Search

ஒரு கதையின் கதை

தமிழ் இலக்கிய உலகிலிருந்து அனேகமாக மறக்கப்பட்டுவிட்ட ஒரு சிறந்த சிறுகதையாசிரியர் கிருஷ்ணன் நம்பி. மிகக் குறைவாகவே எழுதி, மிகக் குறைவான வாசகர்களையே சென்றடைந்தவர் இவர். இவரது ‘மாஸ்டர் பீஸ்’, 1974 இல் எழுதப்பட்ட மருமகள் வாக்கு எனும் சிறுகதை.

மருமகள் வாக்கு(ஓவியம்: கார்த்திகேயன் சுகுமாரன்)

அசோகமித்திரன் இக்கதையை ‘கணையாழி’ ஆசிரியராக, கையெழுத்துப் பிரதியில் படிக்கும்போதே, ஒரு மகத்தான படைப்பு என்று தனக்குப் பட்டதாகப் பதிவு செய்திருக்கிறார்.

எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒரு கட்டுரையில்.. பொப்புத்தி, ஆதிக்கக் கலாச்சாரம் என்று கலாச்சாரத் தளத்தில் மக்களின் மனங்களைத் தகவமைக்கும் அரசியலைப் பற்றியெல்லாம் இன்று நாம் பேசத் தொடங்கியுள்ளோம். இதையெல்லாம் விளக்கமாகப் புரிய வைப்பதற்கு கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’ ஒரு கதை போதும் என்கிறார். இக்கதையை மேலும் பல இலக்கியவாதிகள் மிக உயர்வாகச் சொல்லுகிறார்கள். இக்கதை பிறந்ததிலிருந்து இன்றைய தேதி வரை சொல்வதற்கு ஏராளமாக இருக்கிறது.

1974 இல், நம்பி நோய்வாய்ப்பட்டு தனது ஒரு காலை இழந்து உடலாலும் மனதாலும் மிகுந்த வேதனைக்குள்ளாகியிருந்த காலத்தில்தான் இக்கதை எழுதப்பட்டது. கதை எழுதப்பட்டுத் தயாராக இருந்தது. பத்திரிகைகள் எதற்கும் அனுப்பப்படவில்லை.

அப்போது ‘குங்குமம்’ பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட புதிது. ஆரம்ப காலத்தில் சில காலம் அதற்கு சாவி ஆசிரியராக இருந்தார். குங்குமம் பத்திரிகையில் வாசகர்கள் கேள்விக்கு, இதழ்தோறும் சாவி பதிலளிப்பார். ஒரு வாசகரின் கேள்வி: ‘உங்கள் பத்திரிகையில் தரமான சிறுகதைகள் எதுவும் வெளி வருவதில்லையே! ஏன்?’ என்பதாகும்.

அதற்கு சாவியின் பதில், “எங்களுக்கு தரமான சிறுகதைகள், சிறுகதைகள் எழுதுபவர்களிடமிருந்து வருவதில்லை” என இருந்தது.

கிருஷ்ணன் நம்பிஇதைப் படித்த கிருஷ்ணன் நம்பி, “வீணாக நீங்கள் கவலைப்படத் தேவையில்லை. தரமான சிறுகதையொன்றை அனுப்பியிருக்கிறேன். முடிந்தால் பிரசுரியுங்கள்” எனக் கூறி, “மருமகள் வாக்கு” கதையை குங்குமத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால் இக்கதை பிரசுரத்திற்கு ஏற்றுக் கொள்ளப்படவில்லை; கதையும் திரும்பி வரவில்லை. கோபமடைந்த கிருஷ்ணன் நம்பி, சாவிக்கு ஒரு கடிதம் எழுதி, அக்கதையைத் திருப்பி அனுப்புமாறு கேட்டுக் கொண்டார். சில நாட்களில் அக்கதை நம்பிக்கு வந்து சேர்ந்தது. கதையை அனுப்பும்போது, அத்துடன் சாவி ஒரு கடிதமும் வைத்திருந்தார். அக்கடிதத்தை நான் படித்திருக்கிறேன்.

‘மருமகள் வாக்கு’ கதை மிகவும் பிரமாதமாக இருக்கிறது. ஆனால், சில காரணங்களினால் என்னால் வெளியிட இயலவில்லை. நீங்கள் விரும்பியபடி, கதையை இத்துடன் திருப்பி அனுப்பியிருக்கிறேன்.

