Shadow

ஜவ்வுத்தாள் பை உலகம்

மாட மாளிகைகள் நேற்று. விண்ணை முட்டும் கட்டிடங்கள் இன்று. குப்பை கூல கோபுரங்கள் நாளை.

குப்பைகளால் மனித இனம் சூழப்பட்டு மீள இயலாமல் ஸ்தம்பித்துப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. மக்குவதற்கு முக்கி திணரும் மக்காத ஜவ்வுத்தாள் பைகள் நம்மை எங்கு சென்றாலும் துரத்துக்கின்றன. தொங்க விடப்பட்டிருக்கும் கயிறை ஒரு முனையில் பொசுக்கி சிகரெட் பிடிக்க உதவும் பெட்டிக் கடைகள் முதல் வக்கனையாய் மெருகேத்தப்பட்ட ‘டிசைன் கவர்களுள் அடைப்பட்டிருக்கும் எண்ணற்ற பொருட்களை கண்காட்சியில் வைப்பது போல் வரிசையாக வைக்கப்பட்டிருக்கும் குளிர் சாதன பல்பொருள் அங்காடி வரை ஜவ்வுத்தாள் பை நம் மீது செலுத்தும் அக்கிரமிப்பு உடம்பெங்கும் முளைக்கும் ரோமம் போல் கட்டுக்கடங்காமல் போய் விட்டது.  நாம் தூக்கிப் போடும் இந்த பைகள் காற்றில், பேருந்தில், தெருவோரங்களில், சீரனமாகாமல் மாட்டின் வயிற்றில், கோவில் குளங்களில், பசுமை படர்ந்தோங்கிய மலை மற்றும் இன்ன பிற சுற்றலாத் தளங்களில் என நாம் காணும் அனைத்து இடங்களில் மெளன விஷமாக பரவி வருகிறது. இந்த ஜவ்வுத்தாள் பைகளை எரித்தால் அதனிலிருந்து கசியும் வாயு ஆபத்தானது. மண்ணில் புதையும் இவைகள் மக்காமல் நிலம் புக துடிக்கும் நீரை தடுத்து விடுகிறது. ஒரு வகை ‘பாக்டீரியாக்கள் மூன்று மாத கால அளவில் 40% மட்டும் ஜவ்வுத்தாள்களை மக்க செய்யுமாம். அதுவும் சொல்லளவில் தான். செயலளவில் அதன் சாத்தியக்கூறுகள் திருப்திகரமாக இல்லை.

மின் குப்பைகள். அதாவது தூக்கி எறியப்படும் மின்னணு உபகரனங்கள். வளர்ந்து வரும் புதிய கவலைக்குரிய சவால். அவையும் மூளைக்கு பாதிப்பு உண்டாக்கும் ரசாயன வாயுக்களை உமிழக்கூடியது. சாமான்யர்கள் வீட்டுக் குப்பைகளில் தற்போது இவைகளும் அடக்கம். இவை இல்லாமல் வாகனத்தில் இருந்து வரும் புகைகள், தொழிற்சாலைகள் இருந்து நதிகளிலோ, கடல்களிலோ கலக்கப்படும் ரசாயன திரவக் கழிவுகள் என அனைத்தும் ஒன்றாய் சேர்ந்து இயற்கையை காயடித்துக் கொண்டே வருகின்றன. நாகரீகம் என்ற பெயரில் தனது சொகுசான வாழ்விற்காக, பூமியின் வளமையை முழுவதும் உறிஞ்சி விட்ட பிறகு பூமி எப்படி இருக்கும்? அதை சாதித்த மனிதனின் நிலை என்ன ஆகும்?

