
தமிழில் முதுகலைப் பட்டத்தை தஞ்சை பல்கலைகழகத்தில் பெற்றவர் கள்ளப்படத்தின் இயக்குநர் ஜெ.வடிவேல். விகடனில் ஆறு வருடங்கள் (2003 – 2009) நிருபராகப் பணி புரிந்தவர்; பின் இயக்குநர் மிஷ்கினிடம் நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி ஆகிய மூன்று படங்களில் உதவி இயக்குநராகப் பணி புரிந்துள்ளார். புத்தகங்கள் மற்றும் திரைப்படங்களைக் குறித்து மட்டுமே பேசும் வடிவேல் ஒரு நல்ல இயக்குநராக வேண்டுமெனச் சொல்லி தொடக்கம் முதல் உற்சாகமூட்டியுள்ளார் ஆடுகளம் நரேன். ஆக கதை எழுதும்போதே அவரை மனதில் எண்ணி ஒரு கதாபாத்திரம் படைத்துள்ளார் வடிவேல்.
படத்தில் ஒரு முரட்டுத்தனமான போலிஸ்காரராக சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் கவிதா பாரதி நடித்துள்ளார். “நான் பாட்டுக்கும் வண்ணதாசன் கவிதை படிச்சுட்டு, என்னை ரொம்ப மென்மையானவனா நினைச்சுட்டு இருந்தேன். அது வெளியில் தெரியாம இருக்க பெரிய மீசை வச்சேன். ஆனா இயக்குநருக்கு முரட்டுத்தனமாகத் தெரிந்துள்ளேன். நானும் உதவி இயக்குநராக இருந்து படம் செய்ய முயன்று கொண்டிருப்பவன்தான். சினிமாவில் உபயோகப்படுத்தப்படும் புது தொழில்நுட்பங்களைப் பற்றித் தெரிஞ்சுக்கலாம்னு ஒத்துக்கிட்டேன். இந்த டீமில் அனைவருமே தொழில்நுட்பக் கலைஞர்கள். நடிகர்களே இல்லை. மேக்கப் கூட கதாபாத்திரங்களுக்கு இல்லை. போலித்தனங்கள் இல்லை. தமிழ் பேசும் ஆச்சரியமான ஹீரோயின் கூட உதவி இயக்குநர் போல்தான் வொர்க் பண்ணாங்க. (ஆடுகளம் நரேனைப் பார்த்து) நான் உங்களை நடிகராக கணக்கில் எடுக்கலை. தொழில்நுட்பக் கலைஞராகத்தான் பார்க்கிறேன்” என்றார் கவிதா பாரதி.
கள்ளப்படத்தின் ஒரே பெண் கதாபாத்திரம் லக்ஷ்மி பிரியா மட்டுமே! சுட்ட கதை எனும் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். பலரும் ஏற்றுக் கொள்ளத் தயங்கிய கதாபாத்திரத்தை, விரும்பி ஏற்றுள்ளார் லக்ஷ்மி பிரியா. நிறைய முக்கியத்துவம் கொடுத்து டீட்டெயிலிங் செய்து இயக்குநர் மிகவும் ரசித்து எழுதின லீனா என்ற அந்தக் கதாபாத்திரம் கொஞ்சம் நெகட்டிவ் அம்சமுடையது. படத்தின் நாயகியாக இல்லாவிட்டாலும் நடிகையாகத் திறமையை வெளிப்படுத்த ஏதுவான கதாபாத்திரம் எனச் சிலாகித்தார் லக்ஷ்மி பிரியா. வேறு பெண்களே இல்லாத நிலையில், ஆண்கள் மத்தியில் படப்பிடிப்பின் பிளஸ் மைனஸ் பற்றிக் கேட்ட பொழுது, “நியூட்ரல்தான். வேலைக்கு என்ன வந்துவிட்டு ஆணென்ன பெண்ணென்ன? மேலும் மேக்கப் ஆர்டிஸ்ட் என மொத்தம் நாங்க 3 பெண்கள் இருந்தோம். எனக்குத் தரப்பட்ட வேலையைச் செய்தேன். அவ்வளவுதான்” என தெளிவாகப் பதிலளித்தார் லக்ஷ்மி பிரியா.
சிறுவயது முதலே ஷூட்டிங் பார்க்கும் ஆசையோடு இருந்தவர் படத்தின் தயாரிப்பாளரான ஆனந்த் பொன்னிறைவன். நியூசிலாந்தில் மருத்துவராகப் பணி புரியும் அவரே நாயகன் போலுள்ளார். ஒளிப்பதிவாளரையே ஒளிப்பதிவாளராகவும், படத்தொகுப்பாளரையே படத்தொகுப்பாளராகவும், இசையமைப்பாளரையே இசையமைப்பாளராகவும் நடிக்க வைத்து தானே இயக்குநராக நடித்திருக்கும் ஜெ.வடிவேல்.. தயாரிப்பாளராக பொன்னிறைவனை நடிக்க வைக்காமல் ஆடுகளம் நரேனை நடிக்க வைத்துள்ளார். “எனக்கு தயாரிப்பாளராகக் கூப்பிட்டு வாய்ப்புக் கொடுத்தார். ஆனால், என்னை நடிக்க வைக்கணும்னு அவருக்குத் தோணலை போல!” எனச் சிரித்தார் இறைவன் ஃப்லிமிஸின் ஆனந்த் பொன்னிறைவன். ஷூட்டிங் பார்க்கும் அவரது ஆசை அவரே தயாரித்த படத்தில்தான் நிறைவேறியுள்ளது.
தனது முதற்படமான கள்ளப்படத்தின் கதையைப் பற்றி வடிவேல் கூறும் பொழுது, “இது என் கதை அல்ல. சினிமாக்காக வாய்ப்புத் தேடிய அனைத்து உதவி இயக்குநர்களின் கதை” என்கிறார். மற்றவர்கள் நல்ல படம் எனச் சொல்வதற்காக வைக்கப்பட்ட தலைப்பே அன்றி, படத்தின் ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்து பாஸிட்டிவாகக் கொண்டு வந்துள்ளோம் என்றார் இயக்குநர்.