ஜப்பானில் கடத்தப்படும் பேபி ஹம்சியைத் தமிழக இளைஞனான ஜம்புலிங்கம் எப்படி மீட்டு அவளது பெற்றோரிடம் ஒப்படைக்கிறான் என்பதே படத்தின் கதை.
கதை ஜப்பானில் நிகழ்வதால், ரஜினிக்கு ஜப்பானில் இருக்கும் புகழைப் படத்தில் காட்டியுள்ளனர். அதை இன்னும் சுவாரசியமாக்கியிருக்கலாம். சிட்டி ‘தி ரோபாட்’டாக லொள்ளு சபா ஜீவா வருகிறார். சகுனம் எனும் பாத்திரத்தில் ஈரோடு மகேஷ் நடித்திருக்கிறார். டான் டேவிட் சகுனத்தைத் தன்னுடன் கை விளங்கால் பிணைத்துக் கொண்டு குளியலறை, படுக்கையறை என இழுத்துக் கொண்டு போகிறார். கலை ஆர்வலர் டான் டேவிடாக ஒகிடா எனும் ஜப்பானியர் நடித்துள்ளார்.
ஐரீன் எனும் பாத்திரத்தில் அஞ்சனா கீர்த்தி நாயகியாக நடித்துள்ளார். ஜம்புவால் கவரப்பட்டு, அவனைக் காதலிக்கும் பாரம்பரிய பாத்திரத்தில் வருகிறார். பரதநாட்டியக் கலைஞராகவும், ஹம்சிகாவின் அம்மாவாகவும் நடித்துள்ளார் சுகன்யா.
ஓர் இரவு, அம்புலி, ஆ ஆகிய படங்களைத் தொடர்ந்து இரட்டை இயக்குநர்களான ஹரியும் ஹரீஷும் இயக்கியுள்ளனர். தங்களது முந்தைய படங்கள் போல் கதையில் அவ்வளவு கவனம் செலுத்தியதாகத் தெரியவில்லை. “ஏன்டா இன்னொருத்தவன் மனைவி பக்கத்தில் உட்கார்ந்திருக்க?”, “அவன் புருஷனே ஒன்னுமே சொல்லலை” என்ற வசனங்களையும் காட்சியையும் நகைச்சுவை என்ற பெயரில் தைரியத்துடன் வைத்ததோடன்றி, ‘இது குழந்தைகள் சினிமா’ என்று நம்பவும் செய்கின்றனர்.
மைமிங் கோரியோகிராஃபி செய்ததோடு நாயகனாகவும் நடித்துள்ளார் கோகுல்நாத். ஜப்பான் மக்கள் மத்தியில், ஒரு மைமிங் கலைஞனின் எழுச்சியோடு படம் முடிகிறது. ஆனால், அம்மகத்தான உணர்வைப் பார்வையாளர்களுக்குக் கடத்தத் தவறிவிடுகிறார் கோகுல்நாத். படத்தின் நாயகன் ஒளிப்பதிவும் ஸ்டீரியோகிராஃபியும் செய்துள்ள G.சதீஷே.! குறைந்த பட்ஜெட் எனினும், தரமான 3-டி அனுபவத்தைப் படம் பார்ப்பவர்களுக்குத் தந்துள்ளார் சதீஷ். சதீஷின் ஒளிப்பதிவில் ஜப்பான் அழகாக மிளிர்கிறது.