Search

ஆவிகளின் தொடர்பு

ஆவிகளுடன் பூவுலக மனிதர்களால் தொடர்பு வைக்கமுடியும் என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் நாம் அழைக்கும் ஆவிதான் உண்மையில் எங்களுடன் வந்து பேசுகிறது என்பதும், நமது கேள்விகளுக்கு அவைகள் தரும் விடைகள் உண்மையானவை தான் என்பதும் கேள்விக்குறிகளாகவே இருக்கின்றன.

மேற்கு நாடுகளில் தான் ஆவிகளுடன் தொடர்பு கொள்பவர்கள் கூடுதலாகக் காணப்படுகிறார்கள். இதறக்கென்றே குழுக்கள் அமைத்துக் கொண்டு செயல்படுகிறார்கள். “மீடியம்” களாக செயல்படுவதை தொழிலாக ஏற்றுள்ளவர்களும் இருக்கிறார்கள்.

“மீடியம்” ஆக செயல்படுபவரின் மனமும் உடலும் ஆவியின் கட்டுப்பாட்டுக்குள் வந்தவுடன் அவர் தன் வயமிழந்த நிலையை அடைந்து விடுகிறார். ஆவியானது அவருடைய உடலின் சக்தியையும் மனோசக்தியையும் தனதாக்கிக் கொண்டு அவர் மூலமாக பேசுகின்றது. சில சமயங்களில் அவருடைய உடலிலிருந்து “எக்டோபிளசம்” (ectoplasm) என்ற ஊனம் போன்ற வஸ்துவை வரச்செய்து தனது தோற்றத்தை வெளிப்படுத்துகிறது. இச்செயல் மனோதிட்பத்தில் முன்னேறிய ஆவிகளால் மட்டுமே செய்யமுடியும். இத்தோற்றங்களை பலர் நிழல்படங்கள் எடுத்திருக்கின்றார்கள்.

“மீடியம்” ஆக செயல்படுபவர் ஆவிகளுக்குத் தனது உடலையும் மனதையும் தற்காலிகமாக கொடுத்துவிடுவதால் தனது தேக சௌக்கியத்தை இழப்பதோடு காலக்கிரமத்தில் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு மனோநிலை பாதிக்கப்பட்டவராகவும் காணப்படுவர்.
இறந்த பின் பூவுலக நாட்டம் மேலிட்ட உணர்வுகளுடன் இருக்கும் ஆவிகளுடன் தொடர்பு வைப்பது சுலபம் என்று பொதுவாக நம்பப்படுகிறது. சேர் ஒலிவர் லொட்ஜ், டாக்டர் மையர்ஸ் போன்ற பேரறிஞர்கள் வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகளில் கூறப்பட்டவைகளை நம்பாமலிருக்க முடியவில்லை.ஆனால் நாம் அழைக்கும் ஆவிதான் நம்முடன் உண்மையில் தொடர்பு கொள்கிறதா என்று நிச்சயமாகக் கூறமுடியாது. மறுவுலகிலும் குறும்பு செய்யும் ஆவிகள் இருக்கக் கூடும். மேலும், இறந்தவர் இவ்வுலகத்தை அண்மித்து இருந்தபோது குடிகொண்டிருந்த துயில்கூடு (Shell) அவர் வேறுபடி நிலைக்குச் சென்ற பின்னர் கைவிடப்பட்டு அனாதரவாக மிதந்து தெரியும். அது இறந்தவரின் சிந்தனைகளைக் கொண்டதாக ஆக்கம் பெற்று இங்கிருந்து நாம் கேட்கும் கேள்விகளுக்கு சரியாகவும் பிழையாகவும் பதில் கூறக்கூடும். இது ஒரு கருத்து.

இன்னொரு கருத்தும் இருக்கிறது. மீடியமாக செயல்படுகிறவருடைய சிந்தனாசக்தியும் ஆவியுடைய பதில்களில் பிரதிபலிக்கக் கூடும் என்பது. ஆனால், மீடியம்கள் தமக்குத் தெரியாத மொழிகளில் (தன்வயமிழந்த நிலையில்) பதில்களைக் கூறுவதையும், தாம் எவ்வகையிலும் சம்பந்தப்படாத விஷயங்களைத் தெரியப்படுத்துவதையும் பார்க்கும்பொழுது இந்த விவாதம் ஏற்புடையதாகத் தெரியவில்லை.

முன்னாள் இந்திய மத்திய உணவு அமைச்சர் திரு.கே.எம். முன்ஷி ஆவிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருந்தவர். சிலதடவைகள் ஆவிகள் கூறியவை சரியாகக் காணப்பட்டதாகவும், வேறு சந்தரப்பங்களில் முழுக்க முழுக்கப் பிழையாகக் காணப்பட்டதாகவும் கூறியுள்ளார்.பம்பாயைச் சேர்ந்த ஒரு பேராசிரியர் சேர் ஒலிவர் லொட்ஜ் என்ற அறிஞரின் ஆவியுடன் பல தடவைகள் தான் பேசியுள்ளதாகவும் அவர் தனது ஆவி உலகத்து நண்பராகி விட்டதாகவும் கூறிக்கொண்டிருந்தார். திரு. முன்ஷியின் முன்னிலையில் பேராசிரியர் ஒருதடவை லொட்ஜின் ஆவியை அழைத்தார். லொட்ஜின் ஆவி என்று கூறிக்கொண்டு வந்தவர் பேராசியரை விழித்து “அறிவு கெட்ட முட்டாளே நீ யார்?” என்று கேட்டதாம். இதிலிருந்து ஆவிகளின் அடையாளத்தின் நிச்சயமற்ற தன்மை தெளிவாகின்றது.

ஆவிகளுடன் தொடர்பு வைப்பதற்கு உருள்குவளை (Tumbler) முறை, சிலேற்றில் எழுதும் முறை, ஊதுகொம்பு (Trumpet) மூலம் பேசும் முறை போன்ற பல வழிகள் கையாளப்படுகின்றன.

இராமகிருஷ்ண பரமஹம்சரின் வழிவந்த சுவாமி அபேதானந்தா யோயோர்க்கில் கீலர் என்ற ஒரு அமெரிக்கர் புரிந்துவந்த சிலேற்றில் எழுதும்முறை மூலம் பிரமஹம்ச யோகானந்தரின் ஆவியை அழைத்து அவருடன் பேசியதாகக் கூறியுள்ளார். சுவாமிகள் அமெரிக்காவில் ஒரு மீடியம் மூலம் ஆவிகளின் தோற்றங்களைத் தான் கண்டதாகவும் அவர்களின் ஸ்பரிசத்தை தான் உணர்ந்ததாகவும் கூறியுள்ளார்.

ஆவிகளை நாம் அழைப்பதால் அவைகளுக்குத் தீங்கு விளைகிறது. அவைகளுக்கு நாம் பூவுல நாட்டத்தை ஏற்படுத்துவதோடு, நமது சிந்தனைகளால் அவர்களின் அமைதி பாதிப்படையக் கூடிய நிலையையும் ஏற்படுத்திவிடுகிறோம்.
Leave a Reply