சிவாவிற்கு காதல் என்றால் ரொம்ப பிடிக்கும். ஆனால், அவனால் ‘தன்னுடைய ஆள்’ எனக் காதலிக்க ஒருவரையும் தீர்மானம் செய்து கொள்ள முடியவில்லை. அவரது காதலின் ஸ்டார்ட்டிங் நல்லாயிருந்தாலும் ஃபினிஷிங்கில் சிக்கலாகிக் கொண்டேயிருக்கிறது. சிவா தன்னுடைய ஆளைக் கண்டடைந்தானா இல்லையா என்பதுதான் படத்தின் கதை.
‘எனக்கு லவ் பண்றதுன்னா ரொம்ப பிடிக்கும்’ என்ற ஒற்றைப் பரிமாணக் கதைக் கருவை எடுத்துக் கொண்டு பேசிப் பேசியே மாய்கின்றனர் கதாபாத்திரங்கள்.
சூரி: அந்தப் பொண்ண பார்த்ததுமே உனக்குப் புடிச்சிப் போனதுக்கு என்ன காரணம் தெரியுமா?
சிம்பு: என்ன?
சூரி: ஒன்னு உன்னோட பருவம். இன்னொன்னு அந்த பொண்ணோட புருவம்.
நயன்தாராவுக்கும் ஆண்ட்ரியாவுக்கும் ஒரே மாதிரியான புருவங்கள் என்பதால் நயன்தாராவைப் பார்த்ததுமே சிலம்பரசனுக்குப் பிடித்துப் போய் விடுகிறதாம். அப்படின்னு சூரி சொல்றார். இப்படி இலக்கற்ற கதைப் போக்கினாலும், கடியான வசனங்களாலும் படம் மிகுந்த சலிப்பைத் தருகின்றன.
காதலித்துப் பிரிந்தவர்கள் என நம்பப்படும் சிம்புவும் நயன்தாராவும் இணைந்து நடிக்கிறார்கள் என்ற செய்தியே படத்தின் மீதான எதிர்பார்ப்பை இரண்டு வருடங்களாகத் தக்க வைத்திருந்தது. படத்திற்கு இந்த ஒரு விஷயமே ஈர்ப்பான விளம்பரமாய் அமைந்துள்ளது. சிவா எனும் பாத்திரத்தில் சிம்புவும், மயிலாவாக நயனும், ப்ரியாவாக ஆண்ட்ரியாவும் நடித்துள்ளனர். நிச்சயமான பிறகு நயனும் சிம்புவும் பேசிக் கொண்டே இருக்கின்றனர். எதார்த்தம் அதுதான் எனினும், அதைச் தனது வசனங்களால் சுவாரசியப்படுத்தி இருக்கலாம் பாண்டிராஜ். ஃபோனில் லவுட்-ஸ்பீக்கரை ஆன் (ON) செய்துவிட்டு, முதலிரவு குறித்தும் எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ளலாம் என்பது பற்றியும் அந்தரங்கமாகப் பேசுகின்றனர் (க்ர்ர்ர்…). அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் சூரி இடையிடையே கவுண்ட்டர் தருகிறார். இரண்டாம் பாதியில் சூரி இல்லாவிட்டால் பார்ப்பவர்கள் நிலைமை மிகப் பரிதாபகரமாக ஆகிவிட்டிருக்கும். இது அனைத்தையும் மீறி பாலசுப்ரமணியத்தின் ஒளிப்பதிவு பார்வையாளர்களை ஈர்ப்பது அவரது திறனுக்குச் சான்று.
நேர்க்கோட்டில் பயணித்துத் திணறிக் கொண்டிருந்த திரைக்கதையில், படம் முடியும் தருவாயில் நயன்தாராவின் தந்தையாக நடித்திருக்கும் உதய் மகேஷ் சுவாரசியத்தைக் கூட்டி பாலை வார்க்கிறார். இந்தக் கதையிலும், தன் இருப்பை அழுத்தமாகப் பதித்து ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறார் ஜெயப்ரகாஷ்.
முகத்தில் எந்த உணர்வுகளையும் காட்டாமல் சிம்பு ஜென் நிலையில் இருந்து கொண்டு இப்படத்தில் நடித்திருப்பார் போல! ஆனால், தன்னைக் கிண்டல் செய்து கொள்ள அனுமதிக்கும் கலைஞனாக சிம்பு உள்ளது குறிப்பிடத்தக்கது. அவரது தனிமனித வாழ்க்கை, வழக்கு என அனைத்தையும் பகடி செய்ய ஒப்புக் கொள்ளும் மனப்பாங்கைப் பாராட்டியே ஆகவேண்டும் (இன்னொரு உதாரணம்: காக்கா முட்டை). பாண்டிராஜ் எத்தகைய சிக்கல்களுக்கு மத்தியில் இப்படத்தை முடித்திருப்பார் என்பதை யூகிக்க முடிகிறது. அது படம் நெடுகே பட்டவர்த்தனமாய்ப் பிரதிபலித்துள்ளது. அதைப் படத்தின் முடிவில் வசனமாகவும் பதிந்துள்ளார் பாண்டிராஜ். ஒரு குத்துப் பாட்டுக்காக, ஆதா ஷர்மாவைக் கல்லூரிக் காலக் காதலியெனத் திணித்துள்ளனர் இயக்குநரின் விருப்பத்திற்கு மாறாக. Too many cooks spoil the broth என்ற ஆங்கிலப் பழமொழி ஏனோ ஞாபகம் வருகிறது.