“வால்- ஈ”(WALL-E) என்ற படம் அப்படிப்பட்ட ஒரு பயங்கரமான மனிதரற்ற உலகத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. 700 வருடங்களாக பூமியை தொடர்ந்து சுத்தம் செய்யும் ஒரு இயந்திரம் தான் படத்தின் நாயகன் ‘வாலீ’. தேயிலை பறிப்பவர்கள் போல் முதுகில் ஒரு ‘பிளாஸ்டிக் கூடையை எடுத்துக் கொண்டு வேலைக்கு போனால் சூரியன் மறையும் வரை கண்ணும் கருத்துமாக குப்பைகளை ஒழுங்குப்படுத்தி அதை அழகான கோபுரம் போல் அடுக்கி வைக்கும். இந்த இயந்திரத்தை ‘டிசைன் செய்து ‘ப்ரோகிராம் எழுதியது கண்டிப்பாக அரசு ஊழியர்கள் அல்ல என்பதை யூகிக்கலாம். நமது நாயகனுடன் பணிக்கு அமர்த்தப்பட்ட அனைத்து இயந்திரமும் காலாவதி ஆகி விட்ட நிலையில், வாலீ மட்டும் காலத்தை வென்று உற்சாகமாக கடமையை செய்து பலனை எதிர்பாராமல் வேலை செய்தது. தனது இருப்பிடம் திரும்பும் நேரத்தில் தனது பாகங்கள் ஏதாவது பழுது பட்டிருந்தால், ஆங்காங்கே முடங்கிக் கிடக்கும் மற்ற இயந்திரத்தில் இருந்து வாலீ தன்னை புதுப்பித்துக் கொள்ளும்.

வசிப்பிடத்திற்கு சென்றவுடன் தனது சக்கரங்களை வாசலில் கழட்டி விட்டு, குப்பைக்களுக்கு நடுவில் தான் சேகரித்த பிடித்தமான பொருட்களை நேர்த்தியாக அடுக்கி வைத்து விட்டு சிறிது நேரம் ஒரு காதல் பாட்டை பார்த்து விட்டு தூங்கும். தூங்கும் முன் குப்பை பூமியில் ஒரே நண்பனான ‘ஹல்'(HAL) என்ற கரப்பான்பூச்சிக்கு வாலீ உணவு படைக்க மறக்காது. தூக்க கலக்கத்தோடு விழிக்கும் வாலீ முட்டி மோதி ஒரு வழியாக இருப்பிடத்தை விட்டு சூரிய வெளிச்சத்திற்கு வந்து சக்தியை பெற்றுக் கொள்ளும். மீண்டும் கூடை, வேலை என வாலீயின் சக்கரம் சுற்ற ஆரம்பித்து விடும்.

திடீரென்று ஒரு நாள் விண்களம் ஒன்று பூமியில் தரை இறங்கும். அவ்விண்கலத்தில் இருந்து அழகே உருவான முட்டை வடிவ வெண்ணிற இயந்திர நாயகியை இறக்கி விடுவார்கள். விண்கலம் மீண்டும் கிளம்பி கண்ணில் இருந்து மறையும் வரை சும்மா நிற்கும் நாயகி, அதன் பின் வெகு உற்சாகமாகவும் உல்லாசமாகவும் பறக்க ஆரம்பித்து விடும். நாயகியிடம் இருக்கும் ஒரே கெட்ட குணம் சின்ன சத்தம் கேட்டாலும், அந்த இடத்தினை சுவடே இல்லாமல் நிர்மூலம் ஆக்கி விடுவது. 700 வருட வழக்கம் மாறி நாயகி பின்னால் பதுங்கி பதுங்கி நாயகன் தொடர்கிறது. நாயகியின் பலம் மேல் உள்ள பயம் தான் அதற்கு காரணம். ‘ஹல்’ மூலமாக நாயகனின் அறிமுகம் கிடைத்தாலும், ‘டம்மி பீஸ்’சான நாயகனை அலட்சியம் செய்கிறாள். நாயகி எதையோ தேடி அலுத்து ஓய்ந்திருக்கும் வேளையில் சத்தம் போடாமல் நாயகி அருகில் சென்று நிற்கும் நாயகன், தன் பெயரை சொல்கிறது. நாயகியும் சிரித்துக் கொண்டே “ஈவா”(EVE) என தன்னை அறிமுகம் செய்கிறது.

