(முக்கிய நடிகர்கள்: ஜி.என்.பாலசுப்ரமணியம்; எம்.எஸ்.சுப்புலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.எஸ்.துரைராஜ்)
1940 ஆம் வருஷம் தமிழ்த்திரையுலகிற்கு ஒரு முக்கியமான வருஷம். இந்த வருஷம் வெளிவந்து பெரும் வெற்றியடைந்த திரைப்படங்களில் மிகவும் முக்கியமான திரைப்படம் சகுந்தலை.
ஆரம்ப காலங்களில் திரைப்படங்களில் கதையை விட தலையாய அம்சமாக இருந்தது அவற்றின் பாடல்கள் தாம். புதிதாகத் தோன்றியிருந்த சினிமாவை, நாடகத்தின் தொடர்ச்சியாகவே கருதினர் அன்றைய மக்கள்.
பவளக்கொடி, ஸ்ரீவள்ளி போன்ற அக்கால பிரபல நாடகங்களில் பாடப்பட்டுவந்த பாடல்களினால் வெகுவாகக் கவரப்பட்டிருந்த மக்கள், அதைப் போலவே திரையிலும் எதிர்பார்த்ததன் விளைவு தான் ஆரம்பகாலப் படங்களின் ஏராளமான பாடல்களுக்கான காரணமாக இருக்க முடியும்.
பின்னணி பாடுவது என்கிற ஏற்பாடுகள் எல்லாம் தோன்றியிராத காலம், எனவே சினிமாவில் நடித்தவர்கள் பெரும்பாலும் பாடத் தெரிந்தவர்களாகவே இருந்தனர். அப்போதெல்லாம் நன்கு பாடத் தெரிந்தவர்களுக்கு சினிமாவில் மவுசு அதிகம். அம்மாதிரியான சூழலில் உருவான படம்தான் சகுந்தலை.
கர்நாடக இசையில் தேர்ந்தவர்களாகவும், மேடையில் மிகவும் பிரபலமாக விளங்கியவர்களுமான ஜி.என்.பாலசுப்ரமணியம், எம்.எஸ்.சுப்புலட்சுமி இருவரும் இணையாக நடித்த இப்படத்தின் அனைத்துப் பாடல்களுமே மாபெரும் வெற்றியை ஈட்டின.
‘சகுந்தலை’ நாடறிந்த நல்லகாவியம். கதை இப்போது தேவை இல்லை. நான் முதன்முதலாக இப்படத்தைப் பார்த்தபோது (1945-இல்) ஒரு சிறுவனாக இருந்தேன். ஆக, சிறுவனாக நான் பார்த்த ‘சகுந்தலை’ திரைப்படத்தின் வாயிலாக எனக்குக்கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளவே இப்போது தோன்றுகிறது. இப்படத்தின் பலகாட்சிகள் கனவுச்சித்திரமாக மனதிலே பதிந்து இன்று வரை என் கூடவே வந்துகொண்டிருக்கிறது. அந்த நினைவுகள் அப்படியே இருக்கட்டும்.
சோலைகள் நிறைந்த பகுதி ஒன்றில் ஒரு குடில். துள்ளித்திரியும் மான்கள். விநோதமான கொண்டை அலங்காரத்துடன் ஒரு பெண். இந்தப் பெண்ணும், ஆண்மகன் ஒருவனும் அடிக்கடி சந்திக்கிறார்கள். பல சமயங்களில் சேர்ந்து பாடுகிறார்கள். உல்லாசமாக இருக்கிறார்கள். பாட்டுக்கள் மிகவும் ரம்மியமாக இருக்கின்றன.
அந்த ஆண், அவளுக்கு ஒரு மோதிரம் அணிவிக்கிறான். சில நாட்கள் கழிந்தபின் அவன் அங்கிருந்து சென்றுவிடுகிறான்.
ஒருநாள் இந்தப்பெண் ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கையில், கையில் அணிந்திருந்த அந்த மோதிரம் நழுவி, தண்ணீரில் விழுந்துவிடுகிறது. அதை ஒரு மீன் விழுங்கிவிடுகிறது.
