Shadow

சென்னையில் ஒரு நாள் விமர்சனம்

Chennaiyil oru naal
ட்ராஃபிக் என்ற மலையாளப் படத்தின் அழகான தமிழ் ரீ-மேக்.
ஓர் உயிரைக் காப்பாற்ற ஒன்றரை மணி நேரத்தில் 170 கி.மீ. தரை வழியாக பயணித்தாக வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. அந்தப் பயணம் வெற்றிப் பெற்றதா என்பதற்கு பதிலுடன் படம் நிறைவுறுகிறது.
ட்ராஃபிக் கான்ஸ்டபிள் சத்தியமூர்த்தியாக சேரன். லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்ட அவமானத்தில் இருந்து மீள ஒரு சாகசத்திற்கு தயாராகும் நல்லவர். எதையோ இழந்தாற் போலவே முகத்தை வைத்துள்ளார். பயணத்தில் வெற்றியடைந்த பின்பும் கூட அவருக்கு அகமும், புறமும் மலருவேனா என்கிறது. பழித் தீர்க்க ஒரு காரியம் செய்யும் பொழுது முகம் அப்படித் தானே இருக்கும். கெளதம் கிருஷ்ணா என நட்சத்திர அந்தஸ்த் நடிகராகவே பிரகாஷ் ராஜ். “நான் யார் தெரியுமா?” என தலையில் பெரிய கனத்தை வைத்துக் கொண்டிருக்கும் பாத்திரத்தில் நிறைவாக செய்துள்ளார். ஆனால் அதிக அலட்டலின்றி தன் உடல்மொழியால் குற்றவுணர்வைக் காட்டுகிறார் மருத்துவர் ராபினாக வரும் பிரசன்னா. பார்வதி மேனன், இனியா என இரண்டு கதாநாயகிகள்.
காரில் சென்றுக் கொண்டிருக்கும் பெண் ஒருத்தியை பைக்கில் செல்லும் இளைஞர்கள் துரத்தி, கூச்சலிட்டு அவளை பாடாய்ப் படுத்துகின்றனர். பயத்தாலும் பதற்றத்தாலும் காரை உச்ச வேகத்தில் ஓட்டும் அந்தப் பெண் போக்குவரத்து சமிக்கையை மதிக்காமல் செல்ல ஒரு விபத்து நிகழ்கிறது. சென்னையில் நடக்கும் இந்தச் சம்பவத்தினின்று தான் படம் தொடங்குகிறது. ஒரு பெண்ணிற்கு நிகழும் கலவியல் தொந்தரவில் இருந்து படம் தொடங்கினாலும் அதற்கான அழுத்தம் படத்தில் சரியாக வரவில்லை. நான்-லீனியர் பாணி படத்தொகுப்புக் காரணமாக இருக்கலாம். ஹெல்மெட் அணியாமல் பைக்கில் செல்வதால் ஏற்படும் விளைவினை தலையில் அடித்துப் புரிய வைக்கின்றனர்.
காவல்துறை உயர் அதிகாரி சுந்தரபாண்டியனாக சரத்குமார். காஞ்சனாவிற்கு பிறகு தமிழில் மீண்டும் நடிக்கிறார். வயதிற்கேற்ப பொறுப்பான கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடிக்கும் கதாநாயகர்களில் ஒருவராக உள்ளது குறிப்பிடத்தக்கது. ராதிகா சரத்குமாரும் தன் மகளை நினைத்து கவலைக் கொள்ளும் பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவருமாவார். அதற்காக சன் டி.வி. ‘நல்லாசியுடன்’ என டைட்டிலில் கிரெடிட் தருவது எல்லாம் கொஞ்சம் ஓவர்.

சிறிய இடைவெளிக்குப் பின் மீண்டும் பாசமிகு தந்தையாக நடித்துள்ளார் ஜெயப்ரகாஷ். ‘யாரோ ஒருவரின் உயிரைக் காப்பாற்ற.. உயிரோடு இருக்கும் என் மகனைக் கொல்ல என்னிடம் அனுமதி கேட்கிறீங்களே!!’ என உடையும் இடத்தில் அசத்துகிறார். சேரன் பிரசன்னாவுடன் பயணிக்கும் அஜ்மலாக வரும் மிதூனும் நன்றாக செய்துள்ளார். ஆனால் சாலையை சீர் செய்ய.. வேகமாக செல்லும் காரில் இருந்து இறங்குகிறார். பிரசன்னாவும் அதே போல் காரிலிருந்து இறங்கி ஏறுகிறார். ஜிந்தா காலனியின் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்த ஒருவரால் தான் முடியுமென நடிகர் சூர்யாவின் ரசிகர் ஒருவரை அறிமுகப்படுத்துவது எல்லாம் சினிமாத்தனத்தின் உச்சம். சூர்யா வேறு தொடர்ந்து தொலைக்காட்சியில் பேசியவண்ணம் உள்ளார்.
20008 ஆம் ஆண்டு ஹிதேந்திரனின் இதயத்தை தேனாம்பேட்டை அப்போல்லோ மருத்துவமனையிலிருந்து முகப்பேர் மருத்துவமனைக்கு காவல்துறை உதவியுடன் 14 கிலோமீட்டரை 11 நிமிடத்தில் இதயமாற்று அறுவை சிகிச்சைக்காக எடுத்து சென்றனர். இந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட படம் என்பது குறிப்பிடத்தக்கது. உடலுறுப்பு தானத்தினை மையப்படுத்தி கதை அமைந்திருக்கும் படத்தில் செல்ஃபோன் ஓட்டிக் கொண்டு வண்டி ஓட்டும் காட்சிகள் எல்லாம் தேவையா? அதுவும் ஓர் உயிரைக் காப்பாற்றும் நெருக்கடியில் வண்டி ஓட்டுபவரிடம் ஓயாமல் பேசிப் பேசியே அவரது கவனத்தை திசை திருப்புகின்றனர். மிக சரியான இடத்தில் எதிர்பார்ப்பைத் தூண்டும் விதம் படத்தில் இடைவேளை அமைந்துள்ளது. இத்தனை நடிகர்கள் இருந்தும் கதைக்கு முக்கியத்துவம் அளிக்கும் தமிழ்த் திரைப்படம் ஓர் அதிசயமே!!

Leave a Reply