கண்கள் கட்டப்பட்ட நிலையில், கம்பைச் சுழற்றி ஊசலாடும் பானையை குறி வைக்க வேண்டிய விளையாட்டின் பெயர் உறியடி. அப்படி மறைந்திருந்து அரசியல் செய்யும் ஆட்களை நாயகர்கள் குறி வைக்கிறார்கள் என்ற குறியீடுதான் படத்தின் தலைப்பு.
மனதை உலுக்கும் ரத்தமும் சதையுமுமான கதை. சமூகத்தின் மீது அச்சத்தையும் நம்பிக்கையின்மையும், அதீதமான பயத்தையும் ஏற்படுத்துகிறது. சாதீய நஞ்சு ஊறிப் போன மனங்களையும், அம்மனங்களை முதலீடு செய்ய நினைக்கும் முதலாளிகளும், அவர்கள் தம் குயுக்திகளையும் பற்றிப் படம் பேசுகிறது. அத்தனையையும், படிப்பதை விட சந்தோஷமாக இருப்பது முக்கியமென நினைக்கும் தொழில்நுட்பக் கல்லூரி மாணவர்களைச் சுற்றி நடப்பதே படத்தின் சிறப்பு. மிகுந்த விறுவிறுப்புடன் படம் பயணித்து சட்டென இடைவேளை வந்துவிடும் பிரமையை ஏற்படுத்தி விடுகிறது. அதற்கு முக்கிய காரணம், இடைவேளையில் வரும் சண்டைக்காட்சியே! மயிர்கூச்செறிய வைக்கும் காட்சி அது. தாபாவிற்கு வரும் அடியாட்களுக்காக மாணவர்கள் காத்திருப்பார்கள். விக்கி எனும் அறிமுக ஸ்டன்ட் டைரக்டர் அசத்தியுள்ளார். அத்தனை ‘ரா’வாக (raw) உள்ளது அந்தக் குழுச் சண்டை. இதற்கே அச்சண்டைக் காட்சிகளில் 50% வெட்டப்பட்டுள்ளதாம். வன்முறையின் அழகியல் எனச் சொல்லலாம். மாஸ் ஹீரோக்களின் சூப்பர் ஹீரோயிஸ சண்டைக் காட்சிகளின் வன்முறையோடு ஒப்பீட்டால் மிகக் கம்மியே! எனினும் உறியடி படத்தினுடைய கதையின் கனம், சண்டைக்காட்சியை மிகப் பிரம்மாண்டமாக்கி விடுகிறது.
கதையில் மிக முக்கியமான பாத்திரத்தில் கல்லூரி விடுதி ஒன்றும், நெடுஞ்சாலையிலுள்ள தாபாவும் வருகிறது. அக்கல்லூரியும் நெடுஞ்சாலையின் மீதே அமைந்துள்ளது. தாபாவின் ஓனர் குமாராக வரும் மைம் கோபி மிக அட்டகாசமாக நடித்துள்ளார். சுமார் 15,000 சுய சாதி ஓட்டுக்களைக் கொண்டு, அத்தொகுதியின் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக உருமாற அவர் போடும் திட்டங்கள் அரசியலெனும் வியாபாரத்தின் சூட்சமங்களைச் சொல்கிறது. 100% வாக்கு பதிவுக்கான அவசியத்தையும் அக்காட்சி அழுத்தமாக வலியுறுத்துகிறது.
படம் நிகழும் காலம் தொன்னூறுகளின் இறுதியெனத் தெரிகிறது. இருவர் மட்டுந்தான் படத்தில் செல்ஃபோன் உபயோகிக்கிறார்கள். அவர்கள் போலி மதுபானம் தயாரிக்கும் முதலாளியும், லாட்ஜ் ஓனரான அவரது மகனும். லாட்ஜ் ஓனர் ராமனாதனாக நடித்திருக்கும் சுருளி வஞ்சமே உருவானவராக உள்ளார். பொதுவில் அவமானபடுபவன் பழிவாங்க, எப்படிப் புழுங்கிக் கொண்டே இருப்பானென கண் முன் கொண்டு வந்துள்ளார். கதாபாத்திரங்களுக்கு ஏற்ற நடிகரை மிகக் கச்சிதமாய் தேர்வு செய்துள்ளார் இயக்குநரும் தயாரிப்பாளருமான விஜய் குமார். அவரே படத்தின் பிரதான நாயகன்களில் ஒருவராகவும் நடித்துள்ளார். அவருக்கு காதல் வருவதால், படத்தின் தனி நாயகன் என்ற அந்தஸ்த்தையும் வழங்கலாம்.
சந்துரு, ஜெயகாந்த், சிவபெருமாள் ஆகியோர் நாயகனுக்கு நண்பர்களாக நடித்துள்ளனர். இந்நால்வரின் நோக்கம் மகிழ்ச்சியாக இருப்பது மட்டுமே எனச் சொல்கிறார்கள். குடித்து விட்டு வஞ்சனையில்லாமல் வாந்தி எடுக்கிறார்கள்.
“மச்சான், கிழவன் ஆனாலும் இப்படியே சேர்ந்து குடிக்கணும்டா.”
