நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர் காலம்’ படத்தை இயக்குகிறார் சக்ரி டோலெட்டி. இவர், ‘ உன்னை போல் ஒருவன்’ படமும், ‘பில்லா 2’ படமும் இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை ‘பூஜா என்டர்டைன்மெண்ட் & பிலிம்ஸ் லிமிடெட்’ என்ற நிறுவனம் இயக்குகிறது.
வட இந்தியத் திரையுலகில், குறிப்பாக ஹிந்தித் திரையுலகின் தயாரிப்புத் துறையில் மிகப் பெரிய ஜாம்பவனாகத் திகழ்ந்து கொண்டிருக்கும் வாசு பக்னானி அவர்களின் நிறுவனம் அது.
“சினிமா மீது எனக்குக் காதல் ஏற்பட முக்கிய காரணம், தமிழில் வெளியான சின்ன மாப்பிள்ளை திரைப்படம் தான். அந்தப் படத்தை ஹிந்தியில் நான் ‘கூலி நம்பர் 1’ என்ற தலைப்பில் ரீமேக் செய்தேன். அதனைத் தொடர்ந்து சதி லீலாவதி படத்தை ரீமேக் செய்த எங்கள் ‘பூஜா என்டர்டைன்மெண்ட் & பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனம், தற்போது முதல் முறையாகக் கொலையுதிர் காலம் படம் மூலம் தமிழ்த் திரையுலகில் அடியெடுத்து வைக்கின்றது.
நான் பார்த்த சிறந்த நடிகைகளில் ஒருவர் நயன்தாரா. அவரை ஹிந்திப் பட உலகிற்கு அறிமுகப்படுத்த வேண்டும் என்பது என் ஆசை. அவ்வளவு திறமையானவர் அவர். தமிழில் நாங்கள் தயாரிக்கும் முதல் படத்திலேயே அவரோடு இணைந்து பணியாற்றுவது எங்களுக்குப் பெருமையாக இருக்கின்றது. இதே படத்தை, ஹிந்தியில் தமன்னாவும் பிரபுதேவாவும் நடிக்கவுள்ளனர். தென்னிந்தியத் திரையுலகில் அபிஷேக் பிலிம்ஸ் நிறுவனத்தோடு இணைந்து, தயாரிப்பு மற்றும் விநியோக துறையில் நாங்கள் ஈடுபட இருக்கின்றோம்” என்று உற்சாகமாகக் கூறுகிறார் பூஜா என்டர்டைன்மெண்ட் & பிலிம்ஸ் லிமிடெட்’ நிறுவனத்தின் நிறுவனர் வாசு பக்னானி.