இன்னொரு காட்சி. இரு செம்படவர்கள் ஒரு மீனுக்காகச் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். ஒருத்தன் பெயர் நெட்டை. மற்றொருவன் பெயர் குட்டை. சண்டையின் உச்சகட்டத்தில் நெட்டையாக இருந்தவன் குட்டையனை அடிக்க ஆரம்பிக்கிறான். அடிபட்ட குட்டையன் திரும்பித்தாக்காமல், ‘அடிப்பியோ, ஙொப்பன்மவனே, சிங்கம்டா’ என தனது வீரத்தைப் பறை சாற்றுவான். நெட்டையான ஆள், ‘என்ன சிங்கம்டா’ எனக் கூறி மறுபடியும் அடிப்பான். அடிபட்டவன் மறுபடியும் இதே ‘அடிப்பியோ, ஙொப்பன்மவனே, சிங்கம்டா’ வசனத்தையே பேசுவான். ஆனால் குரல் பாவத்தில் மாறுபாடு. இப்படி அடித்தவர் அடித்துக்கொண்டே இருக்க, அடிபட்டவர் மறுபடியும், மறுபடியும் இதே வசனத்தை வேறு வேறு பாணியில் சொல்ல கடைசியில் அது அழுதுகொண்டே சொல்வதுபோல் முடியும்.
இந்தக்காட்சியை சிறுவனாக இருந்த நான் மாத்திரமல்ல, படம் பார்த்துக்கொண்டிருந்த அனைவரும் விழுந்து விழுந்து சிரித்தபடி பார்த்தது நினைவில் உள்ளது. சில வருடங்களுக்குப் பிறகுதான் அடித்தவராக நடித்தவர் என்.எஸ்.கிருஷ்ணன் என்றும், அடிபட்டவராக நடித்தவர் டி.எஸ்.துரைராஜ் என்கிற நகைச்சுவை நடிகர் என்பதும் தெரியவந்தது. இந்த நகைச்சுவைக் காட்சி, திரையுலகில் சாகா வரம் பெற்ற முக்கியமான நகைச்சுவை காட்சியாக இன்றளவும் பேசப்படுகிறது.
திரைப்பட வரலாற்றில் ‘சகுந்தலை’ திரைப்படத்திற்கு மிகவும் உன்னதமான ஓர் இடமுண்டு. இதற்குச் சிறப்பான காரணமாக இதில் பாடி, நடித்த இரு சங்கீத மேதைகள் மற்றும் இப்படத்திற்கு இசையமைத்த துறையூர் ராஜகோபாலசர்மா ஆகியோரைக் குறிப்பிட வேண்டும்.
இந்தத் துறையூர் ராஜகோபாலசர்மா ஒரு கர்நாடக இசைப்பாடகர். மேடைகளில் கச்சேரி செய்து மிகவும் பிரபலமானவர். இவர் பாடிய பாடல்கள் சில அக்காலத்தில் இசைத்தட்டாக வந்து பிரபலமடைந்திருக்கின்றன.
திரைப்பட இசையமைப்பாளர்களைப் பற்றிய வரலாறு எழுதும் போது இந்த இசையமைப்பாளரை நிச்சயமாகப் புறக்கணிக்க முடியாது. சமீபத்தில் தமிழ் இலக்கியப் பத்திரிகையான ‘உயிர்மை’யில், திரை இசை விமர்சகர் ஷாஜி திரை இசைப்பாடல்களை மேலெடுத்துச் சென்ற இசையமைப்பாளர்கள் பற்றி ஒரு கட்டுரை எழுதியிருந்தார். அக்கட்டுரையில் துறையூர் ராஜகோபாலசர்மா, எஸ்.ராஜேஸ்வர ராவ் போன்ற மிகச் சிறந்த திரை இசையமைப்பாளர்கள் பற்றி எவ்விதக் குறிப்பும் இல்லை. ஆனால் நேற்றைய ஜேம்ஸ் வசந்தன், எவரும் அதிகம் அறிந்திராத பிரதர் லட்சுமணன் போன்றோர் திரை இசையை மேலெடுத்துச் சென்றவர்கள் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறார்கள்! ஓர் அபத்தமான கட்டுரை அது.
‘சகுந்தலை’ திரைப்படம் ஒரு இசைக்காவியம். பல பாடல்கள் மிகப் பிரபலமாக அக்காலத்தில் பேசப்பட்டது. இந்தப் படத்திற்குப் பிறகு இவரது இசையமைப்பில் வெளிவந்த ‘சாவித்திரி (1941)’ படமும் இசைக்காகவே மிகவும் ரசிக்கப்பட்டது.