– சாவி

இக்கதை, அந்த வருட ‘கணையாழி’ தீபாவளி இதழில் வெளியாகி, மிகச் சிறந்த கதையெனப் பெயரைப் பெற்றது.

1976இல் நம்பி காலமானார். இருக்கும்போதே கவனம் பெற முடியாமல் போகும் எழுத்தாளர்களை அவர்கள் மறைவுக்குப் பின் எவர் கவனத்தில் கொள்ளப் போகிறார்கள்?

ஆனால் அதிசயம் நடந்தது ‘இதயம் பேசுகிறது’ மணியன் மாத இதழாக இரண்டு மூன்று சிறுகதைகளை மாத்திரமே உள்ளடக்கி புத்தகம் ஒன்றைச் சில இதழ்கள் வெளியிட்டார். அப்புத்தகத்தின் இரண்டாவது இதழில் இக்கதை வெளிவந்தது. வெளிவந்திருப்பதை அறியாமலேயே, அப்புத்தகத்தை வாங்கிய எனக்கு அது ஒரு இன்ப அதிர்ச்சியை அளித்தது. இது அனேகமாக 1978 ஆம் ஆண்டு அல்லது 1979 ஆக இருக்க வேண்டும்.

1980இல், ‘நேஷ்னல் புக் டிரஸ்ட் ஆஃப் இந்தியா’, நியூ டெல்லி, ‘புதிய தமிழ்ச் சிறுகதைகள்’ என்கிற தலைப்பில் ஒரு சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டார்கள். தொகுப்பாசிரியர் அசோகமித்திரன். இந்தத் தொகுப்பில் முதல் சிறுகதையாக இந்த ‘மருமகள் வாக்கு’ பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.

ஒருமுறை அசோகமித்திரனை நேரில் சந்தித்தபோது ஒரு சேதி சொன்னார். பிரான்சு நாட்டிலிருந்து இலக்கியக் குழு ஒன்று, இந்திய மொழிகளில் மொழிக்கு இரண்டு என்கிற கணக்கில், சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து, அதை பிரெஞ்சு மொழியில் மொழியாக்கம் செய்ய இருப்பதாகவும், அதற்குத் தமிழிலிருந்து இரண்டு சிறந்த சிறுகதைகளைப் பரிந்துரை செய்யும்படித் தன்னைக் கேட்டதாகவும், அதற்கு கிருஷ்ணன் நம்பியின் ‘மருமகள் வாக்கு’, வண்ணநிலவனின் ‘எஸ்தர்’ ஆகிய கதைகளைத்தான் பரிந்துரை செய்திருப்பதாகவும் என்னிடம் தெரிவித்தார். அவைகள் அந்த மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்டு, வெளிவந்ததா என்கிற தகவல் என்னிடம் கிடையாது.

தமிழின் சிறந்த சில சிறுகதைகளைத் தேர்வு செய்து, அதை கன்னட மொழியில் மொழியாக்கம் செய்து புத்தகமாகவும் வெளிவந்த செய்தி ஒன்றை சுந்தர ராமசாமி ஒருநாள் என்னிடம் கூறினார். அந்தத் தொகுப்பிலேயே மிகச் சிறந்த கதை ‘மருமகள் வாக்கு’ கதை என்று, புத்தகம் வெளிவந்த பின் நடைபெற்ற கருத்தரங்கம் ஒன்றில் பேசப்பட்டது என்கிற தகவலையும் சுந்தர ராமசாமி மூலம் அறிய முடிந்தது.

CONTEMPORARY Tamil Short Fiction1994இல், கலைஞன் பதிப்பகத்தார் அந்த நூற்றாண்டின் மிகச் சிறந்த சிறுகதைகள் நூறைத் தேர்ந்தெடுத்து, “இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள்” என்கிற தலைப்பில் வெளியிட்டார்கள். இந்தத் தொகுப்பினைத் தொகுத்தவர் எழுத்தாளர் விட்டல் ராவ். இத்தொகுப்பிலும், இக்கதை இடம்பிடித்தது.

