மீனவப் பெண்ணான மதியின் திறமையைக் கண்டு கொண்டு, அவரைத் தேர்ந்தெடுத்து பயிற்சி கொடுத்து பாக்ஸிங் வெற்றியாளராக்க முயற்சி செய்கிறார் கோச் பிரபு செல்வராஜ். அம்முயற்சியில் பிரபு சந்திக்கும் சிக்கல்களும் தடைகளும் தான் படத்தின் கதை.
வாவ்..
இயக்குநர் சுதா கொங்கரா அசத்தலான படத்தைக் கொடுத்துள்ளார்.
வேட்டை படத்துக்குப் பிறகு மீண்டும் மேடி தமிழ்ப் படம் பக்கம் திரும்பியுள்ளார். வேட்டை படத்திலிருந்ததை விட இப்படத்தில் இளைஞனாகத் தெரிகிறார் கோச் பிரபு செல்வராஜாக நடித்திருக்கும் மாதவன். ஆனால், படம் முழுவதும் ‘அரைக்கிழம்’ என்றே நாயகியாலும் மற்றவராலும் விளிக்கப்படுகிறார். மிகப் பொறுப்பான கதாபாத்திரத்தில் அற்புதமாகப் பொருந்துகிறார். குத்துச் சண்டை சங்கத்தில் நடக்கும் அரசியலைக் கண்டு கோபுமுறும் பொழுதும், குறிப்பாக ஊழலிலும் நயவஞ்சகத்திலும் ஊறியவர்களை எடுத்தெறிந்து அவமானப்படுத்தும் பொழுதும் கைத்தட்டல்களைப் பெறுகிறார் மாதவன். படத்துக்குள் பார்வையாளர்கள் இழுக்கும் வேலையை மட்டுந்தான் மாதவன் செய்கிறார்.
பின், படத்தைத் தனியொருவராகச் சுமப்பது மதியாக நடித்திருக்கும் ரித்விகா சிங்தான். ரெஃப்ரீயிடம் மதி செய்யும் அமர்க்களத்தால் ஈர்க்கப்படுவது கோச் பிரபு மட்டுமல்ல நாமும் தான். விரக்தியில் அனைவரையும் எடுத்தெறிந்து பேசும் கோச் பிரபு செல்வராஜையே படாதபாடுபடுத்துகிறார்.
படத்திற்காக இரண்டரை வருடம் ஆய்வு மேற்கொண்டதாகச் சொல்லியுள்ளார் இயக்குநர் சுதா. அது இந்தியாவில் தொடங்கப்பட்ட பெண்கள் பாக்ஸிங் பற்றிய ஆய்வு தான் எனினும், படத்தில் சின்னச் சின்ன விஷயங்களிலும் எண்ணற்ற நுண்ணிய விவரணைகளை அழகாக இடம்பெறச் செய்துள்ளார். உதாரணத்திற்கு, சென்னைக்கு மாற்றலாகி வரும் சீனியர் கோச்சுக்கு ஜூனியர் கோச் வைக்கும் பேனர்களும், அதிலுள்ள ஃபோட்டோஷாப் புகைப்படங்களும், வாசகங்களாலும், அதிலுள்ள எழுத்துப் பிழைகளும் (loin/lion) அட்டகாசம். எல்லாவற்றிற்கும் பேனர் வைக்கும் தமிழர் மரபை செம்மையாக பகடி செய்துள்ளார். இரண்டு மணி நேரத்துக்கும் குறைவான படத்தில், அவ்வளவு விஷயங்களைக் கச்சிதமாகச் செதுக்கியுள்ளார். ஆம், ரஷ்யாவின் ஹெவி வெயிட் சேம்பியனான நடாலியா எப்படி லெஸ் வெயிட் சேம்பியன்ஷிப்பில் பங்கேற்கிறார் என்ற சூசகம் முதல் அனைத்தையும் மிகக் கவனத்துடன் கையாண்டுள்ளார்.
நாயகியின் தந்தை சாமிக்கண்ணுவாக காளி வெங்கட். குடிக்காக சாமுவேலுவாக மாறி மனைவியிடம் அடி வாங்குவது முதல், வேண்டாத மகள் போட்டியில் வென்றதும் மனைவியின் காலில் விழும் வரை அசத்துகிறார். அவரது மனைவியாக நடித்திருப்பவரும் நெகிழ வைக்கிறார். சென்னை பாஷை பேசி ஜூனியர் கோச்சாக வரும் நாசர் வழக்கம் போல் அசரடிக்கிறார். நாசரும் ராதாரவியும் பேசிக் கொள்ளும் காட்சியும், அதனைத் தொடர்ந்து வரும் காட்சியில் மகிழ்ச்சியோடு கண்கள் கலங்க ராதாரவி விளையாட்டரங்கின் இருக்கையில் சாய்வதும் படத்திற்கு அழகான அர்த்தத்தை ஏற்படுத்துகிறது.
மதியின் அக்கா லக்ஸ் எனும் லட்சுமியாக நடித்திருக்கும் மும்தாஜ் தனது பங்கினை அழகாகச் செய்துள்ளார். கோச், தங்கைக்குத் தரும் முக்கியத்துவத்தாலும் முன்னுரிமையாலும் மனம் சுணங்கும் லக்ஸின் ஆதங்கத்தை மிக இயல்பாய் தன் நடிப்பில் கொண்டு வந்துள்ளார். ஹெட் கோச்சாக நடித்திருக்கும் ஜாகிர் ஹூசைனின் அலட்டலற்ற வில்லத்தனம், புரையோடி இருக்கும் சமூகத்தின் மீதான பயத்தை அதிகரிக்கச் செய்கிறது. ‘நீ ஜெயிக்கணும்னா நாக்-அவுட் தான் ஒரே வழி. இல்லைன்னா அசோசியேஷன் அரசியலில் உன்னைத் தோற்கடிச்சுடுவாங்க’ எனும் வசனம் தாங்கி வரும் வலியும், அருவருப்பான உண்மையும் அதற்கொரு எடுத்துக்காட்டு. படத்தின் கலகலப்பிற்கும் வசனங்கள் உத்திரவாதமளிக்கின்றது.
இயக்குநர் மணிரத்னத்திடம் இணை இயக்குநராகப் பணியாற்றியவர் சுதா. பாடல்களின் மாண்டேஜ் ஷாட்ஸ்களைக் கொண்டே அதை ஊர்ஜிதம் செய்து கொள்ளலாம். உதாரணத்திற்கு, தர்மசாலாவில் புத்தக பிக்குகளுக்கு முன் நடந்து வரும் நாயகி, கொக்கியில் மாட்டி மீனைக் கொண்டு வரும் ஒரு ஷாட்டைச் சொல்லலாம். சந்தோஷ் நாராயணின் பின்னணி இசை காட்சிகளை நெருக்கமாக உள்வாங்க உதவுகிறது.
இறுதிச்சுற்று – கிரிக்கெட் மீதான குவிமைய மோகத்திலிருந்து மீள இது போன்று இன்னும் பல சுற்றுகள் தேவைப்படுகிறது.