Shadow

சிவகவி (1943)

(முக்கிய நடிகர்கள் : எம்.கே.தியாகராஜ பாகவதர்; எஸ்.ஜெயலட்சுமி; என்.எஸ்.கிருஷ்ணன்; டி.ஏ.மதுரம்; டி.ஆர்.ராஜகுமாரி; டி.பாலசுப்ரமணியம்; செருகளத்தூர் சாமா)

Sivakavi 1943

பொய்யாமொழிப் புலவரைத் தான் ‘சிவகவி’ என்பார்கள். நாற்பத்து மூன்றில் வெளிவந்த ‘சிவகவி’ படத்தை, 1948 இல் ஒரு சிவராத்திரி இரவில், சிவராத்திரி கொண்டாடிய சில சிறுவர்களுடன் என்னையும் சேர்த்து படம் பார்ப்பதற்கு தியேட்டர் ஒன்றிற்கு அழைத்துச் சென்றார் எங்கள் தெருவில் வசித்த பெரியவர் ஒருவர். வெகு சுவாரஸ்யமாகப் படம் பார்த்த நினைவு.

பாடல்கள் பற்றிய விசேஷ அறிவோ, புரிதலோ ஏற்படாத காலத்தில் என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினரின் நகைச்சுவைக் காட்சிகளையே பெரிதும் விரும்பி, ரசித்துப் பார்க்க முடிந்தது.

என்றாலும், மிகவும் இனிமையான பாடல்கள் தான் இப்படத்தில் சிறப்பாகச் சொல்லப்பட வேண்டிய அம்சம். சிறுவயதில் மனதில் பதியும் பல சம்பவங்கள் எளிதில் நம்மை விட்டுப் போய்விடுவதில்லை. அந்த வகையில் இந்தப் படத்தின் பல பாடல்கள், இப்படத்தைப் பார்த்துவிட்டு வந்த காலத்திலிருந்து மனதில் ஆழமாகப் பதிந்து விட்டன. இப்படி, பார்த்த எல்லாப் படப்பாடல்களும் மனதில் நிரந்தரமாகத் தேங்கிவிடுகிறதா என யோசித்துப் பார்த்தால் நமக்கு ஆம் அல்லது இல்லை என்கிற இரண்டு பதிலுமே கிடைக்கிறது. பாடல்களின் தரம் தான் இவற்றையெல்லாம் தீர்மானிக்கும் முக்கியமான அளவு கோல் என்பதும் புலப்படுகிறது. ஏழு நாட்களுக்கு முன்பு கேட்ட பாடலின் ஒருவரியைக் கூட ஒழுங்காக இப்போதெல்லாம் நினைவில் தக்கவைத்துக் கொள்ள முடிவதில்லை என்பதுடன் அந்தப்பாடல்களின் வரிகளே என்ன என்பது கூட பெரும் கேள்விக்குறியாகி விட்ட நிலை, கவலை அளிக்கும் காரியமாகவே ஆகி விட்டது.

ஆனால், ‘சிவகவி’ படத்தின் பல பாடல் வரிகளை இப்பொதும் கூட, எந்தப் பிரயாசையோ, ‘பிராம்ப்டிங்கோ’ இல்லாமல் வெகு இலகுவாக, இயல்பாக வாய் முணுமுணுத்து விடும் அதிசயமும் நடந்து கொண்டுதானிருக்கிறது.

1941 இல் ‘ஆர்ய மாலா’ தந்த வெற்றியை அடுத்து, தமிழ்த் திரையுலகில் அப்போது முடிசூடா மன்னனாக விளங்கிய எம்.கே.தியாகராஜ பாகவதரைக் கதாநாயகனாகக் கொண்டு, முழுக்க முழுக்க பாடல்களுக்கு மாத்திரமே முன்னுரிமை அளித்து, பக்ஷிராஜா எஸ்.எம்.ஸ்ரீராமுலு நாயுடு தயாரித்து இயக்கிய படம் ‘சிவகவி’.

