Search

ஓல்ட் பாய் (2003)

Old Boy(2003)

‘பழிக்குப் பழி’ என்ற கதைக்கரு கொண்ட தென் கொரியத் திரைப்படம் இது. ஆனால், கண்ணுக்குக் கண், இரத்தத்திற்கு ரத்தம் என நாம் வழக்கமாக யூகிப்பது போன்ற கதையம்சம் கொண்ட படமில்லை. படம் மனிதனின் பழி வாங்கும் மனநிலையை மட்டும் பேசாமல், தான்வகுத்த சமூகக் கட்டுபாடுகளுக்குத் தன்னை எந்தளவுக்கு ஒப்படைத்துள்ளான் என்பதையும் நுணக்கமாகச் சித்தரிக்கிறது.

ஒரு மனிதனைப் பதினைந்து வாருடங்கள் தனியாக ஓர் அறையில் அடைத்து வைத்தால் அவன் மனநிலை எப்படியிருக்கும்?

ஓ-டேசு என்பவரை ஓரிரவு கடத்தி விடுகின்றனர். அவரது மனைவியும் கொல்லப்பட, அந்தப் பழியும் ஓ-டேசு மீது விழுகிறது. யார் கடத்தினார்கள், எதற்குக் கடத்தினார்கள் என்று தெரியாமல் பதினைந்து வருடம் அறையில் அடைப்பட்டு உள்ளார். அறையில் இருக்கும் தொலைக்காட்சிதான் ஒரே துணை. மனைவி கொல்லப்பட்டதையும் அதில்தான் தெரிந்து கொள்கிறார். அந்தக் கொடும் தனிமையால் அவர் பைத்தியமாகிவிடாமல் இருக்க, அவருக்கு மருந்தும் கொடுக்கப்படுகிறது. பிரக்ஞையோடு துடிப்பவர், கடத்தியவரைக் கண்டுபிடித்து பழிவாங்க தன்னைத் தயார்ப்படுத்திக்கொண்டு வருகிறார்.

Choi Min-Sik ஒருநாள் விழித்தெழும் பொழுது, மொட்டை மாடி ஒன்றில் வைக்கப்பட்டுள்ள சூட்கேசில் தானிருப்பதை உணர்கிறார். பழிவாங்கும் தன் லட்சியத்தைத் தொடங்கும் முன், வயிறார உணவருந்த ஒரு ரெஸ்டாரண்டிற்குச் செல்கிறார். அங்கு மயங்கி விழுபவரை அந்த ரெஸ்டாரண்ட்டில் வேலை செய்யும் மைடோ எனும் பெண் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கிறார். ஓ-டேசுவின் மகளைக் கண்டுபிடிக்கவும் மைடோ உதவுகிறாள். ஆனால் ஸ்வீடனிலிருந்து தனது மகளை யாரோ தத்தெடுத்து விட்டதாகத் தெரிய வருகிறது. அனைவரையும் இழந்து விட்ட ஓ-டேசுவுக்கும், சின்ன பெண்ணான மைடோவுக்கும் இடையில் காதல் மலருகிறது.

தன்னை 15 ஆண்டுகள் சிறைப்படுத்திய லீ-வூ ஜின்னை, ஒருவழியாகக் கண்டுபிடித்து விடுகிறார் ஓ-டேசு. ‘யார்? ஏன்? எனக் கண்டுபிடி’ என லீ-வூ ஜின் ஐந்து நாட்கள் கெடுவைக்கிறான் ஓ-டேசுக்கு. ஐந்து நாட்களுக்குள் அவன் கண்டுபிடித்துவிட்டால் தானே தற்கொலை செய்து கொள்வதாகவும், தவறினால் மைடோவைக் கொன்று விடுவேன் என்றும் சொல்கிறான் லீ-வூ.

பள்ளிக் காலத்தில் ஓ-டேசு, லீ-வூ ஜின்னும் அவனது அக்கா லீ-சூவும் நெருக்காமாக இருப்பதைப் பார்த்து விடுகிறான். அவன் தனது நண்பனிடம் சொல்லும் ஒரு விஷயம், வதந்தியாகப் பரவி லீ-வூ ஜின்னின் அக்கா லீ-சூ தற்கொலை செய்யத் தூண்டி விடுகிறது.

உண்மையைக் கண்டுபிடித்து விட்டதால், ஐந்தாவது நாள் லீ-வூ ஜின்னைச் சொன்னபடி தற்கொலை செய்து கொள்ளச் சொல்கிறார் ஓ-டேசு. சிரிக்கின்ற லீ-வூ ஜின், “தவறான கேள்விகளுக்குச் சரியான பதில் கிடைக்காது. ஏன் நான் சிறைபடுத்தினேன் என்பது தவறான கேள்வி. ஏன் 15 ஆண்டுகளுக்கு பின் விடுதலை செய்து வெளியில் விட்டேன் என்பதுதான் சரியான கேள்வி” எனச் சொல்கிறான் லீ-வூ ஜின்.