“நாமளே இப்படி இருக்கோம். நம்ம பசங்க நம்மள விட மோசமா இருப்பாங்க. குடிக்க பணம் தர மாட்டாங்கடா.”
வழக்கமான தமிழ் சினிமா நாயகர்கள் போல் கடமைக்கே என கல்லூரிக்குப் போகிறார்கள். நன்றாகப் படிக்கணும், அறிவை விருத்தி செய்து கொள்ளணும், சம்பாதிக்கணும் என்ற பாசாங்குகளோ பிரக்ஞையோ இன்றி இருக்கிறார்கள். சந்துக்கு ஒரு தொழில்நுட்பக் கல்லூரி தொடங்கப்பட்டு, மலினப்பட்டுப் போய் விட்ட தொழிழ்நுட்பக் கல்வியின் நிதர்சனம் இதுதான்.
ரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தும் (adrenaline) உணர்வை முதற்பாதி தந்தால், கலக்கத்தை இரண்டாம் பாதியும், மன உளைச்சலை படத்தின் முடிவும் தருகிறது. அவ்வளவு வன்முறை. வன்முறை என்றால் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் எனப் பொருள் கொள்ளக் கூடாது. ரத்தம் தெறிக்காமல் மிக நுணக்கமாகவே காட்சிபடுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் பால் லிவிங்ஸ்டன். படத்தின் கனம்தான் நம்மை வன்முறையை உணரச் செய்கிறது. தனது சாதியைச் சேர்ந்த இரண்டு மாணவர்களை பலி கொடுத்து தன் மருமகன் குமாரின் அரசியல் கனவுக்கு அடிக்கல் நாட்ட நினைக்கிறார் சாதி சங்கத்தலைவர் உலகப்பன். உலகப்பனாக நடித்திருக்கும் சிட்டிசன் சிவகுமார் க்ளைமேக்ஸின் பொழுது திடீரென விஸ்வரூபம் எடுக்கிறார். ஆக, படத்தில் நாம் உணரும் வன்முறை சக மனிதனின் மீது நமக்கிருக்கும் பயத்தையே!
ராமனாதனையும், சாதி வெறி கொண்ட ஆட்களையும், தாபா ஓனர் குமாரையும், அவரது தாய்மாமன் உலகப்பனையும் எப்படி மாணவர்கள் ஓர் இரவில் எதிர்கொள்கிறார்கள் என்பதே படத்தின் முடிவு. அந்த ஓர் இரவில் நிகழும் சம்பவங்களே மன உளைச்சலுக்குக் காரணம். படத்தின் முழுப் பெயர் ‘விடியும் வரை விண்மீன்களாவோம் [என்கிற] உறியடி’. ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு என்பது போல், மாணவர்கள் சாதியை எள்ளலோடு அணுகுவதோடு அதற்கு இரையாக விழாமல் இருப்பது ஆறுதல் அளிக்கிறது. அது போல், முதலாம் ஆண்டு படிக்கும் பொழுது நாயகனுக்கு ஆக்னெஸ் மீது காதல் எழுகிறது. ஆக்னெஸாக நடித்திருக்கும் மலையாள நடிகை ஹென்னா பெல்லாவையும், அந்தக் காதலையும் அப்படியே கத்தெறித்து விடுகிறார் இயக்குநர். வழக்கமான தமிழ்ப்படம் போல் நாயகன் மருகி உருகாமல் இருப்பது ஆசுவாசம் அளிக்கிறது. கல்லூரிக் காதல்களின் எதார்த்தமும் அதுதான் (இப்படத்தை வெளியிட மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும் என்பது கள எதார்த்தம்). ஒரு காட்சியில், திருநங்கை ஒருவர் ஒரு பெண்மணியிடம் தன்னருகில் இருக்கும் இருக்கையில் அமரும்படி கேட்பார். அந்தப் பெண்மணி மறுத்துவிடுவார். கதையை விட்டு கொஞ்சம் கூட விலகாமல், கிடைக்கும் இடங்களில் எல்லாம் தனது சமூகப் பிரக்ஞையும் அவதானிப்பையும் இயக்குநர் பதிந்துவிடுகிறார் என்பதற்கு இதோர் எடுத்துக்காட்டு.
எந்தச் சாதீய அடையாளமும் இல்லாமல், இரண்டு சாதிக்குள் சண்டை என மிகக் கவனமாக அரசியலை அழுத்தமாகப் பதிந்துள்ளார் விஜய் குமார். படத்தின் பின்னணி இசையும் அவரே அமைத்துள்ளார். படம் முடிந்ததும் படத்தில் பங்கு பெற்றவர்களின் பெயர்கள் திரையில் மேலெழும்போது, ‘மசாலே கஃபே’வின் இசையில், மகாகவியின் பாரதியினுடைய, ‘அக்னிக் குஞ்சொன்று கண்டேன்’ என்ற பாடலைக் கேட்பது அலாதியான உணர்வை ஏற்படுத்துகிறது.
படத்தின் ட்ரெயிலரைக் காண: உறியடி முன்னோட்டம்
[…] எனக்கு இந்த வாய்ப்பு வந்த போது, உறியடி விஜய்குமார் என்று சொன்னார்கள், உடனே […]