒரு ஆக்ஷன் படம். இது எந்தக் குறிப்பிட்ட வயதினரையோ, வகுப்பினரையோ கவர மட்டுமே எடுக்கpபட்ட படமன்று. எல்லோரையும் எப்போதும் கவரும் படம் இது. அனிருத்தின் பாடல்கள் 2014ஆம் ஆண்டின் மிகச் சிறந்த பாடலாக இருக்கும் என்பதில் சந்தேகம் ஏதுமில்லை” என்றார்.