Shadow

தனி ஒருவன் விமர்சனம்

தனி ஒருவன் விமர்சனம்

ஒரு நல்லவனும் ஒரு கெட்டவனும் ஆடும் கண்ணாமூச்சி ஆட்டம்தான் தனி ஒருவன் படத்தின் கதை.

ஐ.பி.எஸ். அதிகாரி மித்ரனாக ஜெயம் ரவி. குற்றங்களைக் கண்டு பொங்கிடும் நல்லவர்; கல்வி கேள்விகளில் வல்லவர்; 24 மணி நேரமும் குற்றங்களைத் தேடியும், அதைப் பற்றியுமே யோசிப்பவர். அதைத் தடுப்பதற்காகவே ஐ.பி.எஸ்.சில் சேருகிறார். மிகச் சிறிய வயதிலேயே குற்றங்களையும், அந்தக் குற்றத்துக்கான காரணங்களையும் செய்தித் தாள்களிலேயே கண்டடையும் தனித் திறமை மிக்கவராகத் தன்னை உருவாக்கிக் கொள்கிறார். நாளடைவில் செய்தித் தாளில் வரும் செய்திகளுக்குப் பின்னால் வேறு உண்மை இருக்கக்கூடும் என்ற புரிதலும், ஒவ்வொரு பெரிய குற்றத்துக்கும் முன் ஒரு சிறு குற்றமிருக்கும் என்ற உண்மையும் அவருக்குப் புரிய வருகிறது. ஆக, 100 குற்றவாளிகளை உருவாக்கும் ஒரே ஒரு பெரிய குற்றவாளியைப் பிடிப்பதுதான் அவர் வாழ்வின் ஒரே லட்சியம்.

சிந்தாமல் சிதறாமல், சிறு சந்தர்ப்பத்தையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் சமார்த்தியசாலி சிறுவன் பழனிச்சாமி. அப்படியொரு சந்தர்ப்பத்தைத் தவறவிடாமல், படித்து, ‘சித்தார்த் அபிமன்யு’ எனும் விஞ்ஞானியாகி, இந்தியாவிலேயே தொழில் தொடங்கி கோடீஸ்வரராகப் பரிணமிக்கிறான். பழனிச்சாமியாக நடித்த சிறுவன், படத்துக்கு அதகளமான ஓப்பனிங் தருகிறான். அதே போலவே, சித்தார்த் அபிமன்யுவாகக் கலக்கியிருக்கும் அரவிந்த் ஸ்வாமி, படத்தை வேறொரு தளத்துக்குக் கொண்டு போய், படத்தை அற்புதமாக முடித்து வைக்கிறார். தமிழ் சினிமாவில் இவ்வளவு அழகான அசத்தலான வில்லன் வந்ததே இல்லையென்றுதான் சொல்ல வேண்டும் (மங்காத்தா அஜித் உட்பட!).

அப்படியென்ன சிறப்பு என்றால்.. தமிழ்த் திரைப்படங்களில் வில்லன் என்பவன் வெட்டுவேன்/குத்துவேன் என கடைசி நொடி வரை வில்லன் கெத்தை தற்காத்துக் கொள்ள கத்திக் கத்தியே நம்மைச் சாகடிப்பான். அல்லது பொசுக்கென்று திருந்தி விடுவான். ஆனால் அரவிந்த் ஸ்வாமி படத்தின் கடைசிக் காட்சியில் படு ஸ்டைலிஷாக, அசால்ட்டாகத் தோன்றி படத்தின் நாயகனாகி விடுகிறார். ஓர் அசலான புத்திசாலி வில்லன் கதாபாத்திரத்தை உருவாக்கி, மொத்த படத்தையும் சாதுரியமாக அரவிந்த் ஸ்வாமி தோளில் வைத்துவிட்டார் இயக்குநர் மோகன் ராஜா. அதற்குத் தோதாக இரட்டையர்கள் சுபாவின் வசனம் படத்துக்கு மேலும் வலு சேர்க்கிறது. 

ஒற்றை நோக்கோடு ஐ.பி.எஸ். அதிகாரியாகும் மித்ரன், அந்த லட்சியத்தை அடைந்து, எதிர்க்க வில்லனில்லாமல் ‘தனி ஒருவன்’ ஆகத் தவிப்பதாக படம் முடிகிறது. மித்ரனின் லட்சியத்தை மெச்சி, முதலமைச்சர் முதல் இறுதிச் சடங்கு செய்யும் ஐயர் வரை அனைவரும் அவருக்கு ஒத்துழைப்புத் தருகிறார்கள். திருநெல்வேலியில் போஸ்ட்டிங் கிடைத்த சுராஜ் ஐ.பி.எஸ். கூட, மித்ரனுக்கு உதவ துப்பாக்கியோடு வந்து விடுகிறார். அதே நேரத்தில், இரண்டே இரண்டு அடியாளை நம்பி ஏமாந்து ‘தனி ஒருவன்’ ஆகிவிடுகிறார் சித்தார்த். என்ன கலர் ஃபைல் சித்தார்த் உபயோகிப்பார் என்று யூகிக்குமளவு தீர்க்கதரிசி மஹிமா எனும் பாத்திரத்தில் நயன்தாரா வருகிறார். படத்தில் இவ்வளவு லாஜிக் ‘பக் (Bug)’-கள் இருந்தும், நாயகன் நெஞ்சில் ஒரு பக் வைத்து, மற்ற அனைத்து பக்-களையும் மறக்க வைத்து விடுகிறார் இயக்குநர். மித்ரன் Vs சித்தார்த்தின் ஆடுபுலி ஆட்டம் படத்தை சுவாரசியமாக்குகிறது.

தனி ஒருவன் – அரவிந்த் ஸ்வாமி.!