புழுதி புயலில் இருந்து நாயகியை மீட்க தன் வசிப்பிடத்திற்கு அழைத்து செல்கிறது வாலீ. தான் சேமித்த பொருட்களை எல்லாம் காட்டி ஈவாவின் கவனத்தை பெற துடிக்கிறது. துளிர் விட்டிருக்கும் ஒரு சின்னஞ்சிறு செடியை வாலீ ஈவாவிடம் காட்ட, அதை வாங்கிக் கொள்ளும் ஈவா மூர்ச்சையாகிறது. வாலீ அதன் பிறகு என்னம்மோ செய்தும் ஈவாவின் மூர்ச்சை தெளியாததால், ஈவாவை பத்திரப்படுத்தி விட்டு மீண்டும் வேலைக்கு செல்கிறது வாலீ.  அந்த சமயம் பார்த்து வரும் விண்களம் ஈவாவை எடுத்து செல்கிறது. ஈவாவின் மீதுள்ள காதல் காரணமாக வாலீ விண்கலத்தில் கடைசி நொடியில் போய் தொற்றிக் கொள்ளும்.

விண்களம் ‘அக்ஸியம்'(AXIOM) என்ற விண் கப்பலிற்கு செல்லும். வாழ தகுதியற்றதாக பூமி மாறிய பிறகு மக்கள் தங்கி இருக்கும் செயற்கையான கோள் தான் அந்த அக்ஸியம் விண்கப்பல். கனவுலோகம் என அழைக்கப்படுவது போல, உழைக்க தேவையே இல்லாத உலகம் அது. பல் தேய்த்து விட, தலை வாரி விட, குடிப்பதற்கு தண்ணீர் எடுத்து கைகளுக்கு தர என அனைத்துமே அங்கு இயந்திரம் தான். இப்படி பூமியை பற்றியே தெரியாத விண்கப்பலின் தலைவன், ஈவா கொண்டு வந்த செடியின் முக்கியத்துவம் பற்றி தெரிந்துக் கொள்ள விரும்புகிறான். அவனுக்கு அது சம்பந்தமான புத்தகம் ஒன்று கிடைக்கிறது. புத்தகத்தையே முன் பின் பார்த்திராதவனுக்கு அது என்னவென்றே தெரியவில்லை. அதே சமயம் ஈவா வைத்திருந்த செடியும் காணாமல் போகிறது. அந்நிய சக்தி என வாலீயை ஒரு குழு தேடி வருகிறது. பூமிக்கு திரும்ப விழையும் விண்கப்பல் தலைவனை, பிரதான கணினி சிறை வைக்கிறது. இந்த குழப்பங்களை எல்லாம் மீறி வாலீ எப்படி தன் காதலை ஈவாவிடம் வெளிப்படுத்தியதா, விண்கப்பல் பூமிக்கு திரும்பியதா, ஈவா காதலை ஏற்றுக் கொண்டாதென தெரிந்துக் கொள்ள படம் பாருங்கள்.

நான் எழுதியிருப்பதை வைத்து படத்தை பற்றி எந்தவொரு தப்பான முடிவிற்கும் வந்து விடாதீர்கள். நகைச்சுவை, காதல், ‘ஆக்ஷன், ‘சையன்ஸ் ஃபிக்ஷன் என படம் சமச்சீரான கலவை என்றாலும் நகைச்சுவையான காட்சிகளோடு சொல்லப்பட்டிருப்பது காதலே. ஈவாவை தொடரும் வாலீ, வாலீயை தேடும் எம்.மோ. , நடக்கவே தெரியாத அக்ஸியம் மக்கள் என படம் நம்மை முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொள்ளும். குடும்பத்தோடு அமர்ந்து அனைத்து வயதினரும் பார்க்க கூடிய படம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது படம். இந்த படத்தில் இடம் பெறும் பாடல், ‘கிராமி’ விருதை பெற்றுள்ளது. ‘ஆஸ்கார் தொடங்கி உலகளவில் சுமார் 47 விருதுகளை பெற்றுள்ளது. ‘கார்ட்டூன் படமாக இருந்தாலும் இயந்திரங்கள் காட்டும் பாவங்கள் செயற்கைத் தனமாக தோன்றாது. “பிக்சார்”(PIXAR)சின் கதை சொல்லும் பாங்கும், தொழில்நுட்ப நேர்த்தியும் மீண்டுமொரு முறை இப்படத்தின் மூலம் நிருபிக்கப்பட்டுள்ளது.

– ஜங்கன்

Leave a Reply