தத்தம் துறையில் வல்லுநர்களாக விளங்கிய கலைஞர்கள் பலரின் பங்களிப்பு இப்படத்தை மிகப் பெரிய வெற்றிப் படமாக மாற்றியது. ‘கண்ணகி’ படத்திற்குப் பிறகு அதீதப் புகழைப் பெற்றிருந்த இளங்கோவன் இந்தப் படத்திற்கு வசனமெழுதியிருந்தார். தமிழ்தியாகையா பாபநாசம் சிவன் பக்தி ரசமான பல பாடல்களை எழுதியிருந்தார். பிரபலமான வழுவூர் ராமையாபிள்ளை நடன ஆசிரியர் பொறுப்பு. ஆதி இரானி என்கிற வட இந்தியர் ஒளிப்பதிவு. வேறென்ன வேண்டும்?

Music Director G.Ramanathanஇவற்றிற்கெல்லாம் மகுடமாக இப்படத்தின் இசை. இசையமைத்தவர் ஜி.ராமனாதன். அக்காலங்களில் பாடல் எழுதும் பாபநாசம் சிவன் அவர்களே பாடல்களுக்கான மெட்டையும் அமைத்து விடுவாராம். பின்னணி இசையை ஜி.ராமனாதன் கவனித்துக் கொள்வார் எனச் சில தகவல்கள் சொல்லுகின்றன. இப்படத்திற்கும் அப்படித்தானா அல்லது ஜி.ராமனாதன் இசையமைப்பின் முழுப்பொறுப்பையும் ஏற்றுக் கொண்டாரா எனத் தெளிவு இல்லாத நிலையில் அற்புதமான இசையமைப்பின் பெருமையை இந்த இருவருக்குமே சமமாகப் பகிர்ந்தளித்து விடலாம். இவர்களில் யார் இப்படத்தின் பாடல்களுக்கு மெட்டமைத்திருந்தாலும், அவர்களின் கற்பனை வளம் இப்படத்திற்கு இசையமைக்கும் வேளையில் ஓர் உயர்ந்த தளத்தில் இருந்திருக்க வேண்டும். படத்தில் ஏராளமான பாடல்கள் உண்டு. அவற்றில் சில மகத்தான வெற்றியைப் பெற்றன.

‘வதனமே சந்திர பிம்பமோ
மலர்ந்த சரோஜமோ’

இப்பாடலை இப்போது கேட்டுப் பாருங்கள். நீங்கள் ஓர் இசைப்பிரியராக இருந்தால் நிச்சயமாகச் சொக்கிப் போய்த்தான் நிற்பீர்கள். பாகவதரின் குரல் வளத்திற்கு எல்லையே கிடையாது!

நாட்டைக்குறிஞ்சி எனும் ராகம் மிகவும் அற்புதமான ராகம். இந்த ராகத்தில் அமைந்த ‘கவலையைத் தீர்ப்பது நாட்டியக் கலையே’ என்கிற பாட்டை பாகவதர் பாட, டி.ஆர்.ராஜகுமாரி நடனமாடுவார். இந்தப்பாட்டின் ஓர் இடத்தில் ‘ராகத்தில் சிறந்தது நாட்டைக்குறிஞ்சி’ எனும் வரிகளும் வரும்.

அரசவைப் புலவர் எம்.கே.டி.பாகவதர். டி.ஆர்.ராஜகுமாரி அரசவை நர்த்தகி. வஞ்சி என்று பெயர். அரசனின் வேண்டுகோளுக்கிணுங்க, இப்பாடலை அரசவைப்புலவர் பாட, அரசவை நர்த்தகி நாட்டியமாடுவதாகக் காட்சி. நாட்டியத்தின் மேன்மையையும், நடனமாடுபவரின் திறமையையும் புகழ்ந்து பாடப்படுவதாகக் காட்சி. பாடல் அருமையான பாடல்.

