Shadow

எனக்குள் ஒருவன் விமர்சனம்

Enakkul Oruvan Tamil review

லூசியா எனும் கன்னடப் படத்தை மீள் உருவாக்கம் செய்துள்ளார் இயக்குநர் பிரசாத் ராமர். லூசியா, தென்னிந்தியத் திரைப்பட ரசிகர்கள் பெருமையாக காலரை உயர்த்திக் கொள்ள உதவிய படம். முறைப்படியாக உரிமை வாங்கி தமிழில் எடுத்துள்ளனர். தியேட்டர் ஆர்டிஸ்டாக இருந்து திரைத்துறையில் நுழைந்த பவன் குமாரின் பெயரே திரைக்கதையில் வருகிறது.

ஒருவன்தான் வாழ நினைக்கும் வாழ்க்கையைப் பற்றி கனவு காண்பதுதான் எனக்குள் ஒருவன் படத்தின் கதை.

சித்தார்த்தின் கேரியரில் கண்டிப்பாக இது முக்கியமானதொரு படமாக அமையும். வாழும், வாழ நினைக்கும் என இரண்டு வாழ்க்கையையும் நடிப்பில் வித்தியாசப்படுத்திக் காட்டியுள்ளார். ஜிகர்தண்டா, காவியத் தலைவன் எனும் படங்களுக்குப் பிறகு, படத்தின் தனியொரு பிரதான பாத்திரமாக அவர் நடிப்பில் வந்திருக்கும் படமிது என்பது குறிப்பிடத்தக்கது. தியேட்டர் ஓனராகவும், நடிகரின் மேனேஜராகவும் வழக்கம் போல் நரேன் அசத்தியுள்ளார். நாயகனின் கனவில் வாழும் வேடத்தில் வரும் தீபா சன்னிதி மனதில் பதிகிறார்; இன்னொரு வேடத்தில் அவர் அப்படி ஈர்க்கவில்லை.

ரசிகர்களுக்கு எங்குப் புரிந்து விடாதோ என அதிகம் மெனக்கெட்டு மீண்டும் மீண்டும் காட்சிகளைப் போட்டுக் காட்டியோ, வசனங்கள் மூலம் புரிய வைக்கிறேன் பேர்வழி என ரசிகனின் ரசனையைக் குறைத்து மதிப்பிடவில்லை. பவன் குமாரின் திரைக்கதை அருமையிலும் அருமை. ரசிகர்களுக்கு எங்குப் புரியாமல் போய்விடும் என்ற பயமே நம் இயக்குநர்களை பாரம்பரிய கதை சொல்லும் பாணியிலேயே உழல வைக்கிறது. நாளைய இயக்குநர்கள் வெற்றி பெறுவதும், வெற்றி பெற்ற இயக்குநர்கள் எரிச்சலூட்டுவதும் இதனாலேயே!

எது உண்மை எனத் தொடங்கப்படுகிறதோ அதை இறுதி காட்சியில் சாமர்த்தியமாக கனவாக மாற்றி விடுகின்றனர். ரீமேக் தான் எனினும், அதிக கமர்ஷியல்தன்மை கொண்ட படமாக இல்லாமல் சவலான படமொன்றை இயக்க முன் வந்ததற்காக இயக்குநர் பிரசாத் ராமரைப் பாராட்டலாம். நல்லதொரு திரைக்கதைக்கு எடுத்துக்காட்டாய் ‘எனக்குள் ஒருவன் (2015)’ படமிருக்கும்.

எனக்குள் ஒருவன் விமர்சனம்