Search

தொப்பி விமர்சனம்

Thoppi Tamil Review

குற்றப் பரம்பரையைச் சேர்ந்த பட்டியல் இனத்தவனான சித்தன், தனது லட்சியமான காவல் துறையில் சேருகிறானா இல்லையா என்ற கேள்விக்கான பதில்தான் கதை.

படத்தின் தலைப்பு போடும்பொழுதே, பொம்மலாட்ட பாணியில் குற்றப்பரம்பரை எப்படி உருவாகின என்ற செய்தியைச் சொல்லி விடுகிறார் இயக்குநர் யுரேகா. படத்தின் பலம் அதன் இயல்பான கதாபாத்திரங்கள். படத்தின் முதற்பாதி மிகவும் கலகலப்பாகப் பயணிக்கிறது. மலைவாசிகளின் தலைவராக வரும் G.M.குமார் அதகளம் செய்துள்ளார். திருடச் செல்பவர்களை ஆசிர்வாதம் செய்து அனுப்புதல், ஏ.டி.எம். மெஷினைப் பெயர்த்தெடுப்பது, பேயோட்டுவது, பேயைக் கொண்டு போலிஸை ஓட்டுவது என G.M.குமார் படத்தின் கலகலப்பிற்குப் பொறுப்பேற்கிறார்.

காவல்துறை அதிகாரியாக வரும் அருள்தாஸும் பிரமாதப்படுத்தியுள்ளார். பில்லி சூனியத்திற்குப் பயப்படுவது, சித்தனின் வளர்ச்சியைக் கண்டு பொறுமுவது, உறவாடிக் கெடுக்கும் நைச்சியத்துடன் நடந்து கொள்வதென படத்தின் மிக முக்கியமான பாத்திரத்தில் வருகிறார் அருள்தாஸ். அதே போல், சிறைச்சாலையில் இருக்கும் அல்லேலுயா பாத்திரமான பெயிண்ட்டரும் ரசிக்க வைக்கிறார். யுரேகா தனது கதாபாத்திரங்களை மிகப் பொருத்தமாகத் தேர்ந்தெடுத்துள்ளார். முதல்முறை விசாரணைக்காக கிராமத்துக்கு வரும் அருள்தாஸிடம், ‘துப்பிடுவேன் காசு கொடு’ என மிரட்டி பணம் வாங்குகிறார் கிழவி. இப்படி முதற்பாதி முழுவதும் ஏராளமான சின்னஞ்சிறு சுவாரசியங்கள்.

Actor Muraliramவெளிநாட்டினவரைப் பார்த்து, ‘யய்யா.. மீண்டும் எங்களை ஆள வந்துட்டீங்களா? ரொம்ப சந்தோஷம்ங்க’ என்று ஒரு பெண்மணி சொல்கிறார். இப்படி படம் நெடுக்க வசனங்கள் கவர்கின்றன. அப்பகுதி மக்கள் போலிஸ்காரரை, தொப்பிக்கார் என அடையாளப் படுத்துகின்றனர். படத்தின் நாயகனான முர்ளிராமும் (முரளிராம்), நாயகியான ரக்ஷாவும் இயல்பான மனிதர்களாகவே வலம் வருகின்றனர். அமெரிக்க வாழ் ராம்பிரசாத் சுந்தரின் பின்னணி இசையும் பாடல்களும் நேட்டிவிட்டியோடு ஒலித்து நம்மைப் படத்தோடு பிணைத்து வைத்திருக்கின்றன. வைரமுத்துவின் வரிகளும் சாட்டையடியாக உள்ளது. நாயகனாக நடித்திருக்க வேண்டிய M.சுகுமாரின் ஒளிப்பதிவில் மீண்டும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக மலைப் பிரதேசங்களை திரையில் கொண்டு வரப்பட்டுள்ளன.

அதிகாராத்தை எதிர்த்துப் போராடுவது என்பது சாமானிய காரியமா என்ன? அதுவும் ‘ரைஸ் புல்லிங்’கில் ஈடுபடும் அமைச்சரின் எண்ணம் புரியாமல் சித்தன் தலை கொடுத்து விடுகிறான். படத்தின் க்ளைமேக்ஸ், அப்படியே ‘டேக் டைவர்ஷன்’ ஆகி விடுகிறது. அதனால் குற்றப்பரம்பரையில் லட்சியத்துடன் இருக்கும் சித்தனின் போராட்டத்தை திரைக்கதை வலுவிழக்கச் செய்துவிடுகிறது. எனினும் யுரேகாவின் தொப்பி, அதன் திசை திரும்பும் க்ளைமேக்ஸ் தவிர்த்து,  மறக்கப்பட்ட மலைவாழ் மக்கள் மீது முத்திரையிடப்பட்ட அரசியலைப் பற்றிப் பேசும் முக்கியமான படமாக இருக்கும்.

அவுட் ஆஃப் தி ரெக்கார்ட்: இயக்குநர் யுரேகாவின் அனுமதியின்றி, படத்தின் இரண்டாம் பகுதியில் சுமார் ஏழு காட்சிகளை வெட்டிவிட்டனராம் தயாரிப்பாளர்கள். ‘பணம் கொடுத்தார்கள் என்பதால் இயக்குநரின் படைப்புச் சுதந்திரத்தில் தலையிடுவதா?’ என்கிறார் யுரேகா. படம் தற்போது இரண்டு மணி நேரம் முப்பது நிமிடங்கள் நீளம் கொண்டுள்ளது. வெட்டப்பட்ட காட்சிகளில், படத்தின் அமானுஷ்ய முடிவுக்கான தர்க்க ரீதியான காரணங்களை இயக்குநர் வைத்துள்ளதாகத் தெரிகிறது. ஆனால், மூன்று மணி நேர படங்களை கத்திரி போடச் சொல்லி திரையரங்குகள் நிர்பந்திக்கும் சூழல் நிலவுவதையும் இயக்குநர்கள் மனதில் கொள்ளவேண்டும் என்றே தோன்றுகிறது.