இப்பாடல் ஒரு காதல் பாட்டென்றும், அது எந்த அளவு கேவலமாக இருந்தது எனவும் எள்ளல் செய்து, அப்பாட்டை அடித்தொண்டையில் கனைத்துக் காண்பித்து, நடந்து முடிந்த ‘தமிழ்ச் செம்மொழி’ மாநாட்டில் ஒரு பட்டிமன்ற நடுவர் கேவலப்படுத்தியது ஏற்கமுடியாதது. இவருக்கு நடப்பும் தெரியாது., நாட்டக்குறிஞ்சியும் தெரியாது. இந்த மாதிரியான நடுவருக்குத் தமிழக அரசு ‘கலைமாமணி’ பட்டம் வேறு வழங்கியிருந்தது. இப்பாட்டை எள்ளல் செய்த இவருக்கு ஒரு செய்தி. இவர் போற்றும் இன்றைய காதல் பாட்டுக்கள் இன்னும் நாற்பது, ஐம்பது வருடங்களுக்குப் பிறகு பழைமையடைவதும், அப்போது இவரைப்போன்ற ஒரு பட்டிமன்ற நடுவர் இவர் ரசித்த பாடல்களை எள்ளல் செய்வதும் நடைமுறைச் சாத்தியங்களே. பழம்பெருமையைக் காக்கத் தெரியாத எந்த சமுதாயமும் உருப்படுவது சாத்தியமில்லை என்பதை இவர் போன்ற பட்டிமன்ற நடுவர்கள் தெரிந்து கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

1)   ‘சொப்பன வாழ்வில் மகிழ்ந்து
        சுப்ரமண்ய சுவாமி உனை மறந்தார் – அந்தோ
       அற்பப் பணப்பேய் பிடித்தே – அறிவிழந்து
       அற்பர்களைப் புகழ்வார்…’

2)  வள்ளலைப் பாடும் வாயால்
      அறுதலைப் பிள்ளையைப் பாடுவேனோ’

3)  ‘அம்பா மனம் கனிந்துனது
       கடைக் கண் பார்’

4)  ‘வசந்த ருது மன மோகனமே’

5)  ‘மனம் கனிந்தே’

போன்ற பாடல்கள் மிகவும் பிரபலமடைந்தன. இன்றும் கூட இப்பாடல்களை ரசித்துக் கேட்க முடியும்.

இப்பாடல்கள் எல்லாம் திரை இசைக்குக் கிடைத்த அரிய பொக்கிஷங்கள். இவற்றையெல்லாம் நாம் இப்போது இழந்து கொண்டிருக்கிறோமோ என்கிற அச்சம் பெரும் கவலை அளிக்கவல்லது. தமிழர்களாகிய நாம் இன்னும் சற்று பொறுப்புடன் நடக்கக் கற்றுக் கொள்ள வேண்டும் என்று தான் தோன்றுகிறது.

