Shadow

டோரா விமர்சனம்

Dora vimarsanam

கால் டேக்சி நிறுவனம் தொடங்குவதற்காக நயன்தாரா பழைய மாடல் கார் ஒன்றை வாங்குகிறார். அக்காரினுள் குடி கொண்டிருக்கும் டோரா எனும் நாயின் ஆவி சிலரைப் பழிவாங்குகிறது. அவர்கள் யார், அவர்களை நாய் ஏன் எப்படிப் பழிவாங்குகிறது என்பதுதான் படத்தின் கதை.

பவளக்கொடியாக நயன்தாரா நடித்துள்ளார். தூங்கி எழுந்தாலும் சரி, கொலையைப் பார்த்து மிரண்டு ஓடி வந்தாலும் சரி, முதல் ஃப்ரேமிலிருந்து கடைசி ஃப்ரேம் வரை, பளீச்சோ பளீச்சென இருக்கிறார். நாயகன் இல்லாததால் டூயட்டும் இல்லை ஆடைக்குறைப்பும் இல்லை. படத்தைச் சுமப்பது பளீச் நயன் மட்டுமே! நடிக்கக் கிடைத்த வாய்ப்பை மிக அழகாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளார்.

நயன்தாராவின் தந்தையாகத் தம்பி ராமையா நடித்துள்ளார். கதைப்படி அவரது மனைவி ஓடி விட, நயன்தாராவிற்கு எல்லாமே தனது தந்தை தான். அவர்கள் இருவருக்கிடையில் இயல்பாய் இருக்க வேண்டிய பாசத்தைப் பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறியுள்ளனர். அதற்குக் காரணம், தொடர்ந்து எல்லாப் படத்திலும் ஒரே மாதிரியான நடிப்பை தம்பி ராமையா வெளிப்படுத்துவதே ஆகும்.

காவல்துறை அதிகாரியாக வரும் ஹரீஷ் உத்தமன், முதல் பாதியில் கவர்கிறார். அவரது ஷார்ப்பான கண்களால் அவர் செய்யும் விசாரணைகள் சுவாரசியம். எனினும், நயன்தாராவுடனான காட்சிகளில் பாவம் ஹரீஷ் உத்தமனைக் காவு கொடுத்து விடுகிறார் இயக்குநர். ஓவர் ஹீரோயிசம் போலவே, ஓவர் ஹீரோயினிசமும் அலுப்பையே ஏற்படுத்துகின்றன. காவல் நிலையத்தில், ‘ஆமாம், நான் தான் கொலை பண்ணேன். இன்னும் 2 பேரைப் பண்ணுவேன். முடிஞ்சா பிடி’ என சவால் விடுகிறார். நயன்தாராவிற்கே, அதற்கு முந்தைய காட்சியில் தான் தன்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்ற தெளிவு கிடைக்கிறது. அடுத்த காட்சியிலேயே, ‘நான் தான் காரணம்’ என ரெளடியாக மகுடம் சூட்டிக் கொள்கிறார். மகுடம் சூட்டியதுமே, ஹரீஷ் உத்தமனை அம்போவெனக் கத்தரித்து விடுகின்றனர்.

வடநாட்டில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த வில்லன் முகேஷ் யாதவாக சுலீல் குமார் நடித்துள்ளார். இயக்குநர் தாஸ் ராமசாமி, சாகப் போற வில்லன்க்கு அதீத பில்டப் தருகிறேன் என பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுக் கொலை செய்யப்படும் ஒரு இளம்பெண் மற்றும் ஒரு சிறுமி பற்றிய காட்சிகளில், விழலுக்கு இறைத்த நீராய்க் கவனம் செலுத்தியுள்ளார். கதைக்குச் சுவாரசியம் கூட்டாத அந்த டீட்டெயிலிங்கால் படத்திற்கு A சான்றிதழ் கிடைத்தது தான் மிச்சம்.

ஹரிஹரசுதனின் விஷுவல் எஃபெக்ட்ஸும், தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவும் விஷூவல்களை அழகூட்டியுள்ளன. காரின் நிழல், நாயாக மாறி வில்லன்களைக் கடித்துக் குதறும் கற்பனை ரசிக்க வைக்கின்றன. எனினும், படத்தோடு ஒன்றிப் போக விடாமல், தொடக்கம் முதலே ஓர் அந்நியத்தன்மை இழையோடுகிறது. பார்வையாளர்களால், படத்தில் நிகழும் சம்பவங்களோடோ கதாபாத்திரங்களோடோ பொருத்திக் கொள்ள முடியாதது துரதிர்ஷ்டம்.