நேரடியாக தமிழில் வெளிவந்திருக்கும் மகேஷ் பாபுவின் முதல் திரைப்படம் இது.
கோடீஸ்வரரான ரவிகாந்தின் ஒரே மகன் ஹர்ஷா. தனது சொந்த ஊரான தேவரக்கோட்டைக்குச் சென்று, அவ்வூரைத் தத்தெடுத்துக் கொள்கிறான். முன்பே அவ்வூரைத் தத்தெடுத்துக் கொண்ட மினிஸ்டர் வெங்கட் ரத்னமும், அவர் தம்பி சசியும், ஹர்ஷாவின் இந்தச் செயலால் கோபம் கொள்கின்றனர். கடைசியில் ஊர் யாருக்குச் சொந்தமானது என்பதுதான் படத்தின் கதை.
ஹர்ஷாவாக மிகவும் அசால்ட்டாக நடித்துள்ளார் மகேஷ் பாபு. அவர் முகத்தில் ஒரு பேரமைதி நிலவுகிறது. ஆட்களைத் தூக்கிப் போட்டு துவம்சம் செய்யும்போது கூட அவர் முகத்தில் உக்கிரம் காணப்படுவதில்லை. அடியாட்கள் பவனி வர மாந்தோப்புக்குள் அவர் சைக்கிளில் நுழையும் காட்சி செம மாஸ். கோடீஸ்வரரின் மகனாகக் கச்சிதமாக கதாபாத்திரத்துக்குப் பொருந்துகிறார். தன் கிராமத்து மீது மிகவும் அபிமானமுள்ள சாருவாக ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார். மிகவும் அழகாக இருக்கிறார். படத்தின் முதல் பாதியில், கதைக்கு உதவும் பாத்திரத்தில் தோன்றியுள்ளார். சுகன்யா, சித்தாரா, துளசி, சனம் என படத்தில் தமிழ் முகங்கள் அதிகம்.
படத்தின் பலம் அதன் வசனங்களும், ஒளிப்பதிவாளர் மதியின் ஒளிப்பதிவுமே! ஏ.ஆர்.கே.ராஜராஜாவின் உறுத்தாத நறுக் வசனங்கள், நேரடி தமிழ்ப்படம் பார்க்கும் உணர்வைத் தக்க வைக்கிறது. ‘கிராமத்தைத் தத்தெடுப்பது என்றால் டைரக்டர் ஷங்கர் படத்தில் வர்ற மாதிரி பாறைக்கெல்லாம் பெயிண்ட் அடிப்பேன் நினைச்சியா?’ என்ற கிண்டலும், மகேஷ் பாபு ஸ்ருதியைப் பார்த்துs சொல்லும், ‘போய் கமல் படம் பாரு’ போன்ற வசனங்களும் படத்தின் கலகலப்பான ஓட்டத்துக்கு உதாரணமாகச் சொல்லலாம். மதியின் கேமிராவில் விழும் அனைத்துமே ஜொலிக்கின்றன. க்ளைமேக்ஸ் தவிர்த்து, படத்தின் ஓட்டம் ஒரு கவிதை போல் செல்கிறது.
அமைச்சராக முகேஷ் ரிஷி, அமைச்சரின் தம்பி சசியாக சம்பத், அமைச்சரின் மகன் ராதாவாக ஹரிஷ் உத்தமன் என உயரமான வில்லன்கள். அதிக வில்லத்தனத்துக்கு வாய்ப்பில்லாமல் வழக்கமான வில்லன்களாக வந்தழிவது ஒரு குறை. படம் நெடுகே ஒரு மெல்லிய நகைச்சுவை இழையோடிய வண்ணமிருந்தாலும், நகைச்சுவைக்கென உபயோகப்படுத்தப்பட்ட அப்பா ராவ் பாத்திரம் ஈர்க்கவில்லை. பொறுப்பான அப்பாவாக, தன் மகன் மீதான பெருமையையும் வாஞ்சையையும் முகத்திலும் கண்களிலும் கொண்டு அசத்தியுள்ளார் ஜெகபதி பாபு.
‘கிராமத்துக்காக நான் எதுவும் செய்யலைன்னா நான் குண்டு பூசனிக்காய் ஆகிடுவேன்’ என்ற ஸ்ருதியின் வசனம் மற்றும் ஸ்ருதியின் அப்பாவாக நடித்த ராஜேந்திர பிரசாத்தின் உடையைத் தவிர்த்து படம் அக்மார்க் தமிழ்ப் படமென்று அடித்துச் சொல்லலாம்.