என்.எஸ்.கிருஷ்ணன் குழுவினரின் நகைச்சுவைக் காட்சிகள் இப்படத்தில் ரசிக்கும்படியாக அமைந்தன. குறிப்பாகப் பள்ளியில் பயிலும் காட்சி. என்.எஸ்.கிருஷ்ணன் தன் சக மாணவர்களுடன் பள்ளி வகுப்பில் அமர்ந்திருப்பார். ஆசிரியர் மிகத் தீவிரமாகப் பாடம் நடத்திக் கொண்டிருப்பார். கிருஷ்ணன் பாடத்தை கவனிக்காமல், வகுப்பறைச் சுவரின் ஒரு இடத்தில் இருந்த வளையில் (பொந்து) நுழைய முயற்சி செய்து கொண்டிருக்கும் எலி ஒன்றை மிகுந்த ஆர்வத்துடன் கவனித்துக் கொண்டிருப்பார். கடைசியில் அந்த எலி தனது உடல் முழுவதையும் வளையினுள் நுழைத்து விடும். ஆனால் வால் மாத்திரம் நுழையாமல் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும். இவர் இப்படி வளையைப் பார்த்துக் கொண்டிருந்ததை அறியாத ஆசிரியர், பாடத்தை முடித்து விட்டு என்.எஸ்.கிருஷ்ணனைப் பார்த்து, எதார்த்தமாக, ‘என்ன, எல்லாம் நுழைந்ததா?’ எனப் பாடத்தைப் பற்றிக் கேட்பார். என்.எஸ்.கே. பதிலுக்கு, ‘எல்லாம் நுழைந்தது. ஆனால் வால் மட்டும் நுழையவே இல்லை’ என பதிலளிக்கும் காட்சி மாபெரும் நகைச்சுவைக் காட்சியாக அன்று ரசிக்கப்பட்டது.

இன்னொரு காட்சி. திங்கள், செவ்வாய், புதன் என வாரத்தின் அனைத்துக் கிழமைகளையும் வாயால் சொல்லிக் கொண்டு, அவ்வாறு சொல்லும் போதே அவரது கைகள் வலது தொடை, இடது தொடை, காது, மூக்கு என தாளப்பிரமாணப்படி மாறி மாறித் தொட்டுக் கொண்டே இருக்கும். அதை அருமையாகச் செய்து காண்பிப்பார். பார்ப்பதற்கு வெகு எளிதாகத் தோன்றும். இப்படம் வந்த பிறகு பலரும் சம்மணம் போட்டு உட்கார்ந்து அவர் செய்து காண்பித்த மாதிரி சொல்லிக் கொண்டே செய்து பார்த்தார்கள். அநேகமாக அனைவருமே அவ்வாறு செய்ய இயலாமல் தோல்வியையே கண்டார்கள்! இதுவும் ஒரு சிறந்த நகைச்சுவைக் காட்சி தான்.

Sivakavi Movie 1943

பயிரை மேய்ந்த குதிரையை அறம்பாடி சாகடிப்பது, பின் அதை உயிருடன் எழச் செய்வது, அரசவை நர்த்தகியின் சூழ்ச்சியிலிருந்து தப்புவது, அரசுக்கட்டிலில் படுத்துறங்கிய பொய்யாமொழிப் புலவர் (சிவகவி) தனது கணவர் என நினைத்து அவரது அருகில் மகாராணி படுத்துறங்குவது போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை காண்பித்து அன்றைய ரசிகர்களை, அன்றைய ரசனைக்கு ஏற்ப மகிழ்வித்தார்கள். இன்று அவைகள் நமக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இல்லாமல் இருக்கலாம். இது கால மாற்றத்தின் தவிர்க்க இயலாத விளைவு. ஆனால் அவற்றையெல்லாம் தாண்டித் தான் தமிழ்ப்பட உலகம் முன் எடுத்துச் செல்லப்பட்டு, இன்றைய நிலையை அடைந்திருக்கிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அவர்கள் போட்ட அடித்தளத்தில் தாம் நாம் இப்போது மாளிகை எழுப்ப முயன்று கொண்டிருக்கிறோம்.

இசையாலேயே பிரம்மாண்டமான வெற்றியை அடைந்த இந்தத் திரைப்படம், வருடக் கணக்கில், ஒவ்வொரு சிவராத்திரியன்றும் தவறாது விசேஷக் காட்சியாகப் பல ஊர்களில் காண்பிக்கப்பட்டது. இப்போழுதும் கூட, எங்கோ ஒரு மூலையில் உள்ள ஏதோ ஒரு தற்காலிகத் திரையரங்கில் சிவராத்திரி நாளில் நள்ளிரவுக் காட்சியாக ஓடிக் கொண்டிருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

– கிருஷ்ணன் வெங்கடாசலம்