32°C
விளம்பரம்
VMTalks Header Ad Slot
விளம்பரம்
VMTalks Below nav Ad Slot

“அவரது ஆற்றல் தீ போல!” – துரை செந்தில்குமார் | லீடர்

Dinesh R சேலம் Published: 31/03/2026 4 நிமிட வாசிப்பு சினிமா
எழுத்து அளவு:

லெஜண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடிக்க, ஆர்.எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லீடர்’ திரைப்படம் வரும் ஏப்ரல் 3ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் இசை மற்றும் ஆக்ஷ‌ன் டீசர் வெளியீடு சென்னையில் பிரம்மாண்டமாக‌ நடைபெற்றது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, ” நான் உதவி இயக்குந‌ராக இருந்தபோது லெஜெண்ட் சரவணனின் தந்தையை 1988 ஆம் ஆண்டில் சந்தித்திருக்கிறேன். அந்தக் காலத்தில் உதவி இயக்குந‌ர்களாக இருப்பவர்கள் சம்பளம் வாங்காத வேலைக்காரர்களாக இருப்பார்கள். அவருடைய கடைக்கு நாங்கள் அடிக்கடி செல்வோம். நூறு ரூபாய்க்கு கீழ் 99 ரூபாய்க்கு அவர்கள் ஒரு சட்டையை விற்பனை செய்வார்கள். நூறு ரூபாய் கிடைத்தவுடன் அந்த சட்டையை வாங்கலாம் என்பதற்காக அடிக்கடி அந்தக் கடைக்குச் சென்று பார்த்து விட்டு வருவோம், ஒரு முறை தீபாவளி தருணத்தில் 500 ரூபாய் கொடுத்தார்கள். அதை எடுத்துக்கொண்டு சட்டையை எடுக்கலாம் என்று கடைக்குச் சென்றோம். அன்றைய காலகட்டத்தில் 500 ரூபாய்க்கு குடும்பத்தினர் அனைவருக்கும் சட்டையை எடுக்க முடியும் என்றால் அது சரவணா ஸ்டோர்ஸில் மட்டும் தான் முடியும். அந்தத் தருணத்தில் நான், என் அப்பாவுக்கு, என் தம்பிக்குத் தங்கச்சிக்கு டிரஸ் எடுத்தேன்.‌ நான் பார்த்து வைத்திருந்த சட்டையில் விலையில் மாற்றம் இருந்தது. பில் 590 ஆக இருந்தது என்னிடம் ₹500 மட்டும் தான் இருந்தது. அப்போது மீதி பணத்தை எப்போது உங்களிடம் இருக்கிறதோ அப்போது தாருங்கள் என்று சொன்னார். நூறு ரூபாய் சட்டை வாங்குபவர்களுக்கும் அவர் ஒரே மரியாதை தான் வழங்கினார், லட்ச ரூபாய்க்கு சட்டையை வாங்கியவர்களுக்கும் அவர் அதே மரியாதை தான் வழங்கினார். வாடிக்கையாளரை மதித்த முதலாளியாக அவர் இருந்தார். அதுதான் அவருடைய வெற்றிக்குக் காரணம் என்று நான் நினைக்கிறேன்.

நேர்மை, குறைந்த லாபம், நிறைய வாடிக்கையாளர்கள் – இதுதான் லெஜெண்ட் சரவணனின் வெற்றிக்கான தாரக மந்திரம். சினிமாவில் சின்ன பட்ஜெட்டில் நிறைய படங்களை லெஜெண்ட் சரவணன் தயாரிக்க உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. எங்கள் சினிமாவிற்கு நிறைய தயாரிப்பாளர்கள் தேவைப்படுகிறார்கள், உங்களைப் போல். உங்கள் அப்பா வணிக துறையில் எப்படி சாதனை படைத்தார்களோ அதே போல் நீங்கள் திரைத்துறையிலும் மிகப்பெரிய சாதனையைப் படைக்க வேண்டும். 50 அல்ல 100 படங்கள் கூட எடுத்திட வேண்டும், தயாரித்திட வேண்டும், சினிமா மற்றும் சினிமா தொழிலாளர்களை வாழ வைக்க வேண்டும்” என்றார்.

இயக்குநர் துரை செந்தில் குமார், “லீடர் எனது ஆறாவது படம். கடந்த இரண்டு ஆண்டுகளாக என் குழுவினரின் கடின உழைப்பே இந்தப் படத்தை இந்த நிலைக்குக் கொண்டு வந்துள்ளது. முதலில் இசையமைப்பாளர் ஜிப்ரான் சார் பற்றி சொல்ல வேண்டும். இந்தத் திரைப்படம் ஆரம்பித்தவுடன் நாங்கள் நினைத்த பெயர் ஜிப்ரான் சார் தான். அவருடன் பணியாற்றியது ஒரு தெய்வீகமான அனுபவமாக இருந்தது. சில நேரங்களில் நான் அவருக்கு அழைக்க நினைக்கும் தருணத்திலேயே அவர் என்னைத் தொடர்பு கொள்வார். எங்களுக்குள் ஒரு ஆன்மிக இணைப்பு போல இருந்தது.

ஒரு ஆக்ஷன் காட்சிக்குச் சக்திவாய்ந்த முருகன் பாடல் தேவை என்று நினைத்தேன். நான் ஒரு குறிப்பைக் காட்டியபோது, அது ஏற்கனவே ஜிப்ரான் சார் உருவாக்கிய ஆன்மிக இசை என்று தெரிய வந்தது. அந்த மாதிரி ஒரு அதிசய ஒத்திசைவு இந்தப் படமெங்கும் இருந்தது. இந்தப் படத்தின் உயர்வுக்கு அவருடைய இசை மிகப் பெரிய காரணம், மிகவும் நன்றி சார்.

இந்தப் படம் தொடங்குவதற்கு முன்பு நான் பல சிரமங்களைச் சந்தித்தேன். பல கதைகள் இருந்தும் அது படமாக மாறவில்லை. அந்த நேரத்தில் தான் லெஜெண்ட் சாரைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதே நேரத்தில் ‘கருடன்’ வாய்ப்பும் வந்தது. நான் ஒரு திரைப்படத்தை முடித்து விட்டு வருகிறேன் என்று சொன்னபோது, “நான் உங்களுக்காகக் காத்திருக்கிறேன், இந்தப் படத்தை நாம்தான் செய்யப் போகிறோம்” என்று அவர் கூறினார். அந்த நம்பிக்கையே இந்தப் படத்தின் அடித்தளம். அவரின் ஆற்றல் பற்றிச் சொல்ல வேண்டும் என்றால், அது ஒரு துப்பாக்கியிலிருந்து பாயும் குண்டு போல இருக்கும். எந்த நேரத்திலும் அதே உற்சாகம். நேரத்திற்கு முன்பே வந்துவிடுவார்.

‘நமக்காக நூறு பேர் வேலை செய்கிறார்கள்; நாம் தாமதிக்கக் கூடாது’ என்று அவர் சொல்வார். அது எனக்கு ஒரு பெரிய பாடமாக இருந்தது. மகாபாரதத்தில் அர்ஜுனன் பறவையின் கண் மட்டுமே பார்க்கிறான் என்று சொல்வார்கள். அதுபோல வெற்றி மட்டுமே அவரின் இலக்கு. அவரின் ஆற்றல் ஒரு தீ போல. அந்த ஆற்றலை அவர் தனது ரசிகர்களிடமும் பரப்பியிருக்கிறார்” என்றார்.

Dinesh R
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.