ஒரு விநோதம்! ஒருமுறை ‘குங்குமம்’ பத்திரிகை வாழும் எழுத்தாளர்கள் சிலரிடம் அவர்கள் படித்ததில் பிடித்த கதையைச் சொல்லுங்கள் நாங்கள் பிரசுரிக்கிறோம் எனக் கூறி சில சிறுகதைகள், சில எழுத்தாளர்களிடமிருந்து கேட்டு வாங்கிப் போட்டார்கள். அசோகமித்திரன் தனக்குப் பிடித்த கதையாக ‘மருமகள் வாக்கு’ கதையைத் தேர்ந்தெடுக்க அக்கதை குங்குமம் வார இதழில் பிரசுரமாயிற்று. எந்தப் பத்திரிகை முதன்முதலில் இக்கதையைப் போட விரும்பவில்லையோ, அதே பத்திரிகையில் இச்சிறுகதை சில வருடங்களுக்குப் பிறகு பிரசுரம் கண்டது விநோதம்தான்.

CONTEMPORARY Tamil Short Fiction என்கிற தலைப்பில் East West Books (Madras) Pvt. Ltd., தமிழின் சில சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து 1999ஆம் ஆண்டு வெளியிட்டுள்ளனர். வசந்த சூர்யா என்பவர் மொழிமாற்றம் செய்ய, இத்தொகுப்பின் ஆசிரியர் எழுத்தாளர் திலிப் குமார். இந்தப் புத்தகத்திலும் ‘மருமகள் வாக்கு’ கதை பிரசுரம் கண்டிருக்கிறது.

1974 இல், ‘கணையாழி’யில் வெளிவந்த இக்கதை, அதே ‘கணையாழி’யில் 1990களின் ஆரம்பத்தில் மறுபடியும் பிரசுரமாகியிருக்கிறது என்கிற செய்தியை என் நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்துத் தெரிவித்தார்.

கிருஷ்ணன் நம்பி, சுந்தர ராமசாமி போன்றவர்கள் குமரி மாவட்டத்தைச் சார்ந்தவர்கள். குமரி மாவட்ட எழுத்தாளர்கள் எழுதிய சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு ஒன்று வெளிவந்திருக்கிறது. அந்தத் தொகுப்பிலும், இக்கதையைச் சேர்த்திருக்கிறார்கள்.

Krishnan Nambiநானறிந்து கடைசியாக 2014இல், எஸ்.ராமகிருஷ்ணன் டிஸ்கவரி புக் பேலஸ் பதிப்பகத்தாருக்குத் தொகுத்த 100 சிறந்த சிறுகதைகள் எனும் தொகுப்பிலும் இக்கதை இடம் பெற்றிருக்கிறது.

ஆக, இக்கதை எழுத்தாளர்களையும் வாசகர்களையும் வெகுவாகக் கவர்ந்திருக்கிறது என அறிய முடிகிறது.

இந்தச் சிறுகதையை, சின்னச் சின்ன மாற்றங்களுடன் வீதி நாடகமாக அறிவொளி இயக்கத்தின் சார்பில் தமிழ்நாட்டின் பல்வேறு கிராமங்களில் ஆயிரம் முறைக்கு மேல் நடத்தியிருப்பதாக முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கச் செயலாளர் ச.தமிழ்ச்செல்வன் ஒருமுறை என்னிடம் தொலைபேசி உரையாடலில் தெரிவித்தபோது நான் மிகவும் ஆச்சரியம் அடைந்தேன்.

ஒரு கதை மூன்று முறை நடிக்கப்பட்டாலே முப்பது பத்திரிகைகளில் செய்தி வரும் இக்காலத்தில். இந்தச் செய்தியை பத்திரிகைகள் எதுவும் கண்டுகொள்ளவே இல்லை என்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. எழுத்தாளர் ம.மணிமாறன் சொன்னது போல் கண்ணுக்குத் தெரியாத நூதனமான அதிகாரக் குழுக்களின் புறக்கணிப்புத்தான் இதற்கு முக்கியமான காரணமாக இருக்கவேண்டும்.

இன்றைய தலைமுறை வாசகரே, உங்களில் எத்தனை பேர் இக்கதையைப் படித்திருக்கிறீர்கள்?

தான் இறந்தாலும் சாகா வரம் பெற்ற இக்கதையை எழுதி விட்டுச் சென்ற கிருஷ்ணன் நம்பி 1976 இல் ஜூன் 16 இல் காலமானபோது அவருக்கு வயது 44.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்

(மருமகள் வாக்கு கதையை படிக்க இங்கே சொடுக்கவும்)