சாவித்திரி படத்தில் இடம் பெற்றிருந்த,
‘மனமே கணமும் மறவாதே – ஜெகதீசன்
மலர் பதமே’
‘ப்ரூகி முகும் தேதி – ரசனே’
போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன. இன்றைய கர்நாடக இசை வல்லுனர்களான நெய்வேலி சந்தானகோபாலன், செளம்யா போன்றவர்கள் இன்றும் கூட தங்களது கச்சேரிகளில் இப்பாடல்களைப் பாடி வருகிறார்கள். இப்படம் வெளிவந்து எழுபது ஆண்டுகளுக்குப் பின்னரும் பாடப்படுவது இந்த இசையமைப்பாளரின் திறமைக்கு தக்க சான்று.
இருபத்தி ஐந்து வாரங்களுக்கு மேல் அதன் இசைக்காகவே ஓடிய படம் ஸ்ரீவள்ளி. ஏ.வி.எம்மின் தயாரிப்பான இப்படத்திற்கு இசையமைத்தவர் இந்த துறையூர் ராஜகோபாலசர்மா. உடன் இசை சுதர்சனம்.
தமிழ்த்திரை இசையை விமர்சனம் செய்ய முற்படும் விமர்சகர்கள் துறையூர் ராஜகோபாலசர்மா போன்ற மிகத் திறைமை வாய்ந்த இசையமைப்பாளர்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். இவர்களைப் போன்றவர்களின் குறிப்பு இல்லாமல் திரைப்பட இசையை மேலெடுத்துச் சென்றவர்கள் பட்டியலை எந்த திரை இசை விமர்சகர்களும் அறுதியிட்டு விட முடியாது.
‘சகுந்தலை’யில் ஏறத்தாழ அனைத்துப் பாடல்களுமே அமோக வெற்றியைப் பெற்றன என்று சொல்லலாம்.
‘மனமோகனாங்க அணங்கே,
வாடுதே, கனவிலும் என் மனம்’
‘பிரேமையில் யாவும் மறந்தோமே’
‘ஆனந்தம் என் சொல்வனே’
‘எனது இடது தோளும், கண்ணும் துடிப்பதென்ன’
போன்ற பாடல்கள் மாபெரும் வெற்றியைக் கொடுத்தன.
‘சகுந்தலை’ படத் தயாரிப்பில் பங்கு பெற்றவர் என்கிற பெருமை டி.சதாசிவம் அவர்களுக்கு உண்டு. அத்துடன் இப்படத்திற்கான வசனத்தையும் எழுதியிருந்தார் டி.சதாசிவம். இப்படம் வெளியான பின்புதான் ‘கல்கி’ பத்திரிகையை ஆரம்பித்தார் சதாசிவம். சதாசிவம் – எம்.எஸ்.சுப்புலட்சுமி திருமணமும் இதன்பிறகு தான்.
இந்தப் படத்தின் சிறப்பிற்கு இன்னுமொரு காரணம் படத்தின் இயக்குநர் எல்லிஸ்.ஆர்.டங்கன். எம்.கே.ராதா நடித்த எம்.ஜி.ஆரின் அறிமுகப்படமான ‘சதிலீலாவதி (1936)’, அமோக வெற்றிப்படமான எம்.கே.தியாகராஜ பாகவதர் நடித்த ‘அம்பிகாபதி (1937)’, நாதஸ்வர சக்ரவர்த்தி டி.என்.ராஜரத்தினம் பிள்ளை நடித்த ‘கவிகாளமேகம் (1940)’ போன்ற படங்களை இயக்கிய எல்லிஸ்.ஆர்.டங்கன் ஒரு அமெரிக்கர். நமது புராண, இதிகாசக் கதைகளை சரியாக உள்வாங்கி, அவற்றை நன்றாகப் புரிந்து கொண்டு, அக்கதைகளைப் படமாக்கிய இயக்குநர் அவரைப்போல் எவரும் அக்காலத்தில் இருந்திருக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
காளிதாசனின் ‘சாகுந்தலம்’ எனும் காவியத்தை கனகச்சிதமாகச் செதுக்கி, காலத்தால் அழியாத ஒரு திரைக்காவியமாகத் தமிழ்த் திரையுலகிற்கு அளித்த வகையில் இப்படம் முக்கியத்துவம் பெறுகிறது.
– கிருஷ்ணன் வெங்கடாசலம்