எமது இயல்புணர்ச்சிகள் (Instincts) முற்பிறப்பு அனுபவங்களில் இருந்து பிறந்தவையே. குழந்தை பிறந்தவுடன் தாயின் பாலைத்தேடுவதும், மனிதர் ஒருவர் மீது ஒருவர் கண்டதும் காதல் கொள்வதும் ஒருவரை நாம் எவ்வித காரணமும் இல்லாமல் வெறுக்கத் தோன்றுவதும் முற்பிறப்புகளின் ‘விட்ட குறை தொட்டகுறை” என்றே கூறவேண்டும். மனிதனின் மனப்பாங்கு, குணாம்சங்கள், செயல்நாட்டம், திறமை எல்லாம் முற்பிறப்பின் தொடர்ச்சியாகவே இயங்குகின்றன. ஐந்து வயது சிறவன் மிருதங்கம் கதாகாலஷேபம் செய்வதும், முற்பிறப்புகளில் வளர்த்துக் கொண்ட திறமைகளின் தொடர்ச்சிகளே.
முற்பிறப்பு அனுபவங்கள் நமது மனதின் அடி உணர்வு தளத்தில் (Sub-conscious mind) பதிந்து விடுகின்றபடியால் அவை சூட்சும நிலையில் நம்மோடு கூடவே இருந்து கொண்டு பிறப்புக்கள் தோறும் தொடர்ந்து வருகின்றன. கனவுகளில் சில சமயங்களில் நீண்ட காலத்துக்கு முந்தைய பிறப்புக்களின் அனுபவங்கள் பிரதிபலிப்பதுண்டு. ஆகாயத்தில் பறந்து செல்வது போல் நாம் கனவு காண்பது.. பறவைகளாக இருந்த முற்பிறப்புக்களின் அனுபவங்களே.
முற்பிறப்பு ஞாபகங்கள் இயல்பாக நமக்கு இருப்பதில்லை. ஆழ்ந்த தியானத்தின் மூலம் கிடைக்கப் பெறும் ஒரு நிலையில் இருந்து முற்பிறப்புகளை அறியலாம். புத்தர் பெருமான் “அங்குத்தற நிக்காயா”வில் இந்த யோகநிலையை எப்படி பெறுவது என்று தனது சீடர்களுக்கு விளக்கியுள்ளார்.
அறிதுயில் நிலையில் பின்னோக்கிச் சென்று (Hypnotic Regression) முற்பிறப்புக்களை அறிதல் சாத்தியம் என நிரூபிக்கப்பட்டிருக்கின்றது. அறிதுயில் நிபுணர் (Hypnotist) தனது மனோசக்தியின் கட்டுப்பாட்டில் உள்ள நபரின் ஞாபகச் சக்தியை தான் விரும்புவது போல் நூறு இருநூறு ஆண்டுகளுக்குப் பின்னோக்கிச் செலுத்தித் தகவல்களைப் பெறுவார்.
இப்படியான ஒரு ஆய்வின்போது அமெரிக்காவைச் சேர்ந்த ப்ரைடி மர்ஃபி (Bridey Murphy) என்னும் பெண்மணி அயர்லாந்தில் நிகழ்ந்த தனது முற்பிறப்பை நினைவு கூர்ந்து அதன் முழு விபரங்களையும் தெரிவித்தார். அவர் தனது முற்பிறப்பு நிகழ்ந்ததாகக் கூறிய ஆண்டு அண்மைய காலமாயிருந்ததனால் தேவாலய பதிவேடுகள், அரசாங்க எழுத்துக் குறிப்புகள் மூலம் அவருடைய கூற்றுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன. இங்கிலாந்திலும் இப்படியான ஆய்வுகள் நடத்தப்பட்டு மறுபிறப்புக்கு ஆதாரங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டன.
அமெரிக்காவில் கென்ரக்கி என்னும் நகரில் வாழ்ந்த எட்கர் கைஸ் (Edger Cayce) என்பவர் அறிதுயில் நிலையில் இருந்துகொண்டு மனிதர்களுடைய நோய்களைக் கண்டுபிடித்து அதற்குச் சிகிச்சை முறைகளையும் மருந்துகளையும் கூறுவார். இவர் ஒரு சந்தர்ப்பத்தில் மனிதர்களுடைய நோய்களுக்கு அவர்களுடைய முற்பிறப்பு “கர்மா” தான் காரணம் என்று அறிதுயில் நிலையில் இருந்து கொண்டு கூறினார். அவருக்குச் சுயநினைவு வந்தவுடன் “கர்மா” என்றால் என்ன என்று அவரிடம் கேட்டபொழுது அப்படியான ஒரு பதத்தை தான் கேள்விப்பட்டதேயில்லை என்றார். தனது முற்பிறப்பின் அறிவையும் ஆற்றலையுமே அறிதுயில் நிலையில் இருந்து கொண்டு வெளிப்படுத்தினார் என்று தெரிகிறது.
தியானத்தை வழிபாட்டு முறையாகக் கொண்ட இந்துக்களினதும் பௌத்தர்களினதும் மத்தியில் தான் மற்பிறப்பு ஞாபகங்கள் உள்ளவர்கள் கூடுதலாக இருப்பது தெரியவந்துள்ளது. இலங்கையில் கிடைத்த முற்பிறப்பு ஞாபகங்கள் பற்றிய ஏராளமான தகவல்கள் அமெரிக்காவில் உள்ள வேர்ஜீனியா பல்கலைக்கழகத்தின் உள ஆய்வியல்துறைப் பேராசிரியர் ஐயன் ஸ்ரீவன்சன் என்பவராலும் பிறான்கிஸ் ஸ்ரோறி என்பவராலும் ஆய்வு செய்யப்பட்டன. இவைகளில் இருபது முற்பிறப்பு சம்பவங்கள் ஆய்வுக்குறிப்புகளின் ஆதாரங்களுடன் “fate” என்னும் சஞ்சிகையில் சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டுள்ளன.
அடுத்து சில முற்பிறப்பு சம்பவங்கள் பார்க்கலாம்.
– தோழி