ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒரு மொழி
ஓமெனும் ஓங்காரத்துள்ளே உருவரு
ஓமெனும் ஓங்காரத்துள்ளே பலபேதம்
ஓமெனும் ஓங்காரத்துள்ளே ஒண் முத்தி சித்தியே
– திருமந்திரம்
ஓம் என்பதே பிரணவ மந்திரம். ஓம் என்று கூறியே மந்திரங்களை ஓத வேண்டும். ஆதியில் ஓம் என்று கூறியே வேதங்களை ஓதத் தொடங்குவர். பின்னரே “ஹரி ஓம்” என்று அதை மாற்றினர்.
அ , உ , ம்
என்ற மூன்று எழுத்துக்களே ஓம் ஆகும். வாயைத் திறப்பதன் மூலம் அ ஒலியும் உதட்டைக் குவித்தல் மூலம் உ ஒலியும் வாயை மூடுதல் மூலம் ம் ஒலியும் ஒலிக்கும். உலகில் பேசும் மொழி எதுவாயினும் அதற்கு வாயின் இம்மூன்று அசைவுகளும் இன்றியமையாததாகும். ஓம் எந்த மொழியையும் சேர்ந்ததன்று. அது பொதுவாக இறைவனைக் குறிக்கும் ஒரு மந்திர ஒலி. தமிழைப் பொறுத்தவரை “ஓ” வின் அமைப்புப் பிள்ளையாரின் யானை முகத்தை ஒத்திருப்பது குறிப்பிடத்தக்கது. நாம் எழுதத் தொடங்கும் பொழுது போடும் பிள்ளையார் சுழி ( உ) தான் ஓம். மந்திரங்களை ஓதும் பொழுது ஓம் ஒலியுடன் தொடங்குதல் மரபு.
ஔவை சொல்லும் இடைபிங்கலையின் எழுத்தும் அதுவே!
– தவமணிப் புதல்வன்