ஏன் ஓ-டேசுவை லீ-வூ ஜின் வெளியில் விட்டான் என்ற யூகிக்க இயலாத அதிர்ச்சிதான் படத்தின் க்ளைமேக்ஸ். எப்பேர்ப்பட்ட மனிதனையும் உலுக்கிவிடும் உச்சக்கட்ட வஞ்சம் அது.

வழக்கம்போல் படத்தில் வில்லன் செத்தாலும், மரண அவஸ்தை என்னவோ நாயகனுக்குத்தான். ஆனால் மரண அவஸ்தை என்பது உடல் சார்ந்ததாக இருக்கும். ஆனால் இது தாங்கிக் கொள்ள இயலாத மன அவஸ்தை. விருப்பமில்லாதவற்றை மறக்கும் வல்லமை மனிதனுக்குக் கிடைத்தால்தான், இத்தகைய சிக்கலில் இருந்து தீர்வு கிடைக்கும். நாயகன் செயற்கையாக அதற்கும் முயல்கிறார். ஆனால் இயக்குநரின் சாமர்த்தியம் நாயகனுக்கு மன நிம்மதி கிடைத்ததா இல்லையா எனத் தெளிவாகச் சொல்லாமல் நம் விருப்பத்திற்கு விட்டுவிடுகிறார்.

Yoo Ji-Tae

சின்னச் சின்ன விஷயங்களுக்கும் நம்மூர் வில்லன்கள் நம் காதைச் செவிடாக்கி, ரொம்பச் சத்தம் போட்டுப் பொட்டென நாயகன் கையால் போய்ச் சேர்வார்கள். ஆனால் இந்தப் படத்தின் வில்லன் அழகாக, உயரமாகக் குரலுயர்த்தியும் பேசாத குரூரமான புத்திசாலி கனவான். மனித மனம் தன்னை இறுக்கிப் பிணைந்து கொள்ளும் ஒழுக்க விதிகளையும், சமூகக் கோட்பாடுகளையும் ஆயுதங்களாகப் பழிவாங்கத் தேர்ந்தெடுக்கிறான். நாயகன் உயிருடன் உள்ளவரை தண்டனையை அனுபவிக்கும்படி செய்து விடுகிறான்.

ஊருக்குப் பயந்து வாழுபவர்கள்தானே நாம் அனைவரும். அதனால்தான் தான் கர்ப்பமாக இருக்கிறோம் என்ற வதந்தியை நம்பத் தொடங்கும் லீ-சூவுக்கு, மாதவிடாய் நின்று போலிக் கர்ப்பத்தால் (False pregnancy) வயிறும் பெரிதாகத் தொடங்குகிறது. லீ-சூவின் நிலைமைக்குக் காரணம் அவளது பயமும் கற்பனையும்தான். ஆனால் தனது அக்காவின் மரணத்திற்கு யார் மீதாவது பழி போட்டால்தான், லீ-வூ ஜின் குற்றவுணர்வில் இருந்து மீள இயலும். நாம் அனைவருமே மற்றவர் மீது பழி போட்டுத் தப்பிக் கொள்ளப் பார்ப்பவர்கள்தானே!

படம் கேட்கும் இன்னொரு முக்கியமான கேள்வி: “நான் மிருகத்தை விடக் கேவலமானவனாக இருக்கலாம். ஆனால் எனக்கு வாழ உரிமை இல்லையா?” என்பதே!

ஷங்கரிடமும் பாலாவிடமும் கேட்டால், வாழத் தகுதியற்றவர்களைக் கொல்வதே சிறந்தது என கொடி பிடிப்பார்கள். ஆனால் இப்படம் நாயகனுக்கு ரணத்துடன் வாழ ஆதரவளிக்கிறது. மற்றவரின் தனிப்பட்ட அந்தரங்கத்தைப் பற்றிப் பேசுவதால் நாயகன் தன்னை மிருகமாக உணருகிறான். ம்ம்.. அப்படிப் பார்த்தால் நம்மைச் சுற்றித்தான் எத்தனை மிருகங்கள்?

அற்புதமான ஜப்பானிய மாங்கா காமிக்ஸில் இருந்து மூலக் கதையைத் தழுவியுள்ளனர். ஆசியாவின் சிறந்த 10 படங்களில் ஒன்றென சி.என்.என்.-இல் வாக்களித்தவர்கள் தேர்ந்தெடுத்துள்ளனர். இயக்குநர் பார்க் சான்-வூக்கின், மூன்று ‘பழிக்குப் பழி’ படவரிசையில் இது இரண்டாவது படம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் உலகளவில் இந்தப் படம் ஏற்படுத்திய பாதிப்பை மற்ற இரண்டு படங்களும் ஏற்படுத்தவில்லை.