முதல் முறையாக இளைய தளபதி விஜய்யின் படத்திற்கு இசையமைத்திருக்கிறார் ஜீ.வி.பிரகாஷ். மதராசபட்டினம், தெய்வத்திருமகள், தாண்டவம் படத்தினை தொடர்ந்து தலைவா படத்திலும் இயக்குனர் விஜயுடன் கை கோர்த்துள்ளார்.
ஜீ.வி.பிரகாஷ், விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை தன்னுடைய இசையால் பூர்த்தி செய்திருக்கிறாரா என்று பார்ப்போம்.
நா.முத்துக்குமாரின் வரிகளில் படத்தில் மொத்தம் 5 பாடல்கள்.
1. பாடல் – தமிழ் பசங்க
பாடியவர்கள் – பென்னி டயால், ஷீஷே – சைகோ யூநிட்
தமிழனாக இருப்பதின் பெருமையை வெளிப்படுத்தும் பாடல். வெஸ்டெர்ன் இசையில் ஒரு உற்சாகமான பாடல். இப்படத்தில் “டான்சராக” நடிக்கும் விஜய்க்கு, தன்னுடைய நடனத்தை வெளிப்படுத்த ஏதுவாக இப்பாடல் இருக்கும் என்று தோன்றுகிறது.
2. பாடல் – யார் இந்த சாலையோரம்
பாடியவர்கள் – ஜீ.வி பிரகாஷ், சைந்தவி
“யார் இந்த சாலையோரம்”, காதல் ஜோடி ஜீ.வி மற்றும் சைந்தவி குரலில் ஒரு மென்மையான பாடல். நா.முத்துக்குமாரின் அழகிய வரிகள் பாடலுக்கு வலு சேர்க்கிறது. இப்பாடலுக்காக ஜி.வி பிரகாஷ் கூடுதல் கவனம் செலுத்தியிருப்பது போல் தெரிகிறது. காரணம் விஜய்யா அல்லது சைந்தவியா? எப்படியோ பாடல் அருமையாக வந்துள்ளது.
3. பாடல் – வாங்கண்ணா வணக்கம்ங்ணா
பாடியவர்கள் – விஜய்,சந்தானம்
விஜய் தன்னுடைய 25 ஆவது பாடல் மூலம் ரசிகர்களுக்கு சரியான விருந்து படைத்துள்ளார் என்று தான் கூற வேண்டும். உடன் சந்தானம் தன்னுடைய குரலால் மேலும் பலம் சேர்த்துள்ளார். “நடனம்? சாங்கா” என்று சந்தானம் கேட்கும் அந்த ஸ்லாங் அருமையாக உள்ளது.
பாடலின் ஆரம்பம் முதல் முடிவு வரை அமோகமான சாங்குங்கண்ணா.
4. பாடல் – சொல் சொல்
பாடியவர்கள் – விஜய் பிரகாஷ், அபே ஜோத்புர்கர், மேகா
சொல் சொல் பாடல் விஜய் பிரகாஷ் மற்றும் அபே ஜோத்புர்கரின் (கடல் படத்தில் மூங்கில் தோட்டம் பாடலை பாடியவர்) குரலில் ஒரு ஃபாஸ்ட் பீட்.இப்பாடல் விஜயின் நடனத்திற்க்காகவே இசையமைதுள்ளது போல் இருக்கிறது.
5. பாடல் – தி எக்ஸ்டசி ஆப் டான்ஸ் (இன்ஸ்ட்ருமெண்டல்)
வயலின் மற்றும் ப்ளூட் கருவியை மையமாக கொண்ட இந்த இசையை முடிவின்றி கேட்டுக் கொண்டே இருக்க தோன்றுகிறது.
6. பாடல் – தலைவா தலைவா
பாடியவர்கள் – ஹரிசரன், பூஜா, ஜியா
தளபதி தளபதி, ஒரு மாஸ் பாடல். அரசியலை நோக்கி ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும் விஜய்க்கு, நா.முத்துக்குமாரின் வரிகளில் வந்துள்ள இப்பாடல் பலமே.
விஜய் ரசிகர்களின் இதயத்தை ஜீ.வி பிரகாஷ் வென்றுள்ளார் என்பதில் சந்தேகமில்லை. யார் இந்த சாலையோரம், சொல் சொல் மற்றும் வாங்கண்ணா வணக்கம்ங்கண்ணா பாடல்கள் வெற்றி பாடல்களே.
மொத்தத்தில் மாஸ்ஸ்ங்ணா.
தலைவா – 4/5
